இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


மரணச் சடங்கும் சமய அனுட்டானங்களும்

Go down

மரணச் சடங்கும் சமய அனுட்டானங்களும்  Empty மரணச் சடங்கும் சமய அனுட்டானங்களும்

Post by ஆனந்தபைரவர் Sat Dec 18, 2010 3:54 pm

இவ் நிலையற்ற பூவுலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் இறப்பது நிச்சயம் என்பது நாம் எல்லோரும் அறிந்த உண்மை. ஒருவர் இறந்தபின் அவர் எம்மதத்தைச் சார்ந்தவரோ அம் மதத்தின் விதிகளுக்கு அமைய அந்த ஆன்மாவைத் தாங்கி நின்ற உடலை அந்த ஆன்மா சாந்தி அடைவதற்காக கிரியைகள் செய்யப் பெற்று; தகனம் செய்யப் பெறுகின்றன அல்லது அடக்கம் செய்யப் பெறுகின்றன.

புலம் பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் இளம் சந்ததியினர் தெரிந்து கொள்வதற்காக இது பற்றிய விபரங்களை (நாம் அறிந்து கொண்டுள்ளன வற்றை) இங்கு பகிர்ந்து கொள்கின்றோம். இந்துக்களாகிய நாம் ஒருவர் இறந்தபின் செய்யும் கிரியைகள் பற்றி அறிந்திருத்தல் மிகவும் முக்கியமாகின்றது.

ஒருவர் நோய்வாய்ப் பட்டு, அல்லது (முதிர்ச்சி) வயோதிபம் அடைந்ததினால், சுயநினைவற்று இருக்கும் தறுவாயில் (சேடம் இழுக்கும் நிலையில்); அந்த ஆன்மா இறைவனையே எண்ணும் படியான சூழ்நிலையை உருவாக்குவதற்காக அவரைச் சூழ்ந்து நின்று பஐனைகள் (தோத்திரங்கள்) பாடுவார்கள். அனுபவம் மிக்கவர்கள், அல்லது நாடிபிடித்து பாப்பவர்கள் ஜீவன் பிரியும் நிலையை உணர்ந்தால் "ஜீவன் போகப் போகுது" உரிமைகாரர் பால் பருக்குங்கள் என்று கூறுவர். அப்போது அவருக்கு தீர்த்தம் அல்லது பால் பருக்கி அவருடைய வலது காதில் சமயதீட்சை பெற்ற ஒருவர் மூலம் "பஞ்சாட்சர மந்திரம்" ஓதுவார்கள். இவற்றை நாம் செய்யும் போது பிரிய இருக்கும் ஆன்மாவானது இவ்வுலகத்தில் பெற்றிருந்த ஆசாபாசங்களை மறந்து, இறைநாட்டம் கொண்டதாகி இறைவனை நாடி நிற்கும். அந்த நிலையில் ஜீவன் (ஆன்மா) பிரிந்தால் இறைவனின் கடாட்சம் அந்த ஆன்மாவுக்கு கிடைக்கும் எனபது ஐதீகம். ஆனால் நாம் அவர்மீது கொண்ட அன்பு, பாசத்தினால் ஆன்மா பிரியும் தறுவாயிலும்கூட அழுது, புலம்பி, அவரை உறவு முறை சொல்லி அழைத்து; அந்த ஆன்மாவை நின்மதியாக இறைவனை நாட விடாது நிலைகுலையச் செய்யும் பெரும் தவறைச் செய்து விடுகின்றோம். இப்படி செய்வதைத் தவிர்த்து நாம் எல்லோரும் அந்நேரத்திலாவது எம் குலதெய்வங்களை வழிபட்டு அந்த ஆன்மாவின் ஈடேற்றத்திற்காக பிரார்தனை செய்தல் மிகவும் முக்கியமானதொன்றாகும்.

சைவ மதத்தைச் சார்ந்த ஒருவர் இறந்து விட்டால் அவருடைய ஆன்மா சாந்தி அடைவதற்காக பல கிரியைகளை நாம் செய்கின்றோம்.

இறுதிக் கிரியைகள்:
இக் கிரியைகள் இடத்திற்கு இடம் வித்தியாசமான முறைகளில் செய்யப் பெறுகின்றன. சாதாரணமாக ஒரு பொதுமகன் இறந்து விட்டால். அவர் உடம்பை (பூதவுடலை) தகனம் செய்வார்கள். அவர் சமய தீட்சை பெற்று ஆசார சீலராக வாழ்ந்திருந்தால் சமாதியும் இருத்துவார்கள்.

அனேகமாக வெளிநாடுகளில் ஒருவர் இறந்தால் அவரின் பூதவுடலை இரண்டு அல்லது மூன்று தினங்கள் பார்வைக்கும், அஞ்சலிக்கும் வைத்தபின், இறுதிக் கிரியைகள் செய்து; மின் அல்லது காஸ் போறணையில் எரியூட்டி தகனம் செவது வழக்கமாக உள்ளது. ஆனால் அவரின் ஆன்மா சாந்தி அடைய செய்யப்பெறும் கிரியைகள் எல்லாம் சைவ ஆகம விதிகளுக்கு அமைய இடம் பெறுகின்றன. இறந்தவர் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவராயின் அவர் அரசனாக இருந்தாலும் சரி ஆண்டியாக இருந்தாலும் சரி பள்ளிவாசலில் இருக்கும் பூதவுடல் எடுத்துச் செல்லும் தொட்டிலில்தான் பூதவுடலை மைய்யவாடிக்கு (இஸ்லாமியர்-இடுகாடு) எடுத்துச் செல்வார்கள் அத்துடன் பூதவுடல் உயிர் பிரிந்த 24 மணி நேரத்திற்குள் அடக்கம் செய்யப் பெற்று விடும். அது அவர்களின் சமய கலாச்சாரமாகும்.

சைவசமயத்தைச் சேர்ந்த ஒருவர் அகால மரணமடைந்தால் எதுவித சமய கிரியைகளும் செய்யாது, தோத்திரம் பாடி கற்பூரம்தீபம் ஏற்றிய பின் தகனம் செய்கின்றார்கள். ஆனால் தற்பொழுது அந்தநிலை மாறி எல்லாச் சந்தற்பங்களிலும் சமய கிரியைகள் செய்கின்றனர்.

ஒருவர் இறக்கும் போது ஆன்மாவானது உடம்பில் உள்ள ஒன்பது வாசல்களில் ஏதாவது ஒரு வாசல் மூலம் பிரிவதாக கூறப்பெறுகின்றது. இதனை இறந்தவுடன் ஒருவரின் ஏதோ ஒரு வாயில் ஈரமாக இருப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

வீட்டில் ஒருவர் இறக்க நேரிட்டால்; இறந்த உடன் பூதவுடலைச் சுத்தம் செய்து (குளிப்பாட்டி), விபூதி பூசி ஈமைக்கிரியைகள் ஆரம்பிக்கும் வரையும் வீட்டின் ஒரு பகுதியில் தெற்குப் பக்கம் தலை இருக்கும்படியாக கட்டிலில் படுக்க வைத்து தலைமாட்டில் குத்துவிளக்கேற்றி வைப்பது வழக்கம். உறவினர்கள் யாராவது தூர தேசத்தில் இருந்து வரும் வரை காத்திருப்பதாயின் அப்பூதவுடல் பழுதடையாது இருக்க உரிய மருந்துகள் இட்டு பாதுகாத்து வைப்பார்கள். சில சந்தற்பங்களில் பூதவுடல் வீக்கமடையும். அதனைத் தவிற்பதற்காக ஒரு பெரிய பாத்திரத்தில் நீரை அல்லது ஒரு சாக்கில் நெல்லை கட்டிலுக்கு கீழே வைப்பார்கள். வெளிநாடுகளிலும், பெரிய பட்டினங்களிலும் இறந்தவரின் பூதவுடல் மலர்சாலையில் (Funeral Home) வைக்கப் பெறுவதால் அவர்களே அதனைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள்.

சாதாரணமாக பொதுமகன் ஒருவனின் ஈமைக் கிரியைகளை சைவக் குருமாரே செய்து வருகின்றனர். ஆனால் பிராமணருடைய இறுதிக் கிரியைகளை மாத்திரம் பிராமணரக் குருமாரே செய்கின்றார்கள். இறுதிக் கிரியையின் போது இறந்தவரின் நெருங்கிய இரத்த உறவினர்கள் கடமைகளைச் (கிரியைகளை) செய்வது வழக்கம். இறந்தவர் தந்தையாயின் அவரின் மூத்தமகனும், தாயாயின் இளையமகனும், சில சந்தற்பங்களில் எல்லா ஆண்மக்களும் இணைந்து கடமைகளைச் செய்வார்கள். உடலுக்கு செய்யும் இறுதிக்கிரியைகள் மூலம் அந்த ஆன்மாவானது அந்த உடலைத் தாங்கி நின்ற காலத்தில் செய்த தீவினைகள் நீங்கப் பெற்று சாந்தி அடைவதாக ஐதீகம்.

அதனால் ஆன்மாவின் ஈடேற்றம் கருதி பயபக்தியோடு இறைவனை பிரார்தனை செய்யக் கூடியவர்களாக ஆண் பிள்ளைகளையும், இரத்த உறவினர்களையும் அனுமதிக்கின்றனர். பெண் பிள்ளைகளைப் பொறுத்தமட்டில் அவர்களை சுடுகாடு செல்வதற்கு எமது சமூகம் அனுமதிக்காத காரணத்தினால் கடமை செய்வதற்கு அனுமதிப்பதில்லை. ஆனால் அவர்கள் எல்லாப் பூஜைகளிலும் கலந்து இறந்தவருக்காக பிரார்த்தனை செய்வார்கள். தற்காலத்தில் ஆண்பிள்ளைகள் இல்லாத சில குடும்பங்களில் பெண்களும் கடமைகள் செய்து உறவினர் அல்லது இரத்த உறவு உள்ள ஒருவர் மூலம் தகனக் கிரியையை நிறைவேற்றுகின்றனர்.

கிரியைகள் இரண்டு வகைப்படும். ஒன்று சுபகிரியை மற்றது அபரக்கிரியை. இறந்ததன் பின் செய்யப்படும் சடங்குகள் (இறுதிக்கிரியை) அபரக்கிரியை என அழைக்கப்படுகின்றது.

சுபகிரியைகள் செய்யப் பெறும் போது ஆராத்தி, தீபங்கள் வலதுபக்கமாக உயர்த்தி செய்யப் பெறுகின்றன. ஆனால் அபரக்கிரியை செய்யும் போது மறுதலையாக இடதுபக்கம் உயர்த்தி செய்யப் பெறுகின்றன. கடமை செய்வோருக்கு பூநூல் வலது பக்கத் தோழில் அணிவிக்கப் பெறுகின்றது (குருமார் இடதுபக்கத் தோழில் அணிவர்). ஆனால் தற்பை வழக்கம் போல் வலது மோதிர விரலில் அணிகின்றனர். அனேகமாக சுபகிரியையின் போது கும்பத்திற்கு வைக்கப் பெறும் மாவிலைகள் 5-7-9 ஆகவும் அபரக்கிரியையின் போது 3 மாவிலைகள் ஆகவும் இருக்கும்.

ஆன்ம ஈடேற்றத்திற்காக; சூர்ணோத்சவம் (மரணச்சடங்கு), தகனம், அஸ்தி சஞ்சயனம் (காடாற்று), அந்தியேட்டி, பாசாணபூசை, உருத்திர பலி, நவசிராத்தம், ஏகோத்திர விருத்தி சம்கிதை, இடபதானம், ஏகோதிட்டம், மாசியம், சோதகும்பசிராத்தம், சுவர்க்கமாதேயம், வைதரணிகோதானம், சபிண்டீகரணம் (வீட்டுக்கிரியை) சிராத்தம் முதலிய கிரியைகள் நடைபெறுகின்றன.

மரணச் சடங்கு தொடக்கம் பாஷாணபூசை வரையுள்ள கிரியைகளை சைவ குருமாரும்; சபிண்டீகரணம் சிராத்தம் முதலிய கிரியைகளை பிராமண குருமாரும் செய்து வைக்கிறார்கள். விளக்கமாக கூறுவதாயின் மரணச்சடங்கு முதல்பாஷாணபூசை வரையுள்ள பூசைகளை அபரக்கிரியைகள் என்றும், சபிண்டீகரணம, சிரார்த்தம் முதலியன சுபகிரியைகள் என்றும் அழைக்கப் பெறும்.

இதிலே தகனத்துக்கு முன்னர் இறந்தவரின் உடலுக்கு விசேட அந்தியேட்டி, நிருவாண அந்தியேட்டி ஆகியவை இடம்பெறும். மாமிச உணவு உண்ணாத, சமய தீட்சை பெற்றவரின் உடலில் (பூதவுடலில்) சமய அந்தியேட்டி தகனம் செய்ய முன் செய்யப்படுவதே வழக்கம். இந்த கிரியைகளை செய்யும் கடமைக்காரர் இவை பற்றிய முழுமையான விளக்கத்தை தெரிந்து கொண்டு செய்தால் தான் முழுமையான நன்மை கிடைக்கும்.

மற்றைய சமயத்தவர்கள் (இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள்) இறுதிக் கிரியையின் போது இறந்தவரின் பூதவுடலை அவர்களுடைய ஆலயங்களுக்குள் எடுத்துச் சென்று பிரார்தனை செய்கிறார்கள் பிரார்த்தனை நிறைவு பெற்றபின் பூதவுடலை நல்லடக்கம் செய்வார்கள். ஆனால் இந்துகள் இறந்தவர்களுடைய பூதவுடலை "ஆசூசம்" எனக் கூறி ஆலயத்தினுள் அனுமதிப்பதில்லை. அதனால் கிரியை செய்யப் பெறும் இடத்தை ஆலயத்தைப் போல் தூய்மையானதாக்கி அங்கேயே பூசைகளையும், பிரார்த்தனைகளையும் செய்கின்றார்கள்.

மரணக்கிரியை நடைபெற இருக்கும் இடத்தில் (முற்றத்தில்) மண்டபம் அமைத்து வெள்ளை கட்டி, மாவிலை, தோரணம், பூக்களால் அலங்கரித்து அந்த இடத்தினை சாணத்தினால் (சுமங்கலிப் பெண்) மெழுகுவார்கள்.

வெளிநாடுகளில் அதற்கென அமைக்கப் பெற்ற மண்டபங்களில் நடைபெறுவதால், அவ்விடத்தை தண்ணீர் தெளித்து புனிதமாக்கிய பின் கிரியைகள் செய்யத் தொடங்குவார்கள், பூதவுடல் மலர்சாலையைச் சேர்ந்தவர்களால் சுத்தன் செய்யப்பெற்று, அலங்கரிக்கப் பெற்றிருக்கும் அதனால், இங்கு குளிப்பாட்டுதல், அபிழ்ஷேகம் செய்தல் போன்றன செய்யப் பெறுவதில்லை, பதிலாக பஞ்சகவ்விய நீரினைச் தெளித்து பூதவுடலை புனிதப் படுத்துவார்கள்.

சைவ குரு மரணக் கிரியைகளை ஆரம்பிக்கும் போது முதலில்; அங்கு உருத்திரகும்பமும் (நடுவில்), அதனை சுற்றி அட்ட திக்கு பாலகர்களுக்கான கும்பங்களும், மேற்குப் பக்கத்தில் புண்ணியாகவாசன கும்பமும், கிழக்குப் பக்கத்தில் உரல், உலக்கை, மணி, மயானத்துக்கு கொண்டு செல்லும் மண்குடக் கும்பம் வைத்து பூசைகளை ஆரம்பிப்பார். கிரியை (கடமை) செய்பவர் மொட்டை வழித்து, தோய்ந்து (முழுகிய) பின் புத்தாடை தரித்து ஆசாரசீலராக விபூதி தரித்திருத்தல் வேண்டும். அவர் அன்றைய தினம் நோன்பு இருத்தல் அவசியம்.

கிரியைகள் செய்வதற்கு கும்பங்கள் வைத்து கும்ப பூஜைகள் ஆரம்பமானதும், பூதவுடலை ஒரு பூநூல்மூலம் கும்பங்களுடன் தொடர்பு படுத்தி அதனை அக்கினியுடன் சங்கமிக்கச் செய்யப் பெறுகின்றது. கும்ப பூசைகள் நிறைவு பெற்றதும் அக்கினி கோமம் வளர்க்கப் பெறுகின்றது. அப்போது பூதவுடல் (குளிப்பாட்டல்) அபிஷேகம் செய்யப் பெறும். வீட்டின் தென் புறத்தில் வடக்கு நோக்கியவாறு பூதவுடலை இருத்தியோ அல்லது தலை தெற்குப் பக்கம் இருக்கும் வண்ணம் கிடைத்தியோ அபிஷேகம் செய்வார்கள்.

அதன் பின்னர் கடமை செய்பவர் அரப்பு, எண்ணெய் முதலியவற்றை சிரசில் வைக்க வேண்டும். பின்னர்; அரிசிமா ஒரு பாத்திரத்தில் நீரில் கரைத்து அபிழ்ஷேகம் செய்யப் பெறும், இது போல் மஞ்சள் மா, அபிஷேகக் கூட்டும் ஒரு பாத்திரத்தில் நீரில் கரைத்து அபிஷெகம் செய்யப் பெறும். அதன் பின் பால், தயிர், இளநீர் முதலியவற்றால் அபிஷேகம் செய்வார்கள். கடமை செய்பவர் மேற்கு முகமாக நின்று கீழிருந்து (கால்மாட்டில் ஆரம்பித்து) மேலாக (தலைவரை) அவரின் புறங்கையினால் வேறு ஒருவர் உதவியுடன் இந்த அபிஷேகம் செய்வார். பூதவுடல் பழுதடைந்த அல்லது அபிஷேகம் செய்ய முடியாத நிலையில் இருந்தால் அபிஷேகத் திரவியங்களை பூதவுடல் மீது தெளித்து விடுவார்கள்.

அதன் பின்னர்; கும்ப அபிஷேகம் நடைபெறும். பன்னீர் போன்ற வாசனைப் பொருட்கள் முதலியவற்றை சிரசிலே சாத்த வேண்டும். பின்னர் பூதவுடலை அலங்கரித்து மண்டபத்துக்கு கொண்டு வந்து தெற்கு பக்கமாக தலைப்பகுதி இருக்கக் கூடியதாக கட்டிலை வைப்பார்கள். அதன் பின்; திருநீறு பூசைப் பெற்று பூசைகள் செய்வார்கள். கடமை செய்பவரே பூதவுடலுக்கு தூப தீபம் காட்டி பூசைகளைச் செய்வார். அதன் பின் அறுகு, மஞ்சள் போடி போன்றனவற்றை உரலில் இட்டு மணியடித்து பத மந்திரம் சொல்லி மூன்று, அல்லது எட்டுத்முறை இடித்த பின்பு, திருப்பொற்சுண்ணம் இருபது பாடல்களும் பாடி, ஒவ்வொரு பாடலுக்குன் ஒருமுறை அல்லது மூன்று முறை சுண்ணமிடிப்பார்கள். சுண்ணமிடித்து சுண்ணப்பொடியும் சேர்த்து பூதவுடலுக்கு அபிஷேகம் செய்யப் பெறும். அனேகமாக கண்ணீல் அப்பி விடுவது வழக்கம்.

பெண்கள் சுமங்கலியாக இறப்பதை ஒரு பெரிய பேறாக கருதுகின்றனர். சுமங்கலியாக இறப்பது என்பது வயோதிபமடைந்து, கணவருக்கு முதல் இயற்கை மரணம் எய்துதலைக் குறிக்கும். சுமங்கலியாகவே பூவோடும், பொட்டோடும் இறக்கும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அதுவும் இறைவன் கொடுத்த வரம் எனக் கூறுகின்றனர். கணவனையே கண்கண்ட தெய்வமாக மதித்து நடப்பவர்களுக்கு இப் பேறு சுலபமாக கிடைத்து விடுகின்றது என நம்புகின்றனர்.

கணவன் மனைவிக்கு முதல் இறக்க நேரிட்டால்; பூதவுடல் குளிப்பாட்டும் போது மனைவியையும் குளிப்பாட்டி, வெள்ளைச் சீலை அணிவிக்கப் பெறும். இறுதிக் கிரியையின் இறுதிக் கட்டமாக தானம் வழங்கள் நடைபெறு, அப்போது ஊர் ஆலயங்களுக்கு இறந்தவரின் பெயரால் தானம் வழங்கப் பெறும். அதனை அடுத்து மனைவி; கணவனுக்கு இறுதியாக மலர் அஞ்சலி செய்வார். அதன் போது மனைவி மலர்களைக் கொண்டு மூன்றுமுறை பூதவுடலை இடம் வந்து மலர்களை பூதவுடலுக்கு சமர்ப்பித்து வீழ்ந்து வணங்குவார். இச் சந்தற்பத்தில் கணவனால் கட்டப் பெற்ற புனிதமான தாலியானது ஒரு சுமங்கலிப் பெண்ணால் கழற்றப் பெற்று கணவனின் நெஞ்சில் வைக்கப் பெற்று இறுதிக் கிரியைகள் நிறைவு செய்வார். அன்று முதல் அந்தப் பெண் நல்ல காரியங்களை முன்நின்று செய்வதற்கு அருகதை அற்றவள் என ஒதுக்கப் பெற்று விடுவாள். ஆதி காலத்தில் கணவனை இழந்த மனைவியை கணவரின் சிதையில் வைத்து உயிரோடு எரித்து விடுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. சில பெண்கள் தானாகவே முன் வந்து உடன்கட்டை ஏறுவார்கள் பலர் ஊர்மக்களின் வற்புறுத்தலில் அதனைச் செய்துள்ளனர். இந்நிலை தற்போது மாற்றம் அடைந்து அப்பெண் இளமையானவளாயின் மறுமணம் செய்தும் வைக்கின்றனர்.

சுண்ணம் இடிக்கும் பொழுது இறந்தவரின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் உட்பட உரித்துடைய சந்ததிக்காரர்கள் பந்தம் பிடிப்பார்கள். வெளி நாடுகளில் அதற்கான வசதிகள் இல்லாத காரணத்தினால் பந்தத்திற்குப் பதிலாக ஊதுபத்தியைப் பிடித்து இறந்தவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்திப்பார்கள். அத்துடன் உரிமைக்கார பெண்களும் மலர் சார்த்தி இறுதி அஞ்சலியை செலுத்துவர். பின்னர் பெண்கள் வாய்க்கரிசி இட்ட பின், பூதவுடலின் வாய்,கை,,கால்,விரல்கள் ஆகியவற்றைக் கட்டி பூதவுடலை வஸ்திரத்தினால் மூடி பாடையில் வைத்துக் கால் முன்பக்கமாக இருக்கும் படி வப்பார்கள். அந்த சமயத்திலும் உறவினர்களான பெண்கள் மூன்றுமுறை பாடையை இடப்பக்கமாக மர்படித்துச் சுற்றிய பின் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்து ஒப்பாரி வைத்து அழுவார்கள். அதன் பின் பறை மேளம், சங்கு வாத்தியங்களுடன் பூதவுடலை மயானத்துக்கு எடுத்துச் செல்வார்கள். கொள்ளி வைக்க இருப்பவர் (கடமை செய்பவர்) சந்தணக்கட்டையில் மூட்டப்பெற்ற நெருப்புச் சட்டியுடன் இடது தோழில் மண்பானை கும்பத்துடன் பூத உடலுக்கு முன்னே செல்ல (சில சந்தற்பங்களில் ஊரில் உள்ள புரோகித பாபர் கொள்ளிச் சட்டியை எடுத்துச் செல்வார்). ஆண் உரிமையாளர்கள் பிரேதத்தின் பின் புறம் செல்வார்கள்.

மயானத்தை அடைந்ததும் மயானத்தில் விறகுகள் அடுக்கி தயார் செய்யப் பெற்ற சிதையை இடப் பக்கமாக ஒருமுறை அல்லது மூன்று முறை சுற்றிய பின் பாடையை இறக்கி பூதவுடலை தலைப் பகுதி தெற்கும் திசையில் இருக்கும் படி கிடத்தல் வேண்டும். அனேகமாக சிதை அடுக்கும் போது காற்று வீசும் திசையைத்தான் கவனிப்பார்கள். அதனால் சரியாக வடக்குத் தெற்காக சிதை அமையாது போகலாம். சிதையில் பூதவுடல் வைக்கப் பெற்றதும் பூதவுலில் கட்டிய கட்டுகள் எல்லாம் அவிழ்கப் பெறூம், அத்துடன் பூதவுடல் ஆணுடையதாயின் அரை நாண் (அறுநாக்கொடியும்) அவிழ்கப் பெற்று அவர் பிறக்கும் போது இருந்தது போல் சுதந்திரம்மாக்கப் பெறும். ஆனால் மானத்தைக் காப்பதற்காக அவருக்கு அணிவித்த உடைகள் கழற்றுப் பட மாட்டாது. அதன் பின் உரிமைகாரர் வாய்க்கரிசி இடுவார்கள். பின் கடமை செய்பவர் இடது தோளில் மட்குடக்கும்பதைத் தாங்கியவாறு சிதையை இடப்பக்கமாக சுற்றி வந்து குடத்தை தலைப்பக்கத்தில் வைத்து கும்ப நீர், அரிசி, பவுன் அல்லது காசுடன் வாய்க்கரிசியிடுவார். அதன்பின் பூதவுடலின்மேல் விறகுகட்டைகள் அடுக்கப்பெறும். அப்போது நெஞ்சுக்கு நேராக ஒருபெரிய கட்டையை வைப்பார்கள். அதை நெஞ்சாங்கட்டை என்று அழைப்பது வழக்கம். பூதவுடல் நெருப்பில் எரியும்போது முன்பக்கமாக வளைந்து கொள்ளும். அதனைத் தடுப்பதற்காகவே மொத்தமான நெஞ்சாங்கட்டையை வைக்கிறார்கள்.

அதன் பின்; முன்போல மண்பாலைக் கும்பத்தினை இடதுபுற தோளில் வைத்துக் கொண்டு சந்தணக் கொள்ளிக் கட்டையை பின்பக்கமாக ஏந்திய வண்ணம் கடமை செய்பவர் மீண்டும் இடப்புறமாக மூன்று முறை சுற்றி வருவார். ஒவ்வொரு சுற்றின் போதும் ஒருவர் (தலைமுடி அலங்கரிப்பாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர்) மண்பானைக் கும்பத்தில் கத்தி நுனியினால் துவாரமிட்டு; கும்ப நீரினால் சிதைக்கு அபிழ்ஷேகம் செய்வார்கள். மூன்றாவது சுற்று முடிவில் கடமை செய்பவர் சிதையின் தலைப்பாகத்தில் தெற்கு முகமாக (சிதையின் எதிர்ப் பக்கம் பார்த்த வண்ணம்) சிதையப் பார்க்காது நின்று பிரணவ மந்திரத்தை சொல்லிக் கொண்டு சந்தணக் கட்டைக் கொள்ளியை சிதையில் (பிரேதத்தின் சிரசில்) வைத்து குடத்தை முன்புறமாக உடையும்படி போட்டு விடுவார். பின்பு அவர் கால்மாட்டிற்குச் சென்று பவித்திரம்(தற்பை), பூனூல் ஆகியவற்றை கழற்றி சிதையில் போட்டு வணங்கிய பின் திரும்பி பாராமல் செல்வது வழக்கம்.

அனேகமாக கடமை செய்தவர் சிறியவராயின் அவரிடம் ஒரு இரும்பாலான ஆயுதம், அல்லது திறப்பைக் கொடுப்பார்கள். இரும்பு கையில் இருக்கும் போது பேய், பிசாசு தொடராது என்ற நம்பிக்கை. அனேகமாக சுடலை, அல்லது சுடுகாட்டில் சுடலை மடம் அமைந்திருக்கும். வந்தவர்கள் எல்லோரும் மடத்திற்கு சென்று அதில் ஒரு பெரியவர் தலைமைதாங்கி இக் கிரியயில் சம்பந்தப்பட்ட புரோகிதகாரருக்கு உரிய சம்பழத்தை வழங்குவார். பூதவுடலை எரிப்பதற்காக நியமிக்கப் பெற்றோர். பூதவுடல் எரியும் வரை மயானத்தில் நின்று எரிப்பார்கள். மற்றையோர் தத்தமது வீடுகளுக்குச் சென்று விடுவார்கள்.

கடமை செய்தவரும், உரிமைகாரர்களும் இறுதிக் கிரியை நடந்த வீட்டிற்குச் செல்வார்கள். வீட்டிற்குச் சென்றதும் படலையடியில் கால் கழுவி தண்ணீர் தெளித்தபின் உள்ளே நுளைய வேண்டும். அதன் பின்பு வீடு சுத்தம் செய்யப் பெற்று பட்டினிக் கஞ்சி காச்சுவார்கள். பட்டினிக் கஞ்சி என்பது முருங்கை இலையும் கொஞ்ச அரிசியும் போட்டு காச்சும் கஞ்சி. இறந்தவரின் துக்கத்தினால் பட்டினியாக இருந்த உறவினர்கள், பட்டினியை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இக் கஞ்சியைக் குடிப்பது வழக்கத்தில் உள்ளது. இதனை உரிமைக்கஞ்சி என்றும் அழைப்பர். பூதவுடல்தகனம் செய்யும் வரை இறந்தவரின் வீட்டில் அடுப்பு மூட்டமாட்ர்கள். தகனம் செய்வதற்கு இரண்டு மூன்று நாட்கள் செல்லுமாயின் அயல் உறவீனர்கள் பட்டினிச்சாப்படு கொடுப்பது வழக்கம்.

வீட்டில் இறந்தவருடைய படம் இருந்தால் அதனை வைத்து குத்து விளக்கேற்றி, இவ் கஞ்சியையும் படைத்து அதன் பின் மற்றையோருக்கு பரிமாறுவதும் வழக்கம். அதன் பின் அவ் வீட்டில் உள்ளோர் சாப்பிடும் உணவைவும், பாக்கு வெற்றிலை, தேத்தண்ணி போன்ற பானங்களையும் படைத்து, அதன் பின் உண்பார்கள். சில சந்தற்பங்களில் வசதி உள்ளோர் ஒரு இளநீர்ரை வெட்டிப் படைப்பார்கள். சில சமயங்களில் படம் வைத்து, விளக்கேற்றி, இளநீர், சாப்பாடு படைப்பதை அந்தியேட்டிவரை செய்வார்கள். புலம் பெயர் நாடுகளில் வாழ்வோர் தகனம் செய்த தினம், முதலாம் எட்டு, இரண்டாம் எட்டு, 15ம் நாள், அந்தியேட்டி போன்ற விஷட தினங்களில் மட்டும் செய்கின்றனர்.

காடாற்றுதல் (காடாத்து):
இறந்தவரின் பூதவுடல் தகனம் செய்த மறுநாள் அல்லது மூன்றாம் நாள் “காடாத்து” (காடு ஆற்று) என்னும் கிரியை நடைபெறுகின்றது, இதற்கு குருமார் அழைக்கப் பெறுவதில்லை. ஊரில் உள்ள பெரியவரே தலைமை தாங்கி செய்விப்பார். காடாற்று என்பது பூதவுடல் எரித்ததினால் சூடாக் இருக்கும் சுடுகாட்டை ஆற்றுதல் என பொருள் பெறும். அனேகமாக சுடுகாடு கடல், ஆறு, குளம் , கேணி போன்றவற்றை அண்மித்தே இருக்கும். எரித்த இடத்தில் உள்ள எலும்புகள், சாம்பல்கள் என்பவற்றை நீர் நிலைகளில் சங்கமிக்கச் செய்வதற்கு எரித்த இடம் ஆற்றப் பெறுதல் அவசியம். (சுடுகாடு என்பது பூதவுடலை எரிக்கும் இடமெனவும், இடுகாடு என்பது பூதவுடலை அடக்கம் செய்யும் இடம் எனவும் பொருள் பெறும்,)

காடு ஆற்றச் செல்வதற்கு நவதானியம், கடகம், குடம், அரப்பு, எண்ணை, பழங்கள், தீன்பண்டம் முதலியவற்றை முற்றத்தில் வைப்பார்கள், பெண்கள் அதனை மூன்றுமுறை சுற்றி மாரடித்து அழுவார்கள். அதன் பின் கடமை செய்தவர், பெரியவர், இன்னும் உதவி செய்ய மூன்றுபேர் எல்லாச் சாமான்களையும் எடுத்துக் கொண்டு சுடுகாட்டிற்குச் செல்வார்கள். அங்கே நெருப்புடன் இருக்கும் விறகுக் கொள்ளிகளை ஒதுல்லிய பின் குடத்தில் நீர் கொண்டுவந்து சிதை இருந்த இடத்தின் கால்மாட்டில் ஆரம்பித்து தலைமாடு வரை ஊற்றி பூர்த்து தணலாக இருக்கும் நெருப்பை அணைப்பார்கள். அப்போது பார்த்தால் பூதவுடல் படுக்க வைத்த இடத்தில் எல்லா எலும்புகளும் எரிந்த இடம் வெள்ளை நிற சாம்பராக ஒரு ஆளின் உருவமாக தெரியும்.

பின் சிதை இருந்த தலைப்பகுதில் விளக்கு ஏற்றி கும்பம் வைத்து பூசைக்கு தேவையான அபிஷேக பொருட்களையும் வைப்பார்கள். மண்கலசம் ஒன்றில் பால் ஊற்றி அதை தலைப்பகுதியிலும் வைப்பார்கள்.

கடமைகள் செய்தவர்; பூதவுடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் முழு உருவமும் இருப்பதாக பாவனை செய்து (பூதவுடல் தகனம் செய்த இடத்தில் உடலின் எழும்புகள் எரிந்த இடம் பால் போல் வெள்ளைச் சாம்பராக தெரியும்) மேற்கே பார்த்து நிற்றுகொண்டு; கால் பகுதியில் இருந்து தலை நோக்கி புறங்கையால் அபிஷேகம் செய்ய வேண்டும். பின்னர் முழங்கால்கள், தொப்புள், மாபு, நெற்றி, தலை ஆகிய ஐந்து இடத்திலும் திருநீறு, சந்தானம், மலர்கள், வைத்து தூப தீபம் காட்டி வணங்கியபின் குறுப்பிட்ட ஐந்து இடங்களிலும் இருக்கும் எலும்புகளை ஒழுங்காக எடுத்து தலைமாட்டில் இருக்கும் பாலுள்ள கலசத்தில் வைக்கவும்.

பின்னர் மிகுதி எலும்புகள் எல்லாவற்றையும் (தவற விடாது) எல்லாவற்றையும் எடுத்து (முடியுமானவரை கடமை செய்தவரே எல்லாவற்றையும் எடுப்பது நல்லது) ஒன்றாக்கி ஒரு பாத்திரத்தில் அல்லது கடகத்தில் எடுப்பார்கள். பின் அந்த இடத்தை சுத்தம் செய்து நவதானியங்களை விதைத்து; நெற்பொரி, வெற்றிலை பாக்கு, பழங்கள் முதலியவற்றை சாஸ்திரப்படி படைப்பார்கள். அதன் பின்னர்; அரளி பூ மரத்தண்டை வெட்டி அந்த இடத்தில் அளைத்து நட்டுவிடுவர்கள். முன்னர் கலசத்தில் எடுத்த (முக்கிய எலும்புப் பகுதி (அசதியையும்), ஏனைய எலும்புகள் சாம்பல் முதலியவற்றையும் எடுத்து கடமை செய்தவர் வடக்கு முகமாக பார்க்க நின்றவண்ணம் தெற்குப் பக்கமாக கடலில் (நீர் நிலையில்) போட்டுக் கரைத்து விடுவார்கள். அதன் பின்னர் வீட்டுக்குச் செல்வார்கள். இதற்கென குறிக்கப் பெற்ற விதிமுறைகள் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் வழக்கமாக எல்லோரும் செய்வதையே பின்பற்றிச் செய்கிறார்கள்.

எட்டுக்கிரியை.
இதை பற்றி எந்த வித சாஸ்திரங்களும் இல்லை என்று அறிய முடிகின்றது. இருப்பினும் இது காலகாலமாக வழக்கத்தில் இருந்தே வருகின்றது. தகனம் செய்த நாள் தொடக்கம் அந்தியேட்டி வரை இறந்தவரின் படத்தை ஒரு இடத்தில் வைத்து விளக்கேற்றி தாம் உண்ணும் உணவினை படைப்பது வழக்கமாக இருக்கின்றது. அதேநேரம் இறந்தவருக்கு பிடித்த உணவுகள் வகைகளை இறந்த எட்டாம் நாள் படைத்து வருவதும் வழக்கமான ஒன்றாகும். பூதவுடல் தகனம் செய்யப் பெற்ற மூன்றாம் நாள் அல்லது உயிர் பிரிந்த எட்டாம்நாள் அல்லது இரண்டு தினங்களும் அவியலாக எல்லா வகை உணவுகளையும் சமைத்து மாலைநேரம் (மங்கல் பொழுதில்) படைத்து, பின் உற்றார் உறவினர் நண்பர்களுடன் பகிர்ந்து உண்பார்கள்.

அந்தியேட்டி.
இறந்து முப்பத்தோராம் நாள் செய்யப்படும் கிரியையாகும். இந்தக் கிரியை இரண்டு விதமாகச் செய்யப் பெறுகின்றது. அந்தியேட்டி கிரியை, வீட்டுக் கிரியை என்பன. அந்தியேட்டி (இது சாதாரண சைவர்கள்) பூதவுடலுக்கு பதிலாக தர்ப்பையினால் (புத்தணி) சரீரம் போல செய்து அதற்கு இறுதிக் கிரியையின் போது பூதவுடலுக்கு செய்யப் பெற்ற எல்லாப் கிரியைகளும் செய்யப் பெற்று தகனம் செய்து அதன் அஸ்தி (தற்பையின் அஸ்தி) பெறப்படுகின்றது. இது புனர் தகனம் எனப்படும். பின் அங்கு பாசாணம் ஸ்தாபித்து அதற்கு அபிஷேகம் போன்றன செய்யப்படும். இங்கு முப்பத்தியொரு பிண்டங்கள் இடப்படும். இவற்றுள் தலைப் பகுதியில் வைக்கும் பிணடம் பெரிதாக இருக்கும். இந்த பிண்டங்கள் பச்சை அரிசிச் சாதம், கறிவகைகள், பலகாரங்கள், பழங்கள் எல்லாவற்றையும் சேர்த்து உருட்டி பிசைந்து இடவேண்டும். அதன் பின் ஏகோத்திர விருத்தி செய்யப்படும்.

நம் முன்னோர்கள் இப்பூசையை வசதி கருதியும், புனித ஸ்தலம் எனக் கருதியும் அனேகமாக எல்லோருமே கீரிமலையில் செய்வது வழக்கம். கீரிமலையில் இதற்கென பிரத்தியேக இடவசதியும், குருமாரும், புனிதமான சமுத்திரமும் இருப்பதனால் அங்கு சென்று செய்தனர். தற்பை சுட்ட அஸ்தியையும் (பாசாணத்தையும்), பிதுருகளுக்கு சமர்ப்பித்த பிண்டத்தையும், கும்பத்தையும் புனிதமான சமுத்திரத்தில் சங்கமிக்கச் செய்தல் புனிதம் நிறைந்ததென என கருதுகின்றனர். இக்கிரியைகளை சைவக்குருமாரே செய்வது வழக்கம்.

வசதி படைத்தோர்; தங்கள் வீடுகளிலோ, அல்லது ஊர் ஆலய வளாகத்திலோ மண்டபம் அமைத்து கிரியைகள் செய்தபின்; பாசாணத்துக்கு தூப தீபம் காட்டி பூசை முடித்த பின் கும்பம், பாசாணம், பிண்டம் ஆகியவற்றை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அல்லது தேர் போன்று ஒரு வாகனம் அமைத்து அதில் வைத்து மேளம் தாளம் முழங்க எடுத்துச் சென்று பிண்டத்தை ஒருவரும் அதன் பின் கும்பத்தை ஒருவரும், அதனைத் தொடர்ந்து பாசானத்தை ஒருவரும் கடற்கரைக்கு எடுத்துச் சென்று கடமை செய்தவர் இடையளவு தண்ணீரில் நின்ற வண்ணம் வடக்குப் பக்கம் பார்த்து நின்று முதலில் பிண்டத்தை தெற்கு பக்கமாகவும்,, பின் கும்பத்தை வடக்குப் பக்கமாகவும், பாசாணத்தை தலைக்கு மேலால் தெற்குப் பக்கமாகவும் நீர்நிலையில் இட்டு ஸ்நானம் செய்வார்கள். அந்தியேட்டி கிரியைக்கு கடற்கரையே உகந்த இடமாகக் கருதப் பெறுகின்றது.

பின்னர் வீட்டு வாசலை அடைந்ததும் வேப்பிலையை சப்பி, நெருப்பு, சாணம், மண், வெண்கடுகு ஆகியவற்றை தொட்டு கல்லின் மேல் கால் வைத்து அல்லது உலக்கையை கடந்து செல்ல வேண்டும். சில இடங்களில் கடமை செய்தவர் வீட்டினுள் நுளையும் போது ஆராத்தியும் எடுப்பார்கள்.

வீட்டுக்கிரியை அல்லது சபிண்டீகரணம்.
வீடினை கழுவி சுத்தம் செய்து புண்ணியாகவாசனம் செய்த பின்னர் வீட்டுக்கிரியை செய்ய வேண்டும். விக்னேஸ்வர பூசை, புண்ணியாக வாசனம், பஞ்ச கவ்விய பூசை முதலிய கிரியைகளை செய்து நவசிராத்தம், ஏகோத்திர விருத்தி, சம்கிதை,இடபதானம், ஏகோதிட்டம், மாசிகங்கள், சோத கும்ப சிராத்தம், சபிண்டீகரணம் செய்வதே ஒழுங்குமுறை.

இக்கிரியை பொதுவாக பிராமணக் குருமார் மூலம் செய்யப் பெறுகின்றது. சில இடங்களில் சைவக்குருமாரே இதனையும் செய்கின்றனர், காரணம் பிதிர்த்தற்பணம்; இறுதிக்கிரியைகள் செய்தவருக்கே உரியன எனக் காரணம் கூறப்படுகின்றது. இறந்தவருக்காக வழங்கப் பெறும் தர்ப்பணம் (உடை, குடை, செருப்பு, தானம் முதலியன) இறந்தவருக்காக கிரியைகள் செய்த தமக்கே வழங்கப் பெறவேண்டும் என்பது சைவக் குருமாரின் வாதமாகும்.

வீட்டுக்கிரியையின் போது இரண்டு பிராமணக்குருமார்கள் வருவார்கள். அதில் சிரேஷ்ட குரு கிரியைகளைச் செய்வார், மற்றயகுரு தானங்களைப் பெற்றுச் செல்வார் முதலிலேயே சென்றுவிடுவார். அவர்செல்லும் போது வீட்டைத் திரும்பிப் பார்க்ககூடாது. அத்துடன் அவர் செல்லும் போது அவரின் பின்னால் சாணம் கரைத்த தண்ணீர் அல்லது மஞ்சள் நீர் தெளித்து புனிதமாக்குவார்கள். காரணம் அவர் அங்கே பிதிராக தோற்றமளிக்கின்றார். அதன் பின்னர் சிரேஷ்ட குரு பூசைகளை நிறைவு செய்து, அங்கு இருப்போரை ஆசீர்வதித்து விடைபெற்றுச் செல்வார். அவர் முற்றத்தில் நிற்க அவரைச் சுற்றி வந்து வீழ்ந்து வணங்குவார்கள். அவர் வீட்டில் உள்ளவர்களை ஆசீர்வதித்த பின் விடை பெற்றுச் செல்வார். அவர் இங்கே இறைவனாக மதிக்கப் பெறுகின்றார்.
சுபம்


நன்றி சந்திரன்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum