இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான்

Go down

திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் Empty திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான்

Post by ஆனந்தபைரவர் Mon Nov 29, 2010 3:18 pm

திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் 18sanibahavaan
சிவஸ்தலம் பெயர் திருநள்ளாறு
இறைவன் பெயர் தர்ப்பாரண்யேஸ்வரர்
இறைவி பெயர் பிராணம்பிகை, போகமார்த்த பூன்முலையாள்
பதிகம் திருநாவுக்கரசர் - 2
திருஞானசம்பந்தர் - 4 (இவற்றில் ஒரு பதிகம் திருநள்ளாறு, திருஆலவாய் இரண்டிற்கும் பொதுவானது)
சுந்தரர் - 1
எப்படிப் போவது காரைக்காலில் இருந்து மேற்கே 6 கி.மி. தொலைவில் திருநள்ளாறு ஸ்தலம் இருக்கிறது. கும்பகோணத்திலிருந்து 60 கி.மீ. தொலைவிலும், மயிலாடுதுறையிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும் உள்ளது. பேரளம், காரைக்கால், கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் முதலிய இடங்களிலிருந்து இத்தலத்திற்கு அடிக்கடி பேருந்துகள் செல்கின்றன. திருநள்ளாறு நவக்ரஹ ஸ்தலங்களில் சனி பகவானுக்கு உரிய ஸ்தலம் ஆகும். பாடல் பெற்ற சிவஸ்தலம் திருதருமபுரம் அருகிலுள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில்
திருநள்ளாறு
திருநள்ளாறு அஞ்சல்
காரைக்கால் வட்டம்
புதுச்சேரி மாநிலம்
PIN - 609607

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
சிறப்புக்கள்

இது, முசுகுந்தச் சக்கரவர்த்தி எழுந்தருளுவித்த சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று (தியாகராஜர்-நகவிடங்கர்;நடனம்-உன்மத்த நடனம்).

இது,சனிபகவான் சன்னதிச் சிறப்புடையது. இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்ட பின்னரே சனிஸ்வரன் சன்னிதிக்குச் செல்ல வேண்டும். இத்தலத்தின் போகமார்த்த பூண்முலையாள் என்ற மேலே குறிக்கப்பட்டுள்ள பதிகத்தைப் பாடி சிவபெருமானை வழிபட சனி தோஷம் விலகும்..

இது,தருமை ஆதீனக் கோவிலாகும்.

தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம் ஏழு நிலை ராஜகோபுரம் கொண்டு எழிலுடன் விளங்குகிறது. இத்தலம் தியாகராஜருக்குரிய சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள தியாகராஜர் தகவிடங்கர் எனப்படுகிறார். அவர் ஆடும் நடனம் உன்மத்த நடனம் எனப்படும். இத்தலத்தின் மூலவராக சிவபெருமான் தர்ப்பாரண்யேஸ்வரர் என்ற பெயருடன் அருள் பாலித்து வந்தாலும், இத்தலத்தின் பெருமைக்கு மூலகாரணமாக இருப்பவர் இத்தலத்தில் தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ள சனீஸ்வரர் ஆவார். நவக்கிரக ஸ்தலங்களில் சனி பகவானுக்கு உரிய ஸ்தலமாக திருநள்ளாறு விளங்குகிறது. சனீஸ்வரன் தனி சன்னதி கொண்டு அருள்பாலிப்பதால் இக் கோயிலில் நவகிரகங்கள் கிடையாது. மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரர் சந்நிதிக்கும், இறைவி பிராணம்பிகை சந்நிதிக்கும் இடையில் சனீஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளது. சனிக்கழமைகளில் சனீஸ்வரரை வழிபடுவதற்காக பக்தர்கள் பெருமளவில் இங்கு கூடுகிறார்கள். இக் கோயிலில் சனி பகவானுக்கு உகந்த காக்கை வாகனம் தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. விசேஷ காலங்களில் சனீஸ்வர பகவான் தங்கக் காகம் வாகனத்தில் அமர்ந்து வீதி உலா வருவார். இந்த தலத்திற்கு வந்து சனீஸ்வரரையும், தர்ப்பாரண்யேஸ்வரரரையும் வணங்குபவர்களுக்கு சனி பாதிப்பைத் தாங்கிக்கொள்ளும் மன திடமும், பிரச்னைகளிலிருந்து மீளும் வழியும் கிட்டும். நல்வாழ்வுக்கும் வழி பிறக்கும்.

நள தீர்த்தம்: இக்கோவிலுக்கு அருகில் நள தீர்த்தம் என்ற பெயரில் ஒரு பெரிய குளம் இருக்கிறது. சனியின் ஆதிக்கத்திற்கு உள்ளான நளச் சக்கரவர்த்தி பல துன்பங்களை அனுபவித்தான். கடைசியில் இத்தலம் வந்து இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சனி பகவானையும், இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரரையும் வழிபட்டு துன்பம் நீங்கப் பெற்றான். நளன் நீராடிய தீர்த்தம் அவன் பெயரால் நள தீர்த்தம் என்று பெயர் பெற்றது. நள தீர்த்தம் தவிர, பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம் உள்ளிட்டவையும் இத்தலத்தில் உள்ளன. சனீஸ்வரன் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனிப் பெயர்ச்சியின் போது அவர் அவர்கள் ஜாதகத்தின் தன்மைக்குத் தக்கவாறு நன்மை தீமைகள் நடைபெறகூடும் என்பதால் இந்நாளில் சனிபகவானுக்கு தீபமேற்றி வழிபட்டால் நன்மை உண்டாகும் என்பது மக்கள் நம்பிக்கை. இதனால் ஒவ்வொரு சனிப் பெயர்ச்சியின் போதும் லக்ஷக்கணக்கில் மக்கள் இங்கு வந்து நள தீர்த்தத்தில் நீராடி சனி பகவானையும், இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரரையும் வழிபாடு செய்கின்றனர்.



பச்சைப் பதிகம்: திருஞானசம்பந்தரின் இத்தலத்திற்கான "போகமார்த்த பூன்முலையாள்" என்று தொடங்கும் பதிகம் "பச்சைப் பதிகம்" என்ற சிறப்புடையது. சம்பந்தரை மதுரையில் சமணர்கள் வாதிற்கு அழைத்தனர். அனல் வாதம் மற்றும் புணல் வாதம் செய்வது என்றும் அதில் வெல்பவர் சமயமே உயர்ந்தது என்று மதுரை மன்னர் முன்னிலையில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி சமணர்கள் தங்கள் சமயக் கருத்துக்களை ஒரு ஏட்டில் எழுதி அதை தீயில் இட்டனர். ஏடு தீயில் எரிந்து சாம்பலாயிற்று. அதன் பின் சம்பந்தர் முறை வரும் போது அவர் திருமுறை ஏட்டில் கயிறு சார்த்தி பார்த்த போது திருநள்ளாறு தலத்திற்கான "போகமார்த்த பூன்முலையாள்" என்ற பதிகம் வந்தது. சம்பந்தர் அதை தீயில் இட்டார். ஏடு தீயில் கருகாமல் பச்சை ஏடாகவே இருந்தது. சமணர்கள் வாதில் தோற்றனர். மதுரை மன்னனும் சமண சமயத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மாறினான். இவ்வாறு பாண்டிய நாட்டில் சைவம் தழைக்க காரணமாக இருந்த பதிகம் பெற்ற பெருமையை உடையது திருநள்ளாறு தலம்.

கோவில் அமைப்பு: நான்கு வீதிகளுக்கு நடுவில் கோயில் அமைந்துள்ளது. உயர்ந்த ராஜகோபுரம். அதற்கு முன்புள்ள முற்றம் மண்டபமாக்கப்பட்டுள்ளது. இங்கு வடபுறம் அலுவலகமும் தென்புறம் இடையனார் கோயிலும் உள்ளது. விசாலமான பிராகாரத்துடனும், உயர்ந்த சுற்றுமதில்களுடனும் ஆலயம் அரைந்துள்ளது. சுவரில் நளன் வரலாறு வண்ண ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது. வசந்த மண்டபம் உள்ளது. சனி பகவான் சந்நிதி முன்னால் மகர, கும்பராசிகளின் உருவங்கள் உள்ளன. மகர, கும்பராசிகளுக்குச் சனி அதிபதியாவார். அதையடுத்து அம்பாள் சந்நிதி உள்ளது. நின்ற திருக்கோலம். உற்சுற்றில் சுந்தரர், அறுபத்துமூவர் மூல உருவங்கள் உள்ளன. வரிசை முடிவில் நளன் வழிபட்ட நளேஸ்வரர் சிவலிங்கம் உள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தியும், விநாயகரும், பிரமனும் துர்க்கையும் உள்ளனர். சொர்ண கணபதி சந்நிதி தலவிநாயகர் சந்நிதியாகும். சப்தவிடங்கத் தலசிவலிங்கத் திருமேனிகளும், சுப்பிரமணியர் சந்நிதியும், ஆதிசேஷன், நளநாராயணப் பெருமாள், மகாலட்சுமி, பைரவர் முதலிய சந்நிதிகளும் உள்ளன. படிகளேறிச் செல்லும்போது பலிபீடம் சற்று விலகியிருப்பதைக் காணலாம். தினந்தோறும் ஆறுகால வழிபாடுகளும் செம்மையாக நடைபெறும் இத்திருக்கோயில் தருமையாதீனத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. வைகாசியில் பெருவிழா நடைபெறுகிறது.

மகாவிஷ்ணு, பிரம்மா, தேவேந்திரன், திசைப் பாலகர்கள், அகத்தியர், புலஸ்தியர், அர்ச்சுனன், நளன் முதலியோர் வழிபட்டுப் பேறு பெற்ற தலம் என்ற பெருமை உடையது திருநள்ளாறு திருத்தலம்..
[justify]


Last edited by Admin on Mon Nov 29, 2010 3:28 pm; edited 1 time in total
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் Empty Re: திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான்

Post by ஆனந்தபைரவர் Mon Nov 29, 2010 3:22 pm

திருநள்ளாறும் - திருஆலவாயும்-திருஞானசம்பந்த சுவாமிகள்

வினாவுரை

பண் - நட்டபாடை

65

பாடக மெல்லடிப் பாவையோடும் படுபிணக் காடிடம் பற்றிநின்று
நாடக மாடுநள் ளாறுடைய நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
சூடக முன்கை மடந்தைமார்கள் துணைவரொ டுந்தொழு தேத்திவாழ்த்த
ஆடக மாடம் நெருங்குகூடல் ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
1.7.1
66

திங்களம் போதுஞ் செழும்புனலுஞ் செஞ்சடை மாட்டயல் வைத்துகந்து
நங்கள் மகிழுநள் ளாறுடைய நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
பொங்கிள மென்முலை யார்களோடும் புனமயி லாட நிலாமுளைக்கும்
அங்கள கச்சுதை மாடக்கூடல் ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
1.7.2
67

தண்ணறு மத்தமுங் கூவிளமும் வெண்டலை மாலையுந் தாங்கியார்க்கும்
நண்ணல் அரியநள் ளாறுடைய நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
புண்ணிய வாணரும் மாதவரும் புகுந்துட னேத்தப் புனையிழையார்
அண்ணலின் பாட லெடுக்குங்கூடல் ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
1.7.3
68

பூவினில் வாசம் புனலிற்பொற்பு புதுவிரைச் சாந்தினின் நாற்றத்தோடு
நாவினிற் பாடநள் ளாறுடைய நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
தேவர்கள் தானவர் சித்தர்விச்சா தரர்கணத் தோடுஞ் சிறந்துபொங்கி
(*)ஆவினில் ஐந்துகந் தாட்டுங்கூடல் ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
(*) ஆவினிலைந்து - பஞ்சகவ்வியம்.
1.7.4
69

செம்பொன்செய் மாலையும் வாசிகையுந் திருந்து புகையு மவியும்பாட்டும்
நம்பும்பெ ருமைநள் ளாறுடைய நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
உம்பரும் நாக ருலகந்தானும் ஒலிகடல் சூழ்ந்த வுலகத்தோரும்
அம்புத நால்களால் நீடுங்கூடல் ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
1.7.5
70

பாகமுந் தேவியை வைத்துக்கொண்டு பைவிரி துத்திப் பரியபேழ்வாய்
நாகமும் பூண்டநள் ளாறுடைய நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
போகமும் நின்னை மனத்துவைத்துப் புண்ணியர் நண்ணும் புணர்வுபூண்ட
ஆகமு டையவர் சேருங்கூடல் ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
1.7.6
71

கோவண ஆடையும் நீறுப்பூச்சுங் கொடுமழு ஏந்தலுஞ் செஞ்சடையும்
நாவணப் பாட்டுநள் ளாறுடைய நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
பூவண மேனி இளையமாதர் பொன்னும் மணியுங் கொழித்தெடுத்து
ஆவண வீதியில் ஆடுங்கூடல் ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
1.7.7
72

இலங்கை யிராவணன் வெற்பெடுக்க எழில்விர லூன்றி யிசைவிரும்பி
நலம்கொளச் சேர்ந்த நள்ளாறுடைய நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
புலன்களைச் செற்றுப் பொறியைநீக்கிப் புந்தியிலு நினைச் சிந்தைசெய்யும்
அலங்கல்நல் லார்கள் அமருங்கூடல் ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
1.7.8
73

பணியுடை மாலும் மலரினோனும் பன்றியும் வென்றிப் பறவையாயும்
நணுகல் அரியநள் ளாறுடைய நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
மணியொலி சங்கொலி யோடுமற்றை மாமுர சின்னொலி என்றும்ஓவா
தணிகிளர் வேந்தர் புகுதுங்கூடல் ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
1.7.9
74

தடுக்குடைக் கையருஞ் சாக்கியருஞ் சாதியின் நீங்கிய வத்தவத்தர்
நடுக்குற நின்றநள் ளாறுடைய நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
எடுக்கும் விழவும் நன்னாள்விழவும் இரும்பலி யின்பினோ டெத்திசையும்
அடுக்கும் பெருமைசேர் மாடக்கூடல் ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
1.7.10
75

அன்புடை யானை அரனைக்கூடல் ஆலவாய் மேவிய தென்கொலென்று
நன்பொனை நாதனை நள்ளாற்றானை நயம்பெறப் போற்றி நலங்குலாவும்
பொன்புடை சூழ்தரு மாடக்காழிப் பூசுரன் ஞானசம் பந்தன்சொன்ன
இன்புடைப் பாடல்கள் பத்தும்வல்லார் இமையவ ரேத்த இருப்பர்தாமே.
1.7.11

இதுவுஞ் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தெர்ப்பாரணியேசுவரர்;
தேவியார் - போகமார்த்தபூண்முலையம்மை.

திருச்சிற்றம்பலம்

திருநள்ளாறு-திருஞானசம்பந்த சுவாமிகள்

பண் - பழந்தக்கராகம்

பச்சைத்திருப்பதிகம்

இது சமணர்கள் வாதின்பொருட்டுத் தீயிலிட்டபோது வேகாதிருந்தது.

526

போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகமார்த்த பைங்கண்வெள் ளேற்றண்ணல் பரமேட்டி
ஆகமார்த்த தோலுடையன் கோவண ஆடையின்மேல்
நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே.
1.49.1
527

தோடுடைய காதுடையன் தோலுடை யன்தொலையாப்
பீடுடைய போர்விடையன் பெண்ணுமோர் பாலுடையன்
ஏடுடைய மேலுலகோ டேழ்கடலுஞ் சூழ்ந்த
நாடுடைய நம்பெருமான் மேயது நள்ளாறே.
1.49.2
528

ஆன்முறையா லாற்றவெண்ணீ றாடி அணியிழையோர்
பான்முறையால் வைத்தபாதம் பத்தர் பணிந்தேத்த
மான்மறியும் வெண்மழுவுஞ் சூலமும் பற்றியகை
நான்மறையான் நம்பெருமான் மேயது நள்ளாறே.
1.49.3
529

புல்கவல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்தயலே
மல்கவல்ல கொன்றைமாலை மதியோ டுடன்சூடிப்
பல்கவல்ல தொண்டர்தம்பொற் பாத நிழல்சேர
நல்கவல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே.
1.49.4
530

ஏறுதாங்கி யூர்திபேணி யேர்கொள் இளமதியம்
ஆறுதாங்குஞ் சென்னிமேலோர் ஆடர வஞ்சூடி
நீறுதாங்கி நூல்கிடந்த மார்பில் நிரைகொன்றை
நாறுதாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே.
1.49.5
531

திங்களுச்சி மேல்விளங்குந் தேவன் இமையோர்கள்
எங்களுச்சி யெம்மிறைவன் என்றடி யேயிறைஞ்சத்
தங்களுச்சி யால்வணங்குந் தன்னடி யார்கட்கெல்லாம்
நங்களுச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே.
1.49.6
532

வெஞ்சுடர்த்தீ யங்கையேந்தி விண்கொள் முழவதிர
அஞ்சிடத்தோர் ஆடல்பாடல் பேணுவ தன்றியும்போய்ச்
செஞ்சடைக்கோர் திங்கள்சூடித் திகழ்தரு கண்டத்துள்ளே
நஞ்சடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே.
1.49.7
533

சிட்டமார்ந்த மும்மதிலுஞ் சிலைவரைத் தீயம்பினால்
சுட்டுமாட்டிச் சுண்ணவெண்ணீ றாடுவ தன்றியும்போய்ப்
பட்டமார்ந்த சென்னிமேலோர் பால்மதி யஞ்சூடி
நட்டமாடும் நம்பெருமான் மேயது நள்ளாறே.
1.49.8
534

உண்ணலாகா நஞ்சுகண்டத் துண்டுட னேயொடுக்கி
அண்ணலாகா வண்ணல்நீழ லாரழல் போலுருவம்
எண்ணலாகா வுள்வினையென் றெள்க வலித்திருவர்
நண்ணலாகா நம்பெருமான் மேயது நள்ளாறே.
1.49.9
535

மாசுமெய்யர் மண்டைத்தேரர் குண்டர் குணமிலிகள்
பேசும்பேச்சை மெய்யென்றெண்ணி அந்நெறி செல்லன்மின்
மூசுவண்டார் கொன்றைசூடி மும்மதி லும்முடனே
நாசஞ்செய்த நம்பெருமான் மேயது நள்ளாறே.
1.49.10
536

தண்புனலும் வெண்பிறையுந் தாங்கிய தாழ்சடையன்
நண்புநல்லார் மல்குகாழி ஞானசம் பந்தன்நல்ல
பண்புநள்ளா றேத்துபாடல் பத்தும் இவைவல்லார்
உண்புநீங்கி வானவரோ டுலகி லுறைவாரே.
1.49.11

இத்தலம் சோழநாட்டிலுள்ள சப்த தியாகர் தலங்களிலொன்று.
சுவாமிபெயர் - தெர்ப்பாரணியர்,
தேவியார் - போகமார்த்தபூண்முலையம்மை.
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் Empty Re: திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான்

Post by ஆனந்தபைரவர் Mon Nov 29, 2010 3:25 pm

2.33 திருநள்ளாறு - திருவிராகம்-திருஞானசம்பந்த சுவாமிகள்

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

350

ஏடுமலி கொன்றையர விந்துஇள வன்னி
மாடவல செஞ்சடையெம் மைந்தனிட மென்பர்
கோடுமலி ஞாழல்குர வேறுசுர புன்னை
நாடுமலி வாசமது வீசியநள் ளாறே.
01
351

விண்ணியல் பிறைப்பிள வறைப்புனல் முடித்த
புண்ணியன் இருக்குமிட மென்பர்புவி தன்மேல்
பண்ணிய நடத்தொடிசை பாடுமடி யார்கள்
நண்ணிய மனத்தின்வழி பாடுசெய்நள் ளாறே.
02
352

விளங்கிழை மடந்தைமலை மங்கையொரு பாகத்
துளங்கொள இருத்திய ஒருத்தனிட மென்பர்
வளங்கெழுவு தீபமொடு தூபமலர் தூவி
நளன்கெழுவி நாளும்வழி பாடுசெய்நள் ளாறே.
03
353

கொக்கரவர் கூன்மதியர் கோபர்திரு மேனிச்
செக்கரவர் சேருமிட மென்பர்தடம் மூழ்கிப்
புக்கரவர் விஞ்சையரும் விண்ணவரும் நண்ணி
நக்கரவர் நாமநினை வெய்தியநள் ளாறே.
04
354

நெஞ்சமிது கண்டுகொ ளுனக்கென நினைந்தார்
வஞ்சம தறுத்தருளும் மற்றவனை வானோர்
அஞ்சமுது காகியவர் கைதொழ வெழுந்த
நஞ்சமுது செய்தவன் இருப்பிடம்நள் ளாறே.
05
355

பாலனடி பேணவவ னாருயிர் குறைக்குங்
காலனுடன் மாளமு னுதைத்தஅர னூராங்
கோலமலர் நீர்க்குட மெடுத்துமறை யாளர்
நாலின்வழி நின்றுதொழில் பேணியநள் ளாறே.
06
356

நீதியர் நெடுந்தகையர் நீள்மலையர் பாவை
பாதியர் பராபரர் பரம்பர ரிருக்கை
வேதியர்கள் வேள்வியொழி யாதுமறை நாளும்
ஓதியரன் நாமமும் உணர்த்திடும்நள் ளாறே.
07
357

கடுத்துவல் லரக்கன்முன் நெருக்கிவரை தன்னை
எடுத்தவன் முடித்தலைகள் பத்தும்மிகு தோளும்
அடர்த்தவர் தமக்கிடம தென்பரளி பாட
நடத்தகல வைத்திரள்கள் வைகியநள் ளாறே.
08
358

உயர்ந்தவ னுருக்கொடு திரிந்துலக மெல்லாம்
பயந்தவன் நினைப்பரிய பண்பனிட மென்பர்
வியந்தமரர் மெச்சமலர் மல்குபொழி லெங்கும்
நயந்தரும வேதவொலி யார்திருநள் ளாறே.
09
359

சிந்தைதிரு கற்சமணர் தேரர்தவ மென்னும்
பந்தனை யறுத்தருளு கின்றபர மன்னூர்
மந்தமுழ வந்தரு விழாவொலியும் வேதச்
சந்தம்விர விப்பொழில் முழங்கியநள் ளாறே.
10
360

ஆடலர வார்சடையன் ஆயிழைத னோடும்
நாடுமலி வெய்திட இருந்தவன்நள் ளாற்றை
மாடமலி காழிவளர் பந்தனது செஞ்சொல்
பாடலுடை யாரையடை யாபழிகள் நோயே.
11

திருச்சிற்றம்பலம்

3.87 திருநள்ளாறு - திருவிராகம்-திருஞானசம்பந்த சுவாமிகள்
பண் - சாதாரி

திருச்சிற்றம்பலம்

934

தளிரிள வளரொளி தனதெழில் தருதிகழ் மலைமகள்
குளிரிள வளரொளி வனமுலை யிணையவை குலவலின்
நளிரிள வளரொளி மருவுநள் ளாறர்தம் நாமமே
மிளிரிள வளரெரி யிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.
3.87.1
935.

போதமர் தருபுரி குழலெழின் மலைமகள் பூணணி
சீதம தணிதரு முகிழிள வனமுலை செறிதலின்
நாதம தெழிலுரு வனையநள் ளாறர்தந் நாமமே
மீதம தெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.
3.87.2
936.

இட்டுறு மணியணி யிணர்புணர் வளரொளி யெழில்வடங்
கட்டுறு கதிரிள வனமுலை யிணையொடு கலவலின்
நட்டுறு செறிவயல் மருவுநள் ளாறர்தந் நாமமே
இட்டுறு மெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.
3.87.3
937.

மைச்சணி வரியரி நயனிதொன் மலைமகள் பயனுறு
கச்சணி கதிரிள வனமுலை யவையொடு கலவலின்
நச்சணி மிடறுடை யடிகள்நள் ளாறர்தந் நாமமே
மெச்சணி யெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.
3.87.4
938.

பண்ணியல் மலைமகள் கதிர்விடு பருமணி யணிநிறக்
கண்ணியல் கலசம தனமுலை யிணையொடு கலவலின்
நண்ணிய குளிர்புனல் புகுதுநள் ளாறர்தந் நாமமே
விண்ணிய லெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.
3.87.5
939.

போதுறு புரிகுழல் மலைமகள் இளவளர் பொன்னணி
சூதுறு தளிர்நிற வனமுலை யவையொடு துதைதலின்
தாதுறு நிறமுடை யடிகள்நள் ளாறர்தந் நாமமே
மீதுறு மெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.
3.87.6
940.

கார்மலி நெறிபுரி சுரிகுழல் மலைமகள் கவினுறு
சீர்மலி தருமணி யணிமுலை திகழ்வொடு செறிதலின்
தார்மலி நகுதலை யுடையநள் ளாறர்தந் நாமமே
ஏர்மலி யெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.
3.87.7
941.

மன்னிய வளரொளி மலைமகள் தளிர்நிற மதமிகு
பொன்னியல் மணியணி கலசம தனமுலை புணர்தலின்
தன்னியல் தசமுகன் நெறியநள் ளாறர்தந் நாமமே
மின்னிய லெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.
3.87.8
942.

கான்முக மயிலியன் மலைமகள் கதிர்விடு கனமிகு
பான்முக மியல்பணை யிணைமுலை துணையொடு பயிறலின்
நான்முகன் அரியறி வரியநள் ளாறர்தந் நாமமே
மேன்முக வெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.
3.87.9
943.

அத்திர நயனிதொன் மலைமகள் பயனுறு மதிசயச்
சித்திர மணியணி திகழ்முலை யிணையொடு செறிதலின்
புத்தரொ டமணர்பொய் பெயருநள் ளாறர்தந் நாமமே
மெய்த்திர ளெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.
3.87.10
944.

சிற்றிடை அரிவைதன் வனமுலை யிணையொடு செறிதரு
நற்றிற முறுகழு மலநகர் ஞானசம் பந்தன
கொற்றவன் எதிரிடை யெரியினி லிடஇவை கூறிய
சொற்றெரி யொருபதும் அறிபவர் துயரிலர் தூயரே.
3.87.11

இது சமணர் வாதின்பொருட்டுத் தீயிலிடுதற்கு போகமார்த்த பூண்முலையாளென்னும்
பதிகம் உதயமாக இது தீயில் பழுது படாது என்னுந் துணிவுகொண்டு அருளிச்செய்த பதிகம்.

திருச்சிற்றம்பலம்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் Empty Re: திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum