இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


நோய் தீர்த்த காயத்ரீ

3 posters

Go down

நோய் தீர்த்த காயத்ரீ  Empty நோய் தீர்த்த காயத்ரீ

Post by ஆனந்தபைரவர் Thu Oct 06, 2011 9:44 pm

திருவனந்தபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு, கேரளத்தை ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அந்த மன்னனுக்கு ஊழ்வினைப் பயனால், சர்மநோய் பற்றிக் கொண்டது. தேசங்கள் பல வென்ற வேந்தனின் தேகத்தை தீராத நோய் ஆக்கிரமித்துக் கொண்டது.
வீரம் வளர்த்தவன்-விவேகம் அறிந்தவன் அனலிடைப் புழுவாய்த் துடித்தான்; துவண்டான். ஒளஷதங்களாலும் நோய் நீங்க வழி காணவில்லை. மந்திர தந்திரங்களாலும் பல வழிகளில் பிரயத்தனப்பட்டும், மன்னனின் நோய் மட்டும் நீங்கவில்லை.

மன்னன் நோய் நீங்குவதற்காக, தான தர்மங்களைச் செய்தான். ஆலய வழிபாடுகளை நடத்தினான்.

மன்னனின் நோய் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருந்தது. மன்னன் நோய் நீங்க வழி அறியாது அவதிப்பட்டுக் கொண்டிருந்தான்.

ஒரு நாள், அரண்மனைக்கு ஒரு முனிவர் வந்தார். அரசன் அம்முனிவரை வணங்கி வரவேற்றான். அரசன் அவரிடம் தனக்கு ஏற்பட்டுள்ள நோயினைப் பற்றிச் சொல்லித் துக்கப்பட்டான். ஞானத்தவயோகி மன்னனுக்கு ஆறுதல் பல சொன்னார்.

“அரசே! வருந்தாதீர்கள். தங்கள் நோய் நீங்க நல்லதொரு மார்க்கத்தை என்னால் கூற முடியும்.”

“உங்கள் சித்தம் என் பாக்கியம்.”

“அரசே! நம் ஊர் எல்லையின் நதிதீரத்தில் குதிரை மீது வீரன் அமர்ந்திருப்பது போன்ற சிலை ஒன்று இருக்கிறது அல்லவா...? அதே போன்ற ஒரு சிலையை எள்ளினால் செய்து கொண்டு வரச்சொல்லுங்கள். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதனைப் பற்றிக் கூறுகிறேன்.”

முனிவரின் வேண்டுகோளைச் சிரமேற் கொண்டு அரசன் அக்கணமே சிலை செய்து கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்தான். ஓரிரு தினங்களில், நதிதீரத்தில் இருப்பது போன்ற சிலை செய்யப்பட்டு அரண்மனைக்குக் கொண்டு வரப்பட்டது.

முனிவர், அந்தச் சிலையின் கையில் ஒரு வாளைக் கொடுத்தார். அந்தச் சிலைக்குள் பொன்னும் மணியும் நிறைய வைத்தார். அந்த உருவத்திற்கு மந்திரத்தின் மூலம் ஓர் அமானுஷ்யமான சக்தியைக் கொடுத்தார்.

“அரசே! இந்த வீரனுக்கு நான் மந்திரத்தால் அபாரமான ஆற்றலை அளித்துள்ளேன். எவனொருவன் இந்த வீரனைத் தொடாமல் அவன் பிடித்திருக்கும் கத்தியை விழச் செய்கிறானோ அவனுக்கு, இந்தக் குதிரைக்குள் வைத்திருக்கும் பொன்னும் பொருளும் தானமாகக் கொடுக்கப்படுமென்று பறை சாற்றுங்கள். அவ்வாறு கத்தி தானாகவே கீழே விழுந்ததும், குதிரையும் வீரனும் உடைந்து தூள் தூள் ஆவதுடன் தங்கள் நோயும் நீங்கும். அதற்காகவே இந்தச் சிலை உருவில் தங்கள் நோயினை ஸ்தாபித்துள்ளேன்.”

பிறகு முனிவர், மன்னனிடம் விடைபெற்றுப் புறப்பட்டார். மன்னர், முனிவர்க்குப் பொன்னும் பொருளும் கொடுத்தார். பற்றற்ற துறவி, எப்பொருளையும் பற்றவில்லை. மன்னருக்குப் பேரருள் பாலித்துச் சென்றார். அரசன் அரண்மனை வாயிலில் அந்தச் சிலையை மக்களின் பார்வைக்கு வைத்தான், அரசன், முனிவர் சொன்னது போல், நாடெங்கும் பறை சாற்றினான்.

பொருளுக்கு ஆசைப்பட்டோர், அரண்மனைக்கு வந்து, பற்பல வழிகளில் வீரனின் கையிலிருக்கும் கத்தியைக் கீழே விழச் செய்வதற்கு எத்தனையோ விதமான பிரயத்தனங்களைச் செய்து தோல்வியைத் தழுவிச் சென்றனர்.

அரசனுக்கு ஏமாற்றமாகவே இருந்தது. “கத்தியும் விழப் போவதில்லை; தன் நோயும் குணமாகப் போவதில்லை.” என்று தனக்குள் எண்ணி எண்ணி வருந்தினான்.

இவ்வாறு நாள்கள் பல சென்றன. ஒரு நாள், கன்னடியர் என்னும் பெயர் கொண்ட அந்தணர் ஒருவர் அரண்மனைக்கு வந்தார். அவர் சாஸ்திரங்கள் அதிகம் படிக்காவிட்டாலும், காயத்ரீ ஜபத்தைத் தவறாமல் அனுஷ்டிக்கும் நியமத்தை, தனக்கு யக்ஞோபவீதம் ஆன நாள் முதற்கொண்டு தவறாமல் கடைப்பிடித்து வந்தார். சந்தியாவந்தன கர்மாவை முப்போதும் சிரத்தையுடன் செய்து வந்தார்.

அந்தணர், சிலை இருக்கும் இடத்திற்குச் சென்றார். வீரர்களும், அரண்மனை பிரதானிகளும் உடன் சென்றனர். வழக்கம்போல் ஊர்ஜனங்கள் வேடிக்கை பார்க்கக் கூடினர்.

அந்தணர் சற்று நேரம் தியானத்தில் அமர்ந்தார். பிறகு அந்தச் சிலையைப் பார்த்து, “ஏய் வீரனே! உன் கைகளிலிருக்கும் கத்தியைக் கீழே விழச் செய்வதற்கு என்னிடமிருந்து நீ என்ன எதிர்பார்க்கிறாய்?” என்று கேட்டார்.

அக்கணமே, அந்தப் பதுமை கத்தியைத் தாழ்த்திப் பிடித்தவாறு, மற்றொரு கையால் மூன்று விரல்களை நிமிர்த்திக் காண்பித்தது. பதுமையின் இச்செய்கையின் பொருளப் புரிந்து கொண்ட அந்தணர், “முடியாது” என்பதனை தலையை அசைத்து உணர்த்தினார். அந்தப் பதுமை அடுத்தாற்போல், இரண்டு விரல்களை நிமிர்த்திக் காட்டியது. அந்தணர் அதற்கும் முடியாது என்பது போல் தலையை அசைத்தார்.

முடிவாக அந்த உருவம் ஒரே ஒரு விரலை மட்டும் நிமிர்த்திக் காட்டியது.

அந்தணர் சற்று நேரம் சிந்தித்தார். பிறகு சம்மதம் என்பதற்கு அடையாளமாகத் தலையை மேலும் கீழுமாக அசைத்தார்.

அந்தணர், பஞ்சபாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவரச் சொன்னார். அந்தத் தண்ணீரை வார்த்து, “ஏய் வீரனே! நீ கேட்டவாறு ஒன்றை மட்டும் உனக்கு தத்தம் செய்து தருகிறேன்.” என்று சொல்லி நீரை வார்த்துக் கொடுத்தார்.

அக்கணமே, வீரனின் கைகளிலிருந்த கத்தி தானாகவே கீழே விழுந்தது. பயங்கர சத்தத்துடன் பதுமையும் சுக்கு நூறாக உடைந்து வீழ்ந்தது. அதனுள் இருந்த பொன்னையும், மணியையும் எடுத்து அந்தணர்க்குத் தானமாகக் கொடுத்தனர். அரண்மனைப் பிரதானியர் அவரை அழைத்துக் கொண்டு அரசனின் அறைக்குச் சென்றனர்.

பஞ்சணையில் சோர்ந்து கிடந்த மன்னனுக்குப் புத்துயிர் பிறந்தது. ரோகம் பீடித்த மேனி, நோய் நீங்கிப் பொன்போல் பிரகாசித்தது.
மன்னன், துள்ளிக் குதித்து எழுந்து ஆனந்தக் கூத்தாடினான். இந்த அதிசயத்தைக் கண்டு, அரண்மனையே ஆச்சரியத்தில் மூழ்கியது.

அந்தணரும், குதிரை மீது அமர்ந்திருந்த வீரனும் ஜாடை மாடையாகப் பேசியது பற்றியும், சிலை உடைந்து தூளானது பற்றியும் அரசர்க்குத் தெரிவித்தனர்.

அரண்மனைப் பிரதானிகள், அந்தணருடன் அரசன் முன் வந்தனர். அரசன் அந்தணரை வணங்கி வரவேற்றான். அந்தணருக்கு மேலும் பொன்னும் பொருளும் கொடுத்து கௌரவித்தான். அந்தணர் அகமகிழ்ந்தார். அரசனுக்கு ஓர் ஐயப்பாடு!

அந்தணருக்கும், பதுமைக்கும் நடந்த ஜாடையான வாதத்தின் பொருளைப் புரிந்து கொள்ள ஆசைப்பட்டான் அரசன்; அவரிடம் அதைப் பற்றி வினவினான். அந்தணர் அதனை விளக்கலானார்.

“அரசே! முதலில் மூன்று விரல்களைக் காட்டியதன் பொருள் என்னவென்றால், நான் மூன்று வேளை செய்யும் சந்தியா வந்தனத்தின் பலனைத் தனக்குத் தரவேண்டும் என்பதுதான். அதற்கு நான் முடியாது என்று தலையை அசைத்தேன். இரண்டு விரலைக் காண்பித்தது காலை, மாலை இரு வேளைகளில் செய்யும் சந்தியாவந்தனத்தின் பலனைத் தத்தமாகத் தருமாறு கேட்டது. அதற்கும் நான் முடியாது என்றேன்.

கடைசியில் ஒரு வேளை மாத்யாந்நிகத்தின் பலனையாவது தத்தம் செய்து கொடுக்குமாறு ஒரு விரலைக் காண்பித்துக் கேட்டது. நான் அதற்கும் சம்மதித்து அந்த ஒரு வேளை சந்தியாவந்தனத்தின் பலனைத் தத்தம் செய்து கொடுத்தேன்.

அவ்வாறு செய்து கொடுத்த மாத்திரத்திலேயே கத்தி கீழே விழுந்தது; சிலையும் உடைந்து தூளானது; தாங்களும் நோய் நீங்கி பூரண குணம் அடைந்தீர்கள்.”

அரசன், ஐயம் நீங்கி அகமகிழ்ந்தான். அந்தணரை அரசமரியாதையுடன் பல்லக்கில் அனுப்பி வைத்தான்.

அந்தணர், தான் இழந்து விட்ட ஒரு வேளை காயத்ரீ ஜபத்தின் பலனை ஈடு செய்வதற்கு உகந்த பரிகாரம் தேடிப் புறப்பட்டார். ஒரு வேளை ஜபத்தின் பலனுக்காக பொன்னையும், பொருளையும் பெற்றுக் கொண்ட பாபத்திற்குப் பிராயச்சித்தம் தேடிப் புறப்பட்டார். அகஸ்திய முனிவரைக் கண்டு, இதற்கு தகுந்த பிராயச்சித்தம் பெறலாம் என்று தமக்குள் முடிவு பூண்டார். அக்கணமே அந்தணர் கன்னடியர், அகஸ்தியரைத் தரிசிக்க விந்தியமலைச் சாரலுக்குப் புறப்பட்டார். அவ்வாறு புறப்பட்டுச் செல்லும் முன், அந்தணர் தம்மிடமுள்ள பொன்னை, தன் ஊரிலுள்ள ஒரு பிரமுகரிடம் கொடுத்து, பத்திரமாகப் பாதுகாக்குமாறும், தான் திரும்ப வந்து கேட்கும்போது தர வேண்டும் என்றும் சொல்லிப் புறப்பட்டார்.

கன்னடியர், அகத்திய முனிவரை நினைந்து காடு மலைகளெல்லாம் கடந்து நடந்து கொண்டே இருந்தார். மகாசித்தபுருஷரான அகஸ்திய மாமுனிவர் வயது முதிர்ந்த ஓர் அந்தணராக கன்னடியர் முன்னால் தோன்றினார். மூப்பு மிகுந்த முதியவரின் முகப்பொலிவைக் கண்டு கன்னடியர் மெய்யுருகினார். ஏதோ ஓர் உணர்வு அவர் உள்ளத்தில் எழுந்தது. அவரது பாதங்களைப் பணிந்து எழுந்தார்.

“கன்னடியரே! உமக்குத் தகுந்த பிராயச்சித்தம் சொல்வோம். நீங்கள் செல்லும் வழியில் ஒரு பசு உங்கள் முன்னால் தோன்றும். அந்தப் பசு செல்லும் தூரத்துக்குக் கால்வாய் வெட்ட வேண்டும். அந்தப் பசு எந்த இடத்தில் நின்று சாணம் இட்டு, கோபியநீர் சிந்துகிறதோ, அந்த இடத்தில் மடை அமைத்து வாய்க்கால் வெட்டவும். இவ்வாறு கால்வாய் வாய்க்கால் அமைப்பதால் தாங்கள் இழந்த காயத்ரீ ஜபத்தின் பயனை மீண்டும் பெறலாம்.”

அகஸ்தியரின் பிராயச்சித்தம் கேட்டு, கன்னடியர் களிப்பு மிகக் கொண்டார். அகஸ்தியரை மீண்டும் நமஸ்கரித்தார். அகஸ்தியர் அவரை அனுக்கிரஹித்து மறைந்து அருளினார்.

அகஸ்தியர் சொன்னதுபோல், அந்தணர் தம் பாதயாத்திரையைத் தொடர்ந்தார். செல்லும் வழியே பசு ஒன்று முன்னால் போகக் கண்டார். அந்தணர் அந்தப் பசுவைத் தொடர்ந்து புறப்பட்டார். ஓரிடத்தில் பசு சாணமிட்டது. அந்தணர் வாய்க்கால் வெட்ட வேண்டிய இடம் அது தான் என்பதை ஊர்ஜிதப்படுத்தினார்.

கால்வாய் வெட்டுவதற்குப் போதிய பணம் வேண்டும் என்பற்காகத் தான் பணம் கொடுத்து வைத்திருந்த பிரமுகனைக் காணப் புறப்பட்டார். திடீரென்று, அந்தணரைக் கண்டதும் பிரமுகனுக்குத் தூக்கி வாரிப்போட்டது.

பேராசைக்காரனான அந்தப் பெரிய மனிதன் அந்தணரை ஏமாற்ற எண்ணம் கொண்டான். அந்தணர் அவனிடம் தாம் கொடுத்த பவுனைத் திருப்பித் தருமாறு கேட்டார்.

அந்தக் காலத்துப் பவுன், துவரம் பருப்பு போல் பார்ப்பதற்குச் சிறிதாக இருக்கும். அந்த ஒற்றுமையைப் பயன் படுத்தி அந்தணரை சுலபமாக ஏமாற்றத் திட்டம் போட்டான் அந்தப் பேராசைக்காரன். துவரம் பருப்பையே பவுன் என்று சொல்லி அந்தணரிடம் கொடுத்தான்.

பெரிய மனிதனின் சூழ்ச்சியைத் தெரிந்து கொண்ட அந்தணர்க்குக் கடும் கோபம் வந்தது. அவனிடம் எதுவும் பேச விரும்பவில்லை. இந்த வழக்கை அரசரிடம் சென்று முறையிடுவது என்று தீர்மானித்தார். உடனே அரண்மனைக்குப் புறப்பட்டுச் சென்றார். அரசரிடம் நடந்தவற்றைச் சொல்லி முறையிட்டார். அரசன், பிரதிவாதியை அழைத்து வர ஆணை பிறப்பித்தான். அரசர் அந்தப் பிரமுகரிடம் அந்தணர் கூற்றினை விளக்கினார்.

அரசர் முன்னால், அந்தப் பெரிய மனிதன், “அரசே! இவர் திரவியம் என்று இந்தப் பருப்பினைத்தான் கொடுத்துச் சென்றார். நானும் நம்பிக்கையின் பேரில் பெற்றுக் கொண்டேன்” என்று அந்தணரின் மீது பெரும் பழியைப் போட்டு, தான் தப்பித்துக் கொள்ளப் பார்த்தான். “அந்தணர் பவுன் தரவில்லை” என்று ஒரேயடியாக உறுதியிட்டுச் சொன்னான்.

கன்னடியர் அந்தக் கபட வார்த்தைகளை ஏற்கும் நிலையில் இல்லை. கன்னடியர், பெரிய மனிதனிடமிருந்து உண்மையை வரவழைப்பதற்கு ஓர் அருமையான ஆலோசனையைக் கூறினார்.

“அரசே! இவர் தன்னைப் பெரும் சிவ பக்தர் என்று சொல்லிக் கொள்கிறார் அல்லவா? அப்படி, இவர் உண்மையான சிவபக்தராக இருந்தால், சிவலிங்கத்தைக் கட்டிக் கொண்டு சத்தியம் செய்துதரச் சொல்லுங்கள்.” என்று கேட்டுக் கொண்டார். சிவபக்தன் அதற்கும் சம்மதித்தான்.

“அரசே! நாளை காலை யான் சிவலிங்கத்தைக் கட்டிக்கொண்டு சத்தியம் செய்து தருகிறேன்.” என்றான்.

பெரிய மனிதனின் மொழி கேட்டு, அந்தணர் திடுக்கிட்டார். அரசனும் அதற்குச் சம்மதித்தான். வாதியும், பிரதிவாதியும் பிரிந்து சென்றனர்.

அன்றிரவு சிவபக்தன், சிவன் கோவிலுக்குச் சென்றான். தனக்குத் தெரிந்த அபிசார மந்திரப் பிரயோகத்தினால், சிவலிங்கத்திலுள்ள சக்தியை அடுத்துள்ள ஒரு வில்வ மரத்திற்கு ஆகர்ஷிக்கச் செய்தான். நிம்மதியாகச் சென்று உறங்கலானான்.

ஆனால், கன்னடியர் உறக்கம் வராமல் மனம் கலங்கினார். திருவெண்ணீறும், உருத்திராக்ஷ மாலைகளும் தரித்துக்கொண்டு, இப்படி சிவ அபவாதம் செய்கிறானே என்று எண்ணி தமக்குள் சஞ்சலம் கொண்டார்.

“சம்போ! மகாதேவா! இதென்ன அநியாயம்? ஆலகால விஷம் உண்டு, அமரர்களைக் காத்த நீலகண்டப் பெருமானே! சத்தியத்துக்கு சோதனை வரலாமா? சர்வலோக ரக்ஷகா! நீதான் அடியேனைக் காத்தருள வேண்டும். நான் ஜபிக்கின்ற காயத்ரீ மகா மந்திரம் இந்தப் போலி வேஷதாரியைத் தண்டிப்பது திண்ணம்.” என்று அந்தணர் பலவாறு பகவானைப் போற்றிப் பணிந்தார். ஒருவாறு கண் அயர்ந்தார்.

அன்றிரவு சிவபெருமான், தம் உண்மையான பக்தனைக் காக்கத் திருவுள்ளம் கொண்டார். கன்னடியர் கனவிலே எழுந்தருளினார்.
“அன்ப! நாளைக் காலை நீ அவனிடம் வில்வ மரத்தைக் கட்டிக்கொண்டு சத்தியம் செய்யச் சொல்வாயாக.”

அந்தணர் கனவு கலைந்து எழுந்தார். சிவபெருமான் திருவாய் மலர்ந்தருளியதன் உண்மைப் பொருளை உணர முடியாமல் சித்தம் தடுமாறினார். இருப்பினும், மகேசன் வாக்கே சத்தியம் என்று மனத்தில் உறுதி பூண்டார்.

மறுநாள் கோவிலுக்கு அந்தப் பெரிய மனிதனும், கன்னடியரும், அரசனும், மந்திரி பிரதானிகளும் வந்து கூடினர்.

பெரிய மனிதன், “அரசே! நான் சிவலிங்கத்தைக் கட்டிக்கொண்டு சத்தியம் செய்கிறேன்.” என்று புறப்பட்டார்.

அந்தணர் அவரைத் தடுத்தார். அவர் அரசரிடம் ஓர் விண்ணப்பம் செய்தார்.

“அரசே! இவர் பெரும் சிவபக்தர். இவரைப் போய் சிவலிங்கத்தை கட்டிக் கொண்டு சத்தியம் செய்யச் சொல்வது எனக்கு உகந்ததாகப் படவில்லை. அது சிவ அபச்சாரம். அந்தச் சிவ நிந்தனைக்கு ஆளாக நான் விருபம்வில்லை. அதனால் இவர் இந்த வில்வ மரத்தைக் கட்டிக்கொண்டு சத்தியம் செய்தால் போதுமானது.”

போலி சிவபக்தன், அந்தணரின் மொழி கேட்டு நிலைகுலைந்தான். திருடனுக்குத் தேள் கொட்டினாற் போல் துடித்தான். வேறு வழியின்றி வில்வ மரத்தைக் கட்டிக் கொண்டு சத்தியம் செய்தான். அவ்வாறு சத்தியம் செய்த மாத்திரத்திலேயே, உடல் எரிந்து மாண்டான் அந்தக் கபட வேஷதாரி. எல்லாரும் அதிசயித்தனர்.

அன்று முதல் அந்தச் சிவபெருமானுக்கு “எரிச்சுக் கட்டி ஸ்வாமி” என்று திருநாமம் ஏற்பட்டது.

பிறகு அரசனின் ஆணைப்படி, அரசப் பிரதானிகள் சென்று பெரிய மனிதனின் வீட்டிலிருந்து அந்தணரின் பொன் மணிகளை மீட்டு கொடுத்தனர். அந்தப் பணத்தை வைத்து அந்தணர் கால்வாய் வெட்டினார். வாய்க்கால் கட்டினார். அந்தக் கால்வாய்க்கு “கன்னடியன் கால்வாய்” என்று பெயர் ஏற்பட்டது. இந்தக் கோவிலும், கால்வாயும் திருநெல்வேலி ஜில்லாவில் இன்றும் இருக்கின்றன.

அகஸ்தியர் அருள் வாக்கின்படி வாய்க்கால் வெட்டிய அந்தணர், தான் இழந்த ஒருவேளை காயத்ரீயின் முழுப் பயனையும் திரும்பப் பெற்றார்.

நன்றி அம்மன் தரிசனம் இணையத்தளம்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

நோய் தீர்த்த காயத்ரீ  Empty Re: நோய் தீர்த்த காயத்ரீ

Post by Venkatesh A.S Sat Oct 08, 2011 12:25 am

மிக்க நன்று.
Venkatesh A.S
Venkatesh A.S

Posts : 70
Join date : 25/06/2011
Location : Chennai

Back to top Go down

நோய் தீர்த்த காயத்ரீ  Empty Re: நோய் தீர்த்த காயத்ரீ

Post by ஸ்ரீ லக்ஷ்மி Mon Nov 21, 2011 7:44 pm

மிக்க நன்றி . ஓம் நமசிவாய ....

ஸ்ரீ லக்ஷ்மி

Posts : 3
Join date : 21/11/2011
Age : 43
Location : dubai

Back to top Go down

நோய் தீர்த்த காயத்ரீ  Empty Re: நோய் தீர்த்த காயத்ரீ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum