இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஏழாம் திருமுறை இரண்டாம் பகுதி பாடல்கள் (518 - 1026)-1

Go down

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஏழாம் திருமுறை இரண்டாம் பகுதி பாடல்கள் (518 - 1026)-1 Empty சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஏழாம் திருமுறை இரண்டாம் பகுதி பாடல்கள் (518 - 1026)-1

Post by ஆனந்தபைரவர் Wed Aug 04, 2010 12:09 pm

7.51 திருவாரூர்

பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
518 பத்திமையும் அடிமையையுங்
கைவிடுவான் பாவியேன்
பொத்தினநோ யதுவிதனைப்
பொருளறிந்தேன் போய்த்தொழுவேன்
முத்தினைமா மணிதன்னை
வயிரத்தை மூர்க்கனேன்
எத்தனைநாட் பிரிந்திருக்கேன்
என்னாரூர் இறைவனையே.
7.51.1
519 ஐவணமாம் பகழியுடை
அடல்மதனன் பொடியாகச்
செவ்வணமாந் திருநயனம்
விழிசெய்த சிவமூர்த்தி
மையணவு கண்டத்து
வளர்சடையெம் மாரமுதை
எவ்வணம்நான் பிரிந்திருக்கேன்
என்னாரூர் இறைவனையே.
7.51.2
520 சங்கலக்குந் தடங்கடல்வாய்
விடஞ்சுடவந் தமரர்தொழ
அங்கலக்கண் தீர்த்துவிடம்
உண்டுகந்த அம்மானை
இங்கலக்கும் உடற்பிறந்த
அறிவிலியேன் செறிவின்றி
எங்குலக்கப் பிரிந்திருக்கேன்
என்னாரூர் இறைவனையே.
7.51.3
521 இங்ஙனம்வந் திடர்ப்பிறவிப்
பிறந்தயர்வேன் அயராமே
அங்ஙனம்வந் தெனையாண்ட
அருமருந்தென் ஆரமுதை
வெங்கனல்மா மேனியனை
மான்மருவுங் கையானை
எங்ஙனம்நான் பிரிந்திருக்கேன்
என்னாரூர் இறைவனையே.
7.51.4
522 செப்பரிய அயனொடுமால்
சிந்தித்துந் தெரிவரிய
அப்பெரிய திருவினையே
அறியாதே அருவினையேன்
ஒப்பரிய குணத்தானை
இணையிலியை அணைவின்றி
எப்பரிசு பிரிந்திருக்கேன்
என்னாரூர் இறைவனையே.
7.51.5
523 வன்னாகம் நாண்வரைவில்
அங்கிகணை அரிபகழி
தன்னாகம் உறவாங்கிப்
புரமெரித்த தன்மையனை
முன்னாக நினையாத
மூர்க்கனேன் ஆக்கைசுமந்
தென்னாகப் பிரிந்திருக்கேன்
என்னாரூர் இறைவனையே.
7.51.6
524 வன்சயமாய் அடியான்மேல்
வருங்கூற்றின் உரங்கிழிய
முன்சயமார் பாதத்தால்
முனிந்துகந்த மூர்த்திதனை
மின்செயும்வார் சடையானை
விடையானை அடைவின்றி
என்செயநான் பிரிந்திருக்கேன்
என்னாரூர் இறைவனையே.
7.51.7
525 முன்னெறிவா னவர்கூடித்
தொழுதேத்தும் முழுமுதலை
அந்நெறியை அமரர்தொழும்
நாயகனை அடியார்கள்
செந்நெறியைத் தேவர்குலக்
கொழுந்தைமறந் திங்ஙனம்நான்
என்னறிவான் பிரிந்திருக்கேன்
என்னாரூர் இறைவனையே.
7.51.8
526 கற்றுளவான் கனியாய
கண்ணுதலைக் கருத்தார
உற்றுளனாம் ஒருவனைமுன்
இருவர்நினைந் தினிதேத்தப்
பெற்றுளனாம் பெருமையனைப்
பெரிதடியேன் கையகன்றிட்
டெற்றுளனாய்ப் பிரிந்திருக்கேன்
என்னாரூர் இறைவனையே.
7.51.9
527 ஏழிசையாய் இசைப்பயனாய்
இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய் யான்செய்யுந்
துரிசுகளுக் குடனாகி
மாழையொண்கண் பரவையைத்தந்
தாண்டானை மதியில்லா
ஏழையேன் பிரிந்திருக்கேன்
என்னாரூர் இறைவனையே.
7.51.10
528 வங்கமலி கடல்நஞ்சை
வானவர்கள் தாமுய்ய
நுங்கிஅமு தவர்க்கருளி
நொய்யேனைப் பொருட்படுத்துச்
சங்கிலியோ டெனைப்புணர்த்த
தத்துவனைச் சழக்கனேன்
எங்குலக்கப் பிரிந்திருக்கேன்
என்னாரூர் இறைவனையே.
7.51.11
529 பேரூரும் மதகரியின்
உரியானைப் பெரியவர்தஞ்
சீரூருந் திருவாரூர்ச்
சிவனடியே திறம்விரும்பி
ஆரூரன் அடித்தொண்டன்
அடியன்சொல் அகலிடத்தில்
ஊரூரன் இவைவல்லார்
உலகவர்க்கு மேலாரே.
7.51.12

இது திருவொற்றியூரிற் சங்கிலிநாச்சியாருடன்
இருக்கும்போது வீதிவிடங்கப்பெருமானுடைய
திருவோலக்கதரிசன ஞாபகம்வர ஓதியருளிய பதிகம்.

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.52 திருவாலங்காடு
பண் - பழம்பஞ்சுரம்

திருச்சிற்றம்பலம்
530 முத்தா முத்தி தரவல்ல
முகிழ்மென் முலையா ளுமைபங்கா
சித்தா சித்தித் திறங்காட்டுஞ்
சிவனே தேவர் சிங்கமே
பத்தா பத்தர் பலர்போற்றும்
பரமா பழைய னூர்மேய
அத்தா ஆலங் காடாவுன்
அடியார்க் கடியேன் ஆவேனே.
7.52.1
531 பொய்யே செய்து புறம்புறமே
திரிவேன் றன்னைப் போகாமே
மெய்யே வந்திங் கெனையாண்ட
மெய்யா மெய்யர் மெய்ப்பொருளே
பையா டரவம் அரைக்கசைத்த
பரமா பழைய னூர்மேய
ஐயா ஆலங் காடாவுன்
அடியார்க் கடியேன் ஆவேனே.
7.52.2
532 தூண்டா விளக்கின் நற்சோதீ
தொழுவார் தங்கள் துயர்தீர்ப்பாய்
பூண்டாய் எலும்பைப் புரமூன்றும்
பொடியாச் செற்ற புண்ணியனே
பாண்டாழ் வினைக ளவைதீர்க்கும்
பரமா பழைய னூர்மேய
ஆண்டா ஆலங் காடாவுன்
அடியார்க் கடியேன் ஆவேனே.
7.52.3
533 மறிநேர் ஒண்கண் மடநல்லார்
வலையிற் பட்டு மதிமயங்கி
அறிவே அழிந்தே னையாநான்
மையார் கண்ட முடையானே
பறியா வினைக ளவைதீர்க்கும்
பரமா பழைய னூர்மேய
அறிவே ஆலங் காடாவுன்
அடியார்க் கடியேன் ஆவேனே.
7.52.4
534 வேலங் காடு தடங்கண்ணார்
வலையுட் பட்டுன் நெறிமறந்து
மாலங் காடி மறந்தொழிந்தேன்
மணியே முத்தே மரகதமே
பாலங் காடி நெய்யாடி
படர்புன் சடையாய் பழையனூர்
ஆலங் காடா உன்னுடைய
அடியார்க் கடியேன் ஆவேனே.
7.52.5
535 எண்ணார் தங்கள் எயிலெய்த
எந்தாய் எந்தை பெருமானே
கண்ணாய் உலகங் காக்கின்ற
கருத்தா திருத்த லாகாதாய்
பண்ணா ரிசைக ளவைகொண்டு
பலரும் ஏத்தும் பழையனூர்
அண்ணா ஆலங் காடாவுன்
அடியார்க் கடியேன் ஆவேனே.
7.52.6
536 வண்டார் குழலி உமைநங்கை
பங்கா கங்கை மணவாளா
விண்டார் புரங்க ளெரிசெய்த
விடையாய் வேத நெறியானே
பண்டாழ் வினைகள் பலதீர்க்கும்
பரமா பழைய னூர்மேய
அண்டா ஆலங் காடாவுன்
அடியார்க் கடியேன் ஆவேனே.
7.52.7
537 பேழ்வா யரவி னணையானும்
பெரிய மலர்மே லுறைவானுந்
தாழா துன்றன் சரண்பணியத்
தழலாய் நின்ற தத்துவனே
பாழாம் வினைக ளவைதீர்க்கும்
பரமா பழையனூர் தன்னை
ஆள்வாய் ஆலங் காடாவுன்
அடியார்க் கடியேன் ஆவேனே.
7.52.8
538 எம்மான் எந்தை மூத்தப்பன்
ஏழேழ் படிகால் எமையாண்ட
பெம்மான் ஈமப் புறங்காட்டிற்
பேயோ டாடல் புரிவானே
பன்மா மலர்க ளவைகொண்டு
பலரும் ஏத்தும் பழையனூர்
அம்மா ஆலங் காடாவுன்
அடியார்க் கடியேன் ஆவேனே.
7.52.9
539 பத்தர் சித்தர் பலரேத்தும்
பரமன் பழைய னூர்மேய
அத்தன் ஆலங் காடன்றன்
அடிமைத் திறமே அன்பாகிச்
சித்தர் சித்தம் வைத்தபுகழ்ச்
சிறுவன் ஊரன் ஒண்டமிழ்கள்
பத்தும் பாடி ஆடுவார்
பரமன் அடியே பணிவாரே.
7.52.10

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஊர்த்துவதாண்டவேசுவரர், தேவியார் - வண்டார்குழலியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.53 திருக்கடவூர் மயானம்
பண் - பழம்பஞ்சுரம்

திருச்சிற்றம்பலம்
540 மருவார் கொன்றை மதிசூடி
மாணிக் கத்தின் மலைபோல
வருவார் விடைமேல் மாதோடு
மகிழ்ந்து பூதப் படைசூழத்
திருமால் பிரமன் இந்திரற்குந்
தேவர் நாகர் தானவர்க்கும்
பெருமான் கடவூர் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே.
7.53.1
541 விண்ணோர் தலைவர் வெண்புரிநூல்
மார்பர் வேத கீதத்தர்
கண்ணார் நுதலர் நகுதலையர்
கால காலர் கடவூரர்
எண்ணார் புரமூன் றெரிசெய்த
இறைவ ருமையோ ரொருபாகம்
பெண்ணா ணாவர் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே.
7.53.2
542 காயும் புலியின் அதளுடையர்
கண்டர் எண்டோ ட் கடவூரர்
தாயுந் தந்தை பல்லுயிர்க்குந்
தாமே யாய தலைவனார்
பாயும் விடையொன் றதுவேறிப்
பலிதேர்ந் துண்ணும் பரமேட்டி
பேய்கள் வாழும் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே.
7.53.3
543 நறைசேர் மலரைங் கணையானை
நயனத் தீயாற் பொடிசெய்த
இறையா ராவர் எல்லார்க்கும்
இல்லை யென்னா தருள்செய்வார்
பறையார் முழவம் பாட்டோ டு
பயிலுந் தொண்டர் பயில்கடவூர்ப்
பிறையார் சடையார் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே.
7.53.4
544 கொத்தார் கொன்றை மதிசூடிக்
கோள்நா கங்கள் பூணாக
மத்த யானை உரிபோர்த்து
மருப்பும் ஆமைத் தாலியார்
பத்தி செய்து பாரிடங்கள்
பாடி ஆடப் பலிகொள்ளும்
பித்தர் கடவூர் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே.
7.53.5
545 துணிவார் கீளுங் கோவணமுந்
துதைந்து சுடலைப் பொடியணிந்து
பணிமே லிட்ட பாசுபதர்
*பஞ்ச வடிமார் பினர்கடவூர்த்
திணிவார் குழையார் புரமூன்றுந்
தீவாய்ப் படுத்த சேவகனார்
பிணிவார் சடையார் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே.
* பஞ்சவடியாவது மயிர்ப்பூணநூல். இது மாவிரதியரென்னும்
உட்சமயத்தாரணிவது. மேலும் அவர்களணியுமணி எலும்பினாலாகிய
மணிகள். இவற்றை மானக்கஞ்சாறநாயனார் புராணத்து 23-வது
திருவிருத்தத்தானுமுணர்க.
7.53.6
546 காரார் கடலின் நஞ்சுண்ட
கண்டர் கடவூர் உறைவாணர்
தேரார் அரக்கன் போய்வீழ்ந்து
சிதைய விரலா லூன்றினார்
ஊர்தான் ஆவ துலகேழும்
உடையார்க் கொற்றி யூராரூர்
பேரா யிரவர் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே.
7.53.7
547 வாடா முலையாள் தன்னோடும்
மகிழ்ந்து கானில் வேடுவனாய்க்
கோடார் கேழற் பின்சென்று
குறுகி விசயன் தவமழித்து
நாடா வண்ணஞ் செருச்செய்து
ஆவ நாழி நிலையருள்செய்
பீடார் சடையார் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே.
7.53.8
548 வேழம் உரிப்பர் மழுவாளர்
வேள்வி அழிப்பர் சிரமறுப்பர்
ஆழி அளிப்பர் அரிதனக்கன்
றானஞ் சுகப்பர் அறமுரைப்பர்
ஏழைத் தலைவர் கடவூரில்
இறைவர் சிறுமான் மறிக்கையர்
பேழைச் சடையர் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே.
7.53.9
549 மாட மல்கு கடவூரில்
மறையோ ரேத்தும் மயானத்துப்
பீடை தீர அடியாருக்
கருளும் பெருமா னடிகள்சீர்
நாடி நாவ லாரூரன்
நம்பி சொன்ன நற்றமிழ்கள்
பாடு மடியார் கேட்பார்மேற்
பாவ மான பறையுமே.
7.53.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசுவரர், தேவியார் - மலர்க்குழல்மின்னம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.54 திருவொற்றியூர்
பண் - தக்கேசி

திருச்சிற்றம்பலம்
550 அழுக்கு மெய்கொடுன் றிருவடி அடைந்தேன்
அதுவும் நான்படப் பாலதொன் றானாற்
பிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடிகேள்
பிழைப்பன் ஆகிலுந் திருவடிப் பிழையேன்
வழுக்கி வீழினுந் திருப்பெய ரல்லால்
மற்று நான்அறி யேன்மறு மாற்றம்
ஒழுக்க என்கணுக் கொருமருந் துரையாய்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே.
7.54.1
551 கட்ட னேன்பிறந் தேன்உனக் காளாய்
காதற் சங்கிலி காரண மாக
எட்டி னாற்றிக ழுந்திரு மூர்த்தி
என்செய் வான்அடி யேன்எடுத் துரைக்கேன்
பெட்ட னாகிலுந் திருவடிப் பிழையேன்
பிழைப்ப னாகிலுந் திருவடிக் கடிமை
ஒட்டி னேன்எனை நீசெய்வ தெல்லாம்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே.
7.54.2
552 கங்கை தங்கிய சடையுடைக் கரும்பே
கட்டி யேபலர்க் குங்களை கண்ணே
அங்கை நெல்லியின் பழத்திடை அமுதே
அத்தா என்னிடர் ஆர்க்கெடுத் துரைக்கேன்
சங்கும் இப்பியுஞ் சலஞ்சலம் முரல
வயிரம் முத்தொடு பொன்மணி வரன்றி
ஒங்கு மாகடல் ஓதம்வந் துலவும்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே.
7.54.3
553 ஈன்று கொண்டதோர் சுற்றமொன் றன்றா
லியாவ ராகிலென் அன்புடை யார்கள்
தோன்ற நின்றருள் செய்தளித் திட்டாற்
சொல்லு வாரைஅல் லாதன சொல்லாய்
மூன்று கண்ணுடை யாய்அடி யேன்கண்
கொள்வ தேகணக் குவழக் காகில்
ஊன்று கோல்எனக் காவதொன் றருளாய்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே.
7.54.4
554 வழித்த லைப்படு வான்முயல் கின்றேன்
உன்னைப் போல்என்னைப் பாவிக்க மாட்டேன்
சுழித்த லைப்பட்ட நீரது போலச்
சுழல்கின் றேன்சுழல் கின்றதென் னுள்ளங்
கழித்த லைப்பட்ட நாயது போல
ஒருவன் கோல்பற்றிக் கறகற இழுக்கை
ஒழித்து நீயரு ளாயின செய்யாய்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே.
7.54.5
555 மானை நோக்கியர் கண்வலைப் பட்டு
வருந்தி யானுற்ற வல்வினைக் கஞ்சித்
தேனை ஆடிய கொன்றையி னாய்உன்
சீல முங்குண முஞ்சிந்தி யாதே
நானும் இத்தனை வேண்டுவ தடியேன்
உயிரொ டும்நர கத்தழுந் தாமை
ஊனம் உள்ளன தீர்த்தருள் செய்யாய்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே.
7.54.6
556 மற்றுத் தேவரை நினைந்துனை மறவேன்
எஞ்சி னாரொடு வாழவும் மாட்டேன்
பெற்றி ருந்து பெறாதொழி கின்ற
பேதை யேன்பிழைத் திட்டதை அறியேன்
முற்றும் நீஎனை முனிந்திட அடியேன்
கடவ தென்னுனை நான்மற வேனேல்
உற்ற நோயுறு பிணிதவிர்த் தருளாய்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே.
7.54.7
557 கூடினாய் மலை மங்கையை நினையாய்
கங்கை ஆயிர முகம்உடை யாளைச்
சூடி னாயென்று சொல்லிய புக்கால்
தொழும்ப னேனுக்குஞ் சொல்லலு மாமே
வாடி நீயிருந் தென்செய்தி மனனே
வருந்தி யானுற்ற வல்வினைக் கஞ்சி
ஊடி னாலினி ஆவதொன் றுண்டே
ஒற்றி யூரெனும் ஊருறை வானே.
7.54.8
558 மகத்திற் புக்கதோர் சனிஎனக் கானாய்
மைந்த னேமணி யேமண வாளா
அகத்திற் பெண்டுகள் நானொன்று சொன்னால்
அழையேற் போகுரு டாஎனத் தரியேன்
முகத்திற் கண்ணிழந் தெங்ஙனம் வாழ்கேன்
முக்க ணாமுறை யோமறை யோதீ
உகைக்குந் தண்கடல் ஓதம்வந் துலவும்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே.
7.54.9
559 ஓதம் வந்துல வுங்கரை தன்மேல்
ஒற்றி யூருறை செல்வனை நாளும்
ஞாலந் தான்பர வப்படு கின்ற
நான்ம றையங்கம் ஓதிய நாவன்
சீலந் தான்பெரி தும்மிக வல்ல
சிறுவன் வன்றொண்டன் ஊரன் உரைத்த
பாடல் பத்திவை வல்லவர் தாம்போய்ப்
பரகதி திண்ணம் நண்ணுவர் தாமே.
7.54.10

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - படம்பக்கநாதர் - மாணிக்கத்தியாகர்,
தேவியார் - வடிவுடையம்மை.

இது உன்னைப்பிரிந்துபோவதில்லையென்று சங்கிலி நாச்சியாருக்குச்
சூளுரைசெய்து மணந்துமகிழ்ந் திருக்கையில் திருவாரூர்
வீதிவிடங்கப்பெருமானுடய திருவோலக்கத் தரிசனஞ்செய்வதற்கின்றி
நெடுநாள் பிரிந்திருக்கின்றோமேயென்னும் ஞாபகமுண்டாகப்
பரமசிவத்தின் திருவிளையாட்டால் முன்கூறிய சூளுரையைமறந்து
திருவொற்றியூரெல்லையைக் கடந்தவளவில் நேத்திரங்களுக்கு
அபாவந்தோன்ற வருந்தித் துதிசெய்த பதிகம்.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.55 திருப்புன்கூர்
பண் - தக்கேசி

திருச்சிற்றம்பலம்
560 அந்த ணாளன்உன் அடைக்கலம் புகுத
அவனைக் காப்பது காரண மாக
வந்த காலன்றன் ஆருயி ரதனை
வவ்வி னாய்க்குன்றன் வன்மைகண் டடியேன்
எந்தை நீயெனை நமன்றமர் நலியின்
இவன்மற் றென்னடி யானென விலக்குஞ்
சிந்தை யால்வந்துன் றிருவடி அடைந்தேன்
செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே.
7.55.1
561 வைய கமுற்றும் மாமழை மறந்து
வயலில் நீரிலை மாநிலந் தருகோம்
உய்யக் கொள்கமற் றெங்களை என்ன
ஒலிகொள் வெண்முகி லாய்ப்பரந் தெங்கும்
பெய்யும் மாமழைப் பெருவெள்ளந் தவிர்த்துப்
பெயர்த்தும் பன்னிரு வேலிகொண் டருளுஞ்
செய்கை கண்டுநின் றிருவடி அடைந்தேன்
செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே.
7.55.2
562 ஏத நன்னிலம் ஈரறு வேலி
ஏயர் கோனுற்ற இரும்பிணி தவிர்த்துக்
கோத னங்களின் பால்கறந் தாட்டக்
கோல வெண்மணற் சிவன்றன்மேற் சென்ற
தாதை தாளற எறிந்ததண் டிக்குன்
சடைமி சைமலர் அருள்செயக் கண்டு
பூத ஆளிநின் பொன்னடி அடைந்தேன்
பூம்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே.
7.55.3
563 நற்ற மிழ்வல்ல ஞானசம் பந்தன்
நாவினுக் கரையன் நாளைப்போ வானுங்
கற்ற சூதன்நற் சாக்கியன் சிலந்தி
கண்ணப் பன்கணம் புல்லனென் றிவர்கள்
குற்றஞ் செய்யினுங் குணமெனக் கருதுங்
கொள்கை கண்டுநின் குரைகழல் அடைந்தேன்
பொற்றி ரள்மணிக் கமலங்கள் மலரும்
பொய்கை சூழ்திருப் புன்கூர் உளானே.
7.55.4
564 கோல மால்வரை மத்தென நாட்டிக்
கோள ரவுசுற் றிக்கடைந் தெழுந்த
ஆல நஞ்சுகண் டவர்மிக இரிய
அமரர் கட்கருள் புரிவது கருதி
நீல மார்கடல் விடந்தனை உண்டு
கண்டத் தேவைத்த பித்தநீ செய்த
சீலங் கண்டுநின் றிருவடி அடைந்தேன்
செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே.
7.55.5
565 இயக்கர் கின்னரர் யமனொடு வருணர்
இயங்கு தீவளி ஞாயிறு திங்கள்
மயக்கம் இல்புலி வானரம் நாகம்
வசுக்கள் வானவர் தானவர் எல்லாம்
அயர்ப்பொன் றின்றிநின் றிருவடி அதனை
அர்ச்சித் தார்பெறும் ஆரருள் கண்டு
திகைப்பொன் றின்றிநின் றிருவடி அடைந்தேன்
செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே.
7.55.6
566 போர்த்த நீள்செவி யாளர்அந் தணர்க்குப்
பொழில்கொள் ஆல்நிழற் கீழறம் புரிந்து
பார்த்த னுக்கன்று பாசுப தங்கொடுத்
தருளி னாய்பண்டு பகீரதன் வேண்ட
ஆர்த்து வந்திழி யும்புனற் கங்கை
நங்கை யாளைநின் சடைமிசைக் கரந்த
தீர்த்த னேநின்றன் றிருவடி அடைந்தேன்
செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே.
7.55.7
567 மூவெ யில்செற்ற ஞான்றுய்ந்த மூவரில்
இருவர் நின்றிருக் கோயிலின் வாய்தல்
காவ லாளரென் றேவிய பின்னை
ஒருவ நீகரி காடரங் காக
மானை நோக்கியோர் மாநடம் மகிழ
மணிமு ழாமுழக் கஅருள் செய்த
தேவ தேவநின் றிருவடி அடைந்தேன்
செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே.
7.55.8
568 அறிவி னால்மிக்க அறுவகைச் சமயம்
அவ்வ வர்க்கங்கே ஆரருள் புரிந்து
எறியு மாகடல் இலங்கையர் கோனைத்
துலங்க மால்வரைக் கீழடர்த் திட்டுக்
குறிகொள் பாடலின் இன்னிசை கேட்டுக்
கோல வாளொடு நாளது கொடுத்த
செறிவு கண்டுநின் றிருவடி அடைந்தேன்
செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே.
7.55.9
569 கம்ப மால்களிற் றின்னுரி யானைக்
காமற் காய்ந்ததோர் கண்ணுடை யானைச்
செம்பொ னேயொக்குந் திருவுரு வானைச்
செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானை
உம்பர் ஆளியை உமையவள் கோனை
ஊரன் வன்றொண்டன் உள்ளத் தாலுகந்
தன்பி னாற்சொன்ன அருந்தமிழ் ஐந்தோ
டைந்தும் வல்லவர் அருவினை இலரே.
7.55.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சிவலோகநாதர், தேவியார் - சொக்கநாயகியம்மை.

சுந்தரமூர்த்திசுவாமிகள் திருப்புன்கூருக்கெழுந்தருளியபோது அந்தத்தலத்தார்
கண்டு தொழுது சுவாமீ! இங்கு நெடுநாளாக மழைபொழிதலின்றி
வருந்துகிறோம், ஆதலால் கிருபைபாலிக்கவேண்டுமென்று விண்ணப்பஞ்செய்ய,
மழைபொழிந்தால் சுவாமிக்கியாது தருவீர்களென்ன, அவர்கள் பன்னிரண்டு
வேலி நிலந்தருகிறோமென்னக் கிருபை கூர்ந்து இந்தப்பதிகமோதியருளலும்,
மழை அதிகமாய்ப்பெய்ய அவர்களுடையவேண்டுதலினால் மழை தணிந்து
பெய்யும்படிசெய்து முன்னமவர்கள் சொல்லிய பன்னிரண்டுவேலி நிலமேயன்றி
மீட்டும் பன்னிரண்டுவேலி நிலங்கொடுக்கப்பெற்றருளியது.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.56 திருநீடூர்
பண் - தக்கேசி

திருச்சிற்றம்பலம்
570 ஊர்வ தோர்விடை ஒன்றுடை யானை
ஒண்ணு தல்தனிக் கண்ணுத லானைக்
கார தார்கறை மாமிடற் றானைக்
கருத லார்புரம் மூன்றெரித் தானை
நீரில் வாளை வரால்குதி கொள்ளும்
நிறைபு னற்கழ னிச்செல்வ நீடூர்ப்
பாரு ளார்பர வித்தொழ நின்ற
பரம னைப்பணி யாவிட லாமே.
7.56.1
571 துன்னு வார்சடைத் தூமதி யானைத்
துயக்கு றாவகை தோன்றுவிப் பானைப்
பன்னு நான்மறை பாடவல் லானைப்
பார்த்த னுக்கருள் செய்தபி ரானை
என்னை இன்னருள் எய்துவிப் பானை
ஏதி லார்தமக் கேதிலன் றன்னைப்
புன்னை மாதவி போதலர் நீடூர்ப்
புனித னைப்பணி யாவிட லாமே.
7.56.2
572 கொல்லும் மூவிலை வேலுடை யானைக்
கொடிய காலனை யுங்குமைத் தானை
நல்ல வாநெறி காட்டுவிப் பானை
நாளும் நாம்உகக் கின்ற பிரானை
அல்ல லில்லரு ளேபுரி வானை
ஆடு நீர்வயல் சூழ்புனல் நீடூர்க்
கொல்லை வெள்ளெரு தேறவல் லானைக்
கூறி நாம்பணி யாவிட லாமே.
7.56.3
573 தோடு காதிடு தூநெறி யானைத்
தோற்ற முந்துறப் பாயவன் றன்னைப்
பாடு மாமறை பாடவல் லானைப்
பைம்பொ ழிற்குயில் கூவிட மாடே
ஆடு மாமயில் அன்னமோ டாட
அலைபு னற்கழ னித்திரு நீடூர்
வேட னாயபி ரானவன் றன்னை
விரும்பி நாம்பணி யாவிட லாமே.
7.56.4
574 குற்ற மொன்றடி யாரிலர் ஆனாற்
கூடு மாறத னைக்கொடுப் பானைக்
கற்ற கல்வியி லும்மினி யானைக்
காணப் பேணும வர்க்கெளி யானை
முற்ற அஞ்சுந் துறந்திருப் பானை
மூவ ரின்முத லாயவன் றன்னைச்
சுற்று நீள்வயல் சூழ்திரு நீடூர்த்
தோன்ற லைப்பணி யாவிட லாமே.
7.56.5
575 காடில் ஆடிய கண்ணுத லானைக்
கால னைக்கடிந் திட்டபி ரானைப்
பாடி ஆடும்பரி சேபுரிந் தானைப்
பற்றி னோடுசுற் றம்மொழிப் பானைத்
தேடி மாலயன் காண்பரி யானைச்
சித்த முந்தெளி வார்க்கெளி யானைக்
கோடி தேவர்கள் கும்பிடு நீடூர்க்
கூத்த னைப்பணி யாவிட லாமே.
7.56.6
576 விட்டி லங்கெரி யார்கையி னானை
வீடி லாதவி யன்புக ழானைக்
கட்டு வாங்கந் தரித்தபி ரானைக்
காதி லார்கன கக்குழை யானை
விட்டி லங்குபுரி நூலுடை யானை
வீந்த வர்தலை யோடுகை யானைக்
கட்டி யின்கரும் போங்கிய நீடூர்க்
கண்டு நாம்பணி யாவிட லாமே.
7.56.7
577 மாய மாய மனங்கெடுப் பானை
மனத்து ளேமதி யாய்இருப் பானைக்
காய மாயமும் ஆக்குவிப் பானைக்
காற்று மாய்க்கன லாய்க்கழிப் பானை
ஓயு மாறுரு நோய்புணர்ப் பானை
ஒல்லை வல்வினை கள்கெடுப் பானை
வேய்கொள் தோள்உமைப் பாகனை நீடூர்
வேந்த னைப்பணி யாவிட லாமே.
7.56.8
578 கண்ட முங்கறுத் திட்டபி ரானைக்
காணப் பேணும வர்க்கெளி யானைத்
தொண்ட ரைப்பெரி தும்முகப் பானைத்
துன்ப முந்துறந் தின்பினி யானைப்
பண்டை வல்வினை கள்கெடுப் பானைப்
பாக மாமதி யாயவன் றன்னைக்
கெண்டை வாளை கிளர்புனல் நீடூர்க்
கேண்மை யாற்பணி யாவிட லாமே.
7.56.9
579 அல்லல் உள்ளன தீர்த்திடு வானை
அடைந்த வர்க்கமு தாயிடு வானைக்
கொல்லை வல்லர வம்மசைத் தானைக்
கோல மார்கரி யின்னுரி யானை
நல்ல வர்க்கணி யானவன் றன்னை
நானுங் காதல்செய் கின்றபி ரானை
எல்லி மல்லிகை யேகமழ் நீடூர்
ஏத்தி நாம்பணி யாவிட லாமே.
7.56.10
580 பேரோர் ஆயிர மும்முடை யானைப்
பேரி னாற்பெரி தும்மினி யானை
நீரூர் வார்சடை நின்மலன் றன்னை
நீடூர் நின்றுகந் திட்டபி ரானை
ஆரூ ரன்னடி காண்பதற் கன்பாய்
ஆத ரித்தழைத் திட்டவிம் மாலை
பாரூ ரும்பர வித்தொழ வல்லார்
பத்த ராய்முத்தி தாம்பெறு வாரே.
7.56.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சோமநாதேசுவரர், தேவியார் - வேயுறுதோளியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.57 திருவாழ்கொளிபுத்தூர்
பண் - தக்கேசி

திருச்சிற்றம்பலம்
581 தலைக்க லன்றலை மேல்தரித் தானைத்
தன்னைஎன் னைநினைக் கத்தரு வானைக்
கொலைக்கை யானைஉரி போர்த்துகந் தானைக்
கூற்றுதைத் தகுரை சேர்கழ லானை
அலைத்த செங்கண்விடை ஏறவல் லானை
ஆணை யால்அடி யேன்அடி நாயேன்
மலைத்தசெந் நெல்வயல் வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
7.57.1
582 படைக்கட் சூலம் பயிலவல் லானைப்
பாவிப் பார்மனம் பரவிக்கொண் டானைக்
கடைக்கட்பிச் சைக்கிச்சை காதலித் தானைக்
காமன்ஆ கந்தனைக் கட்டழித் தானைச்
சடைக்கட் கங்கையைத் தாழவைத் தானைத்
தண்ணீர்மண் ணிக்கரை யானைத்தக் கானை
மடைக்கண்நீ லம்அலர் வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
7.57.2
583 வெந்த நீறுமெய் பூசவல் லானை
வேத மால்விடை ஏறவல் லானை
அந்தம் ஆதிஅறி தற்கரி யானை
ஆறலைத் தசடை யானைஅம் மானைச்
சிந்தை யென்றடு மாற்றறுப் பானைத்
தேவ தேவனென் சொல்முனி யாதே
வந்தென் உள்ளம்புகும் வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
7.57.3
584 தடங்கை யான்மலர் தூய்த்தொழு வாரைத்
தன்னடிக் கேசெல்லு மாறுவல் லானைப்
படங்கொள் நாகம்அரை ஆர்த்துகந் தானைப்
பல்லின்வெள் ளைத்தலை ஊணுடை யானை
நடுங்க ஆனைஉரி போர்த்துகந் தானை
நஞ்சம் உண்டுகண் டங்கறுத் தானை
மடந்தை பாகனை வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
7.57.4
585 வளைக்கை முன்கைமலை மங்கை மணாளன்
மார னார்உடல் நீறெழச் செற்றுத்
துளைத்த அங்கத்தொடு தூமலர்க் கொன்றை
தோலும்நூ லுந்துதைந் தவரை மார்பன்
திளைக்குந் தெவ்வர் திரிபுரம் மூன்றும்
அவுணர் பெண்டிரும் மக்களும் வேவ
வளைத்த வில்லியை வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
7.57.5.
586 திருவின் நாயகன் ஆகிய மாலுக்
கருள்கள் செய்திடும் தேவர் பிரானை
உருவி னானைஒன் றாவறி வொண்ணா
மூர்த்தி யைவிச யற்கருள் செய்வான்
செருவில் ஏந்தியோர் கேழற்பின் சென்று
செங்கண் வேடனாய் என்னொடும் வந்து
மருவி னான்றனை வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
7.57.6
587 எந்தை யைஎந்தை தந்தை பிரானை
ஏத மாயஇடர் தீர்க்கவல் லானை
முந்தி யாகிய மூவரின் மிக்க
மூர்த்தி யைமுதற் காண்பரி யானைக்
கந்தின் மிக்ககரி யின்மருப் போடு
கார கில்கவ ரிம்மயிர் மண்ணி
வந்து வந்திழி வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
7.57.7
588 தேனை ஆடிய கொன்றையி னானைத்
தேவர் கைதொழுந் தேவர் பிரானை
ஊனம் ஆயின தீர்க்க வல்லானை
ஒற்றை ஏற்றனை நெற்றிக்கண் ணானைக்
கான ஆனையின் கொம்பினைப் பீழ்ந்த
கள்ளப் பிள்ளைக்குங் காண்பரி தாய
வான நாடனை வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
7.57.8
589 காளை யாகி வரையெடுத் தான்றன்
கைகள் இற்றவன் மொய்தலை எல்லாம்
மூளை போத ஒருவிரல் வைத்த
மூர்த்தி யைமுதல் காண்பரி யானைப்
பாளை தெங்கு பழம்விழ மண்டிச்
செங்கண் மேதிகள் சேடெறிந் தெங்கும்
வாளை பாய்வயல் வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
7.57.9
590 திருந்த நான்மறை பாடவல் லானைத்
தேவர்க் குந்தெரி தற்கரி யானைப்
பொருந்த மால்விடை ஏறவல் லானைப்
பூதிப் பைபுலித் தோலுடை யானை
இருந்துண் தேரரும் நின்றுணுஞ் சமணும்
ஏச நின்றவன் ஆருயிர்க் கெல்லாம்
மருந்த னான்றனை வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
7.57.10
591 மெய்யனை மெய்யின் நின்றுணர் வானை
மெய்யி லாதவர் தங்களுக் கெல்லாம்
பொய்ய னைப்புரம் மூன்றெரித் தானைப்
புனித னைப்புலித் தோலுடை யானைச்
செய்ய னைவெளி யதிரு நீற்றில்
திகழு மேனியன் மான்மறி ஏந்தும்
மைகொள் கண்டனை வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
7.57.11
592 வளங்கி ளர்பொழில் வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனென்
றுளங்கு ளிர்தமிழ் ஊரன்வன் றொண்டன்
சடையன் காதலன் வனப்பகை அப்பன்
நலங்கி ளர்வயல் நாவலர் வேந்தன்
நங்கை சிங்கடி தந்தை பயந்த
பலங்கி ளர்தமிழ் பாடவல் லார்மேல்
பறையு மாஞ்செய்த பாவங்கள் தானே.
7.57.12

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாணிக்கவண்ணர்,
தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.58 திருக்கழுமலம்
பண் - தக்கேசி

திருச்சிற்றம்பலம்
593 சாதலும் பிறத்தலுந் தவிர்த்தெனை வகுத்துத்
தன்னருள் தந்தஎந் தலைவனை மலையின்
மாதினை மதித்தங்கோர் பால்கொண்ட மணியை
வருபுனல் சடையிடை வைத்தஎம் மானை
ஏதிலென் மனத்துக்கோர் இரும்புண்ட நீரை
எண்வகை ஒருவனை எங்கள்பி ரானைக்
காதில்வெண் குழையனைக் கடல்கொள மிதந்த
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
7.58.1
594 மற்றொரு துணையினி மறுமைக்குங் காணேன்
வருந்தலுற் றேன்மற வாவரம் பெற்றேன்
சுற்றிய சுற்றமுந் துணையென்று கருதேன்
துணையென்று நான்தொழப் பட்டஒண் சுடரை
முத்தியும் ஞானமும் வானவர் அறியா
முறைமுறை பலபல நெறிகளுங் காட்டிக்
கற்பனை கற்பித்த கடவுளை அடியேன்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
7.58.2
595 திருத்தினை நகர்உறை சேந்தன் அப்பன்என்
செய்வினை அறுத்திடுஞ் செம்பொனை அம்பொன்
ஒருத்தனை அல்லதிங் காரையும் உணரேன்
உணர்வுபெற் றேன்உய்யுங் காரணந் தன்னால்
விருத்தனைப் பாலனைக் கனவிடை விரவி
விழித்தெங்குங் காணமாட் டாதுவிட் டிருந்தேன்
கருத்தனை நிருத்தஞ்செய் காலனை வேலைக்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
7.58.3
596 மழைக்கரும் பும்மலர்க் கொன்றையி னானை
வளைக்கலுற் றேன்மற வாமனம் பெற்றேன்
பிழைத்தொரு கால்இனிப் போய்ப்பிற வாமைப்
பெருமைபெற் றேன்பெற்ற தார்பெறு கிற்பார்
குழைக்கருங் கண்டனைக் கண்டுகொள் வானே
பாடுகின் றேன்சென்று கூடவும் வல்லேன்
கழைக்கரும் புங்கத லிப்பல சோலைக்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
7.58.4
597 குண்டலங் குழைதிகழ் காதனே என்றுங்
கொடுமழு வாட்படைக் குழகனே என்றும்
வண்டலம் பும்மலர்க் கொன்றையன் என்றும்
வாய்வெரு வித்தொழு தேன்விதி யாலே
பண்டைநம் பலமன முங்களைந் தொன்றாய்ப்
பசுபதி பதிவின விப்பல நாளுங்
கண்டலங் கழிக்கரை ஓதம்வந் துலவுங்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
7.58.5
598 வரும்பெரும் வல்வினை என்றிருந் தெண்ணி
வருந்தலுற் றேன்மற வாமனம் பெற்றேன்
விரும்பிஎன் மனத்திடை மெய்குளிர்ப் பெய்தி
வேண்டிநின் றேதொழு தேன்விதி யாலே
அரும்பினை அலரினை அமுதினைத் தேனை
ஐயனை அறவனென் பிறவிவேர் அறுக்குங்
கரும்பினைப் பெருஞ்செந்நெல் நெருங்கிய கழனிக்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
7.58.6
599 அயலவர் பரவவும் அடியவர் தொழவும்
அன்பர்கள் சாயலுள் அடையலுற் றிருந்தேன்
முயல்பவர் பின்சென்று முயல்வலை யானை
படுமென மொழிந்தவர் வழிமுழு தெண்ணிப்
புயலினைத் திருவினைப் பொன்னின தொளியை
மின்னின துருவை என்னிடைப் பொருளைக்
கயலினஞ் சேலொடு வயல்விளை யாடுங்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
7.58.7
600 நினைதரு பாவங்கள் நாசங்க ளாக
நினைந்துமுன் தொழுதெழப் பட்டஒண் சுடரை
மலைதரு மலைமகள் கணவனை வானோர்
மாமணி மாணிக்கத் தைம்மறைப் பொருளைப்
புனைதரு புகழினை எங்கள தொளியை
இருவரும் ஒருவனென் றுணர்வரி யவனைக்
கனைதரு கருங்கடல் ஓதம்வந் துலவுங்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
7.58.8
601 மறையிடைத் துணிந்தவர் மனையிடை இருப்ப
வஞ்சனை செய்தவர் பொய்கையும் மாயத்
துறையுறக் குளித்துள தாகவைத் துய்த்த
உண்மை யெனுந்தக வின்மையை ஓரேன்
பிறையுடைச் சடையனை எங்கள்பி ரானைப்
பேரரு ளாளனைக் காரிருள் போன்ற
கறையணி மிடறுடை அடிகளை அடியேன்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
7.58.9
602 செழுமலர்க் கொன்றையுங் கூவிள மலரும்
விரவிய சடைமுடி அடிகளை நினைந்திட்
டழுமலர்க் கண்ணிணை அடியவர்க் கல்லால்
அறிவரி தவன்றிரு வடியிணை இரண்டுங்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டூரன்
சடையன்றன் காதலன் பாடிய பத்துந்
தொழுமலர் எடுத்தகை அடியவர் தம்மைத்
துன்பமும் இடும்பையுஞ் சூழகி லாவே.
7.58.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரியீசுவரர்,
தேவியார் - திருநிலைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics
»  சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஏழாம் திருமுறை இரண்டாம் பகுதி பாடல்கள் (518 - 1026)-2
»  சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஏழாம் திருமுறை இரண்டாம் பகுதி பாடல்கள் (518 - 1026)-3
»  சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஏழாம் திருமுறை இரண்டாம் பகுதி பாடல்கள் (518 - 1026)-4
»  சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஏழாம் திருமுறை இரண்டாம் பகுதி பாடல்கள் (518 - 1026)-5
» சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஏழாம் திருமுறை இரண்டாம் பகுதி பாடல்கள் (518 - 1026)-6

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum