இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


கந்தசஷ்டி விரதம்

2 posters

Go down

கந்தசஷ்டி விரதம் Empty கந்தசஷ்டி விரதம்

Post by ஆனந்தபைரவர் Fri Dec 17, 2010 3:03 pm

கந்தசஷ்டி விரதம் Murugaஉருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
"அமரர் இடர் தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி"

சஷ்டி விரதம் ஐப்பசி மாத தீபாவளி அமாவாசையின் பின் அதாவது வளர்பிறை பிரதமை முதல் ஆரம்பித்து, ஆறாம் நாளான சஷ்டி திதி வரையான ஆறு தினங்களும் நோற்கப்படும் முருகப்பெருமானுடைய சிறப்பான நோன்பாகும். அறியாமை என்னும் அஞ்ஞான இருளை அகற்றி, மெய்ஞானமாகி மிளிர்கின்ற பரம்பொருளின் முக்திப் பேரருளை அடைவதற்காகச் சைவப் பெருமக்களால் அனுஷ்டிக்கப்படும் விரதங்களுள் தலையாயது கந்தசஷ்டி விரதம்.

வல்வினை நீக்கி, வரும் வினை போக்கி, செல்வமும் செல்வாக்கும் தந்து; அழகும், அறிவும் தந்திடும் வள்ளி மணாளனை, வடிவேலனை வழிபடும் விரதங்களில் மிகவும் சிறந்தது இந்தக் கந்தசஷ்டி விரதமாகும்.

இவ்விரதம் இந்தவருடம் 06.11.2010 சனிக்கிழமை ஆரம்பமாகி 11.11.2010 வியாழக்கிழமை அன்று சூரசங்கார நிகழ்வுடன் நிறைவு பெறுகின்றது. முருகனுக்குரிய விரதங்கள் மூன்று. அவையாவன வெள்ளிக்கிழமை (வாரம்) விரதம், கார்த்திகை (நட்சத்திரம்) விரதம், கந்த சஷ்டி (திதி) விரதம்.

வல்வினை நீக்கி, வரும் வினை போக்கி, செல்வமும் செல்வாக்கும் தந்து; அழகும், அறிவும் தந்திடும் வள்ளி மணாளனை, வடிவேலனை வழிபடும் விரதங்களில் மிகவும் சிறந்தது இந்தக் கந்தசஷ்டி விரதமாகும்.

இவ்விரதம் இந்தவருடம் 18.10.2009 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி 23.10.2009 வெள்ளிக்கிழமை அன்று சூரசங்கார நிகழ்வுடன் நிறைவு பெறுகின்றது. முருகனுக்குரிய விரதங்கள் மூன்று. அவையாவன வெள்ளிக்கிழமை (வாரம்) விரதம், கார்த்திகை (நட்சத்திரம்) விரதம், கந்த சஷ்டி (திதி) விரதம்.

அனாதியாகவே ""செம்பில் களிம்பு போன்று ஆன்மாக்கள் ஆணவமலத்தால் பீடிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆன்மாக்கள் இப்பூவுலகில் பிறந்ததன் நோக்கம் சகல இன்பங்களையும் அறவழியில் அனுபவித்து, இறுதியில் பிறப்பு, இறப்பு அற்ற மோட்ச நிலையில் இறைவனுடன் இரண்டறக் கலந்தற்கேயாகும். எனவே முருகப் பெருமானை வழிபடுவதன் மூலம் தமது கன்ம வினைகளை மிக விரைவில் அறுத்து ஆன்மாக்களின் இறுதி இலட்சியமாகிய மோட்சத்தினை இலகுவில் அடையலாம் என்பது ஐதீகம்.

ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும் மலங்களை மட்டுமன்றி ஆறுவகை எதிரிகளான காமம், கோபம், பேராசை, செருக்கு, மயக்கம், தற்பெருமை ஆகிய வகைகளை அழித்து முற்றுணர்வு, வரம்பிலாற்றல், தன் வயமுடைமை, வரம்பின்மை, இயற்கையுணர்வு, பேரருள் ஆகிய தேவ குணங்களை நிலை நாட்டுவதால் "ஒப்பரும் விரதம்" என ஸ்கந்தஷஷ்டி விரத மகிமை பற்றிக் கந்தபுராணம் சிறப்பாகப் புகழ்ந்து பேசுகின்றது.கந்தசஷ்டி விரதம் Muruganpr1கந்தசஷ்டி விரதம்; சுழிபுரம் பறாளை-முருகன் ஆலயம், காலையடி ஞானவேலாயுதர் ஆலயம் உட்பட எல்லா முருகன் ஆலயங்களிலும் அதிவிஷேச அபிஷேக ஆராதனைகள், பூசைகள் நிறைந்த பக்தியான விரதமாக அனுஸ்டிக்கப் பெறுவதுடன் சூரன்போர் காட்சியும் வெகுசிறப்பாக நிகழ்தப்பெறுகின்றன.

முருகன் ஆலயத்தில் பக்தர்கள் உண்ணா நோன்பிருந்து; பக்திசிரத்தையுடன் முருகனை நினைந்துருகி வழிபட்டு, தியானத்திலும், பஜனை செவதிலும், கந்தரனுபூதி, கந்தசஷ்டிகவசம், கந்தரலங்காரம் ஓதுவதிலும், கந்தபுராணம்-பயன் கேட்பதிலும் தம்மை ஈடுபடுத்தி முருகனருள் வேண்டி நிற்பர். அத்துடன்; விரத முடிவு தினமான சஷ்டிதினம் "சங்கரன் மகன் சட்டியில் மாவறுப்பதை" தரிசித்து தம் வினை போக்க பக்தர்கள் காதலாகி கசிந்துருகி நிற்கும் காட்சியும், முருகன் வீசும் வேல் குறிதவறாது சூரனின் கழுத்தில் வீழ்ந்து தலைகள் சாய்வதும் கண்கொள்ளாக் காட்சியாகும்.

கொடுங்கோலாட்சி செலுத்திய ஆணவத்தின் வடிவமாகிய சூரனையும், கன்மத்தின் வடிவமாகிய சிங்கனையும், மாயா மலத்தின் வடிவமாகிய தாரகனையும், (ஆணவம், கன்மம், மாயை என்ற) அசுர சக்திகளையெல்லாம் அழித்து, நீங்காத சக்தியை கலியுக வரதனான முருகப் பெருமான் நிலை நாட்டிய உன்னத நாளே கந்த சஷ்டியாகும்.

கந்தசஷ்டி விரத நாட்களில், ஆன்மா மும்மலங்களையும் நீக்குவதற்குரிய பக்குவமான மனதுடன் தனித்து, விழித்து, பசித்து இருக்க வேண்டும். உணவையும் உறக்கத்தையும் தவிர்த்து, தனித்திருந்து செய்யும் தவமே கந்தசஷ்டி விரதமாகும். உணர்வுகளை அடக்கி உள்ளத்தை ஒருநிலைப்படுத்தி கந்தப் பெருமானின் பெருமை பேசி இம்மைக்கும் மறுமைக்கும் சிறந்த வழியமைப்பதே இந்த விரதத்தின் பெறுபேறாக அமைகிறது.

கந்தசஷ்டி விரதத்தை முறையாக அனுஷ்டிப் போர்க்கு இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகளுக்கும் தலைவனான முருகப்பெருமானது பேரருள் கிட்டும். சஷ்டி யன்று கந்தனுக்கு அபிஷேகம் செய்த பாலைப் பருகுவோர்க்கு புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்!.

சகல செல்வங்களையும், சுகபோகங்களையும் தரவல்ல இந்த விரதம் புத்திரலாபத்துக்குரிய சிறப்பான விரதமுமாகும். "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பதற்கேற்ப; ஸ்கந்தஷஷ்டியில் விரதமிருந்தால் அகப் "பை"ஆகிய" "கருப்பையில்" கரு உண்டாகும் என்பதும்; கந்தர் சஷ்டி விரதத்தை முறையாகக் கைக்கொள்வதால் அகப்"பை" எனும் "உள்ளத்தில்" நல்ல எண்ணங்களும் பக்தி எனும் பாதையால் எழுந்த அமைதியும் அமையும் என்பதும் மறை பொருளாகும்.

அறிவு வளர்ச்சிக்கு விஞ்ஞானம் உதவுவதைப் போன்று மன வளர்ச்சிக்கு சமயம் அடிகோலுகின்றது. இறைவன் ஒருவன், அவன் மக்களின் தந்தை என்றெல்லாம் போதிப்பதன் மூலம் அன்பு, சகோதரத்துவம் போன்ற ஜீவ ஊற்றுகளை அருளி மக்களின் வாழ்வு நலம் பெறச் சமயம் உதவுகின்றது. நல்லவர்களைப் பாதுகாக்கவும் தீயவர்களை அடக்கவும் தர்மத்தை நிலை நாட்டவும் யுகந்தோறும் இறைவன் அவதாரம் செய்தருளுகின்றான்.

தனு, கரண, புவன, போகங்கள் அனைத்தையும் படைத்தலும், காத்தலும், அழித்தலும் இறைவனது இடையறாத திருவிளையாடல்கள். இறைவனை உணர்ந்து அவனைச் சரணடைந்தால் அழிவில்லாத பேரின்பம் அடையலாம் என்பது சமயங்கள் காட்டும் பேருண்மை. இறைவனது திவ்ய அவதாரத்தையும் செயலையும் யாரொருவர் உள்ளபடி அறிகின்றார்களோ அவர்கள் மீண்டும் பிறவாமல் இறைவனையே அடைந்து விடுகிறார்கள் என்று கீதையில் கிருஷ்ணபகவான் கூறியுள்ளார்.

தெய்வ அவதாரங்களில் தீய சக்திகளை அடக்கி நல்லவர்களைக் காத்தார்கள் என்றால் இச்செயல்கள் தீமைகளை நீக்கி நன்மைகளையே செய்து மக்கள் உய்ய வேண்டும் என்று போதிப்பதற்கே நிகழ்ந்தன என உணர்ந்து பக்தியுடன் வாழ்ந்து இகபர நலன்களை அடைய முயலவேண்டும். இத்தகைய அவதார இரகசியத்தை விளக்கி மக்கள் உய்வதற்கு உகந்த பெருவழிகளை விளக்கிக் காட்டுவதே ஆறுமுகப்பெருமானின் அவதாரம்.

வசிட்டமாமுனிவர் முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு சஷ்டி விரத மகிமையையும் வரலாற்றையும் விதிமுறைகளையும் உபதேசித்த பெருமையையுடையது. அரசர்கள், தேவர்கள், முனிவர்கள் பலரும் இந்த விரதம் அனுஷ்டித்து வேண்டிய வரங்களைப் பெற்றதோடு, இம்மை இன்பம், மறுமை இன்பம் ஆகியவற்றை பெற்றனர். இவ்விரதம் தொடர்பான "புராணக் கதை" யை பார்ப்போம்.

பிரம்மாவிற்கு தக்கன், காசிபன் என்னும் இரு புதல்வர்கள் இருந்தனர். இவர்களுள் தக்கன் சிவனை நோக்கித் கடுந்தவம் புரிந்து பல வரங்களைப் பெற்றிருந்த போதிலும் இறுதியில் சிவனால் தோற்றுவிக்கப் பெற்ற வீரபத்திரக் கடவுளால் கொல்லப்பட்டார். காசிபனும் கடுந்தவம் புரிந்து சிவனிடம் இருந்து மேலான சக்தியைப் பெற்றான். ஒருநாள் அசுரர்களின் குருவாகிய சுக்கிரனால் (நவக்கிரகங்களுள் வெள்ளியாக கணிக்கப்படுபவர்) ஏவப்பட்ட மாயை என்னும் பெண்ணின் அழகில் மயங்கி தான் பெற்ற தவ வலிமை எல்லாவற்றையும் இழந்தான். இதனைத் தொடர்ந்து காசிபனும் மாயை என்னும் அசுரப் பெண்ணும் முதலாம் சாமத்தில் மனித உருவத்தில் இணைந்து மனித தலையுடன் கூடிய சூரனும், இரண்டாம் சாமத்தில் சிங்க உருவில் இருவரும் இணைந்து சிங்க முகத்துடன் கூடிய சிங்கனும், மூன்றாம் சாமத்தில் யானை உருவில் இணைந்து யானை முகத்துடன் கூடிய தாரகனும், நான்காம் சாமத்தில் ஆட்டின் உருவத்தில் இருவரும் இணைந்து ஆட்டுத் தலையுடன் கூடிய அசமுகி என்னும் அசுரப் பெண்ணும் பிறந்தனர்.

மாயை காரணமாக தோன்றிய இந்நால்வரும் ஆணவ மிகுதியால் அகங்கார மமகாரம் (செருக்கு) கொண்டு காணப்பட்டனர். இவர்களுள் சூரபதுமன் சிவனை நோக்கி கடுந் தவம் புரிந்து; 108 யுகம் உயிர்வாழவும் 1008 அண்டம் அரசாளும் வரத்தையும், இந்திரஞாலம் எனும் தேரையும், சிவன் சக்தி அன்றி வேறு ஒரு சக்தியாலும் அழிக்க முடியாது எனும் வரத்தையும் பெற்றிருந்தான். இவ்வரத்தினைப் பெற்ற சூரன் முதலானோர் தம்மைப் போல் பலரை உருவாக்கி அண்ட சராசரங்கள் எல்லாவற்றையும் ஆண்டு இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலிட்டு சொல்லொணா துன்பங்களைக் கொடுத்து அதர்ம வழியில் ஆட்சி செய்தனர்.

அசுரர்களின் இக்கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள் கைலாயம் சென்று சிவனிடம் முறையிட்டனர். இறைவனும் அவர்கள்மேல் திருவுளம் கொண்டு அவர்களை அந்த துன்பத்தில் இருந்து காப்பாற்றும் நோக்குடன் தனது (6) நெற்றிக் கண்களையும் திறக்க (சிவபெருமானுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் ஆகிய ஐந்து முகங்கள் உண்டு. இவை தவிர ஞானிகளுக்கு மட்டுமே தெரியக்கூடிய "அதோமுகம்" (மனம்) என்ற ஆறாவது முகமும் உண்டு) அவைகளிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் வாயுபகவான் ஏந்திச் சென்று; வண்ண மீனினம் துள்ளி விளையாடும் தண்மலர் நிரம்பிய சரவணப்பொய்கையில் தாமரை மலர்களின் மீது சேர்க்கப்பெற்றன.

அந்த தீப்பொறிகள் ஆறும்; உலகின் பொன்னெல்லாம் உருக்கி வார்த்ததென ஆறு குழந்தைகள் தோன்றின. அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் சீராட்டி பாலூட்டி வளர்த்து வரும் வேளை; அகிலலோக நாயகி பார்வதி தன் மைந்தர்களை அன்புடன் கட்டியணைத்திட அவையாவும் ஒரு திருமேனியாக வடிவங்கொண்டு ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் உடைய ஒரு திரு முருகனாக தோன்றினன் உலகமுய்ய. ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் உடைய திருவுருவை பெற்றமையால் "ஆறுமுக சுவாமி" எனப் பெயர் பெற்றார். கந்தசஷ்டி விரதம் Tiruttani_padai_veeduஇந்த ஆறு திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீர்யம், வைராக்கியம், புகழ் என்னும் ஆறு குணங்களையும் குறிக்கின்றன. பிரணவ சொரூபியான முருகப் பெருமானிடம் காக்கும் கடவுளான முகுந்தன், அழிக்கும் கடவுளான ருத்ரன், படைக்கும் தெய்வமான கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடக்கம். ஆறுமுகன் சிவாக்னியில் தோன்றியவன். அதனால் "ஆறு முகமே சிவம்; சிவமே ஆறுமுகம்" எனப்படுகிறது.

முருகப்பெருமான் அசுரர்களான சூர பத்மாதியரை அழிக்கப் போர் புரிந்த திருவிளையாடலையே நாம் கந்தசஷ்டி விழாவாகக் கொண்டாடுகிறோம். சூரபத்மனின் ஒரு பாதி "நான்' என்கிற அகங்காரம்; மற்றொரு பாதி "எனது" என்கிற மமகாரம்.

பன்னிரண்டு கைகளுடன் ஆறு திருமுகமும் கூடிய அழகின் அழகாய் தேவசேனாதிபதியாய், தேவரும் முனிவரும் வாழ்த்த சர்வ சத்தியாம் பார்வதி தந்த தனிப்பெரும் ஞான வேலை சக்தியாகக் கொண்டு சூரபன்மனைச் சம்ஹாரம் செய்யப் புறப்பட்டு சென்றார். அவர்களுடன் முருகப் பெருமான் மேற்கொண்ட போர் ஐப்பசித் திங்கள் வளர்பிறையில் பத்து நாட்கள் நடைபெற்றது. முதல் நான்கு நாட்களில் சூர பத்மனைச் சேர்ந்த வீரர்களை அழித்து அவனது பலத்தை துவம்சம் செதார்.

தாரகனையும் அவனுக்குத் துணை நின்ற கிரௌஞ்சத்தையும் பிளந்து, சிங்கமுகனை அழித்து பின் சூரனின் சேனை அழிந்த போதும் சூரபதுமனின் ஆணவம் அழிய இல்லை. அதனால் முருகன் தன் திருப்பெரு வடிவம் (விஸ்வரூபம்) காட்டி, எல்லாம் வல்ல பரம்பொருள் தாமே என பரமேசுர வடிவம் காட்டி, சிவனும் அவன் மகனும் மணியும் ஒளியும் போல ஒருவரே என்றுணர்த்தியும், தன் தன்மை மாறாது மாயைகள் பல புரிந்து போர் செயலானான்.

கடைசியாக; நடுக்கடலில் மாமரமாய் நின்ற சூரபத்மனைத் முருகன்; தன் வேலாயுதத்தால் இரு கூறாக்கினார். ஆணவம் அழியப் பெற்ற சூரன் தம் தவறை உணர்ந்து; தன்னை மன்னித்து, ஏற்றுக்கொள்ளும்படி மன்றாடி வேண்டி நிற்க; அவை இரண்டையும் முருகன் தன் அருளால் சேவலாகவும் மயிலாகவும் மாற்றி, மயிலை வாகனமாகவும் சேவலைக் கொடியிலும் தன்னுடன் பிணைத்துக் கொண்டார்.

ஞானசக்தியான வேலின் தாக்கத்தால் ஆணவ மலம் வலியிழந்து ஆன்ம பரம்பொருளின் திருவடி அடைந்ததெனும் மறைபொருளை உணர்த்த அனுஷ்டிக்கப்படும் விரதமே கந்தர் சஷ்டி விரதம். இந்த அருட்பெருங்கருணைச் செயலை வியந்து இப்போர் நிகழ்ந்த காலமாகிய ஐப்பசி மாத வளர்பிறை முதலாறு நாட்களையும் விரத நாட்களாகக் கொண்டு முனிவரும் தேவரும் நோற்று வந்தனர். இதுவே ஸ்கந்தசஷ்டி என்ற நாமத்தோடு நாம் அநுஷ்டிக்கும் விரதமாகும்.



விரத அனுஷ்டானங்களும், விதிமுறைகளும்:
நாம் ஆறுமுகநாவலரின் "விரதம்" என்பதற்கான வரைவிலக்கணத்தை நோக்கின் "மனம்; பொறி வழி போகாது நிற்றற் பொருட்டு உணவை விடுத்தேனும், சுருக்கியேனும்; மனம், வாக்கு, காயம் எனும் மூன்றினாலும் இறை அன்போடு, கடவுளை விதிப்படி வழிபடல்" என்கிறார். அவ்வாறான கட்டுப்பாடுகளினூடாக ஐம்புலனடக்கி மன அடக்கத்தை கந்த சஷ்டி விரதம் நமக்கு உணர்த்துகிறது.

இவ்விரதம் ஆறு வருடங்கள் தொடர்ந்து கைக்கொள்ளப்பட வேண்டும் (கார்த்திகை விரதம் பன்னிரெண்டு வருடங்களும், வெள்ளிக்கிழமை விரதம் மூன்று வருடங்களும் அனுஷ்டிக்கப்படுகின்றது). உபவாசம் அல்லது ஒரே நேர உணவு என்பது உணவு நியதி ஆறு வருடமும் அல்லது பன்னிரண்டு வருடங்களும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். முறைப்படி சங்கல்பபூர்வமாக ஆரம்பித்து கடைசி வருடம் விரத முடிவில் விரதோத்யாபனம் செய்து (நிறுத்தி) பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

கந்த சஷ்டி என்னும் போது அதற்கென சில விரத நியதிகள் தனித்துவம் பெற்றுத் திகழ்கின்றன. இவ்விரதம் அனுஷ்டிக்க விரும்புவோர் விரத நாட்களில் வைகறையில் துயில் எழுந்து சந்தியாவந்தனம் முதலிய காலைக்கடன்களை முடித்து, ஆற்றில் இறங்கி நீரோட்டத்தின் எதிர்முகமாக நின்று, தண்ணீரில் ஷட்கோணம் வரைந்து, அதில் சடாக்ஷர மந்திரத்தை எழுத வேண்டும். "ஓம்' என்ற பிரணவ மந்திரத்தையும் நடுவில் எழுதி, முருகனை மனதில் இருத்தி; நீரில் மூழ்கி எழ வேண்டும்.

கிணறு, குளம் போன்ற நீர்நிலைகளில் நீராடுபவர்கள் வடதிசை நோக்கி நின்று மேற்கூறியவாறு தூய நீராடி, தோய்த்துலர்ந்த ஆடையணிந்து அமைதியான இடத்திலோ அல்லது ஆலயத்திலோ அமர்ந்து அல்லல் தீர்க்கும் ஆறுமுகப் பெருமானை நினைந்து தியானம் செய்ய வேண்டும். தியானத்துடன் நில்லாது மனம் பொறிவழிச் செல்லாது இறையருளை நாடி வேறு சிந்தனையின்றி களிப்புற வேண்டும். விரத காலங்களில் மனம் வேறு எண்ணங்களில் ஈடுபடாதிருக்க கந்தசஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரனு பூதி, கந்தர் கலிவெண்பா போன்ற நூல்களைப் படிக்க வேண்டும். முருகனாலயங்களில் இவ்விரத நாட்களில் கந்தபுராண படனம் நடைபெறும். இதை தவறாது கேட்டல் மிகவும் ஆன்மிக நன்மை பயக்கும்.

தண்ணீர் கூட அருந்தாது ஆலயத்தில் வழங்கப்படும் பானகம் (பானக்கம்) மட்டும் அருந்தியிருத்தல் உத்தமோத்தமமான விரதமாகும். பானகமென்பது சர்க்கரை, தேசிக்காய், இளநீர், முதலியன கலந்து தயாரிக்கப்படும் ஒரு நீராகாரம் ஆகும். பட்டினி கிடக்கும் வயிற்றினுள் வெளிப்படும் அதிக சக்திமிக்க வெப்பம், வாய்வு, பித்தம், இவற்றைத் தணித்து உடற்சமநிலையைப் பேணுவதற்கும், பசி, தாகம், இவற்றை ஓரளவு தணிக்கவும் இது உதவுகிறது.

கந்தசஷ்டி விரத நாட்களில், ஆன்மா மும்மலங்களையும் நீக்குவதற்குரிய பக்குவமான மனதுடன் நாம் இருக்க வேண்டும். உணவையும் உறக்கத்தையும் தவிர்த்து, தனித்திருந்து செய்யும் தவமே கந்தசஷ்டி விரதம். அதற்குரிய பலன் மும்மலம் நீங்கி ஆன்மா முக்தியைப் பெறுவதே ஆகும்..

இந்த ஆறு நாட்களும் பூரண உபவாசம் இருப்பது அதி உத்தமம் எனக் கருதப்படுகின்றது. மிளகுகளை விழுங்கி, பழம் மட்டும் சாப்பிட்டு, தீர்த்தம் குடித்து, இளநீர் குடித்து ஒரு நேர உணவு மட்டும் உண்டு அவரவர் தேக நிலைக்கேற்ப "கந்தசஷ்டி" விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும். விரதம் ஆரம்பமான தினத்தில் ஆலயம் சென்று சங்கர்ப்பம் செய்து காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்கவேண்டும்.

ஒரு விரதத்தை ஆரம்பிக்கும் முன் இன்ன நோக்கத்துக்காக இன்னமுறைப்படி இவ்வளவு காலம் அனுஷ்டிக்கப் போகின்றேன் என்று உறுதியாகத் தீர்மானம் செய்து (சங்கல்பம் செய்து) ஆலயம் சென்று சங்கல்ப்பபூர்வமாக அர்ச்சினை வழிபாடுகள் செய்து ஆரம்பிக்க வேண்டும். குறிப்பிட்ட கால எல்லை வரை மாற்றமின்றி அவ்விரதத்தை ஒழுங்காகக்கைக் கொள்ளவேண்டும்.

உரிய காலம் முடிந்ததும் விரத உத்தியாபனம் செய்து விரதத்தை நிறுத்த வேண்டும். விரதத்துக்குரிய மூர்த்தியின் வடிவத்தைப் பொன் பிரதி மையாகச் செய்து வீட்டிலே வைத்து முறைப்படி கும்பங்கள் ஸ்தாபித்து சங்கல்ப பூர்;வமாகப் புண்ணியாகவாசனம் முதலிய பூர்வாங்க கிரியைகளுடன் ஆரம்பித்து சமஸ்தோபசார பூசைகளையும் செய்துமுடித்து அன்று முழுவதும் உபவாசமாயிருத்தல் வேண்டும். மறுநாள் அதிகாலையில் நீராடி நித்திய கர்மாநுஷ்டானங்கள் செய்து மறுபடியும் அவற்றுக்குப் பூசைகள் நடத்திய பின் கும்பப் பொருட்கள் பொன் பிரதிமையும் மற்றும் தானப் பொருட்கள் யாவும் சேர்த்து வேட்டி, சால்வை, அரிசி, காய்கறி, தாம்பூலதஷிணைகள் பூசைகளைச் செய்வித்த குருவுக்கு வழங்கி முறைப்படி நான் கைக்கொண்ட இந்த விரதத்தை இன்று உத்தியாபனம் செய்து முடிக்கின்றேன். சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட படி இவ்விரதத்திற்குரிய பலன்களைத் தந்தருள வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும் தம்பதிபூசை, சுமங்கலி பூசை முதலியன குறித்து விரதத்துக்கு சொல்லப்பட்டிருந்தால் அவற்றையும் செய்து முடிந்தபின் மாஹேஸ்வர பூசை செய்து வீடடுப் பாரணை பண்ண வேண்டும். பாரணை காலை எட்டரை மணிக்கு முன்செய்து முடிக்க வேண்டும் என்பது விதி. சிலர் உதயத்திற்கு முன் விரதத்திற்குரிய பாரணையை முடித்துவிடுவதுண்டு. ஆனால் சூரிய உதயத்திற்கு முன் பாரணை செய்தல் விதியன்று.

உரிய நேரத்தில் பாரணை பண்ணுவதற்குத் தடைகள் ஏற்பட்டால் பாரணைக்காக சமைத்த உணவைச் சாமிப்படத்திற்கு முன்படைத்து அதனை இந்த உரிய நேரத்தில் முகர்ந்து விடுதல் போதுமானது. பின்னர் இயன்ற பொழுதில் சாப்பிடலாம்.

சமையல் தயாரிப்பதிலும் தாமதம் ஏற்படின் சாமிபடத்திற்கு முன் ஒரு சிறு பாத்திரத்தில் நீரெடுத்து வைத்து அதில் துளசியை இரண்டு அடியிலைகளுடன் கூடிய கதிராக எடுத்து அந்த நீரை உரிய காலத்தில் அருந்தி பாரணையை நிறைவு செய்யலாம். பின்னர் வசதியான போது சாப்பிடலாம்.

ஓரு விரதத்தின் முடிவில் அதாவது பாரணை நாளில் இன்னொரு விரதம் வந்தால் இந்த முறையையே கடைப்பிடிக்க வேண்டுமென்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இரண்டாவது விரதமும் , உபவாசமாக இருந்தால் முதலாவது விரத்தின் பாரணையைத் துளசி, தீர்;த்தம் அருந்தி நிறைவேற்றி விட்டு இரண்டாவது விரதத்தை முறைப்படி உபவாசமாக அனுட்டித்து அதற்கு மறுநாள் பாரணை செய்ய வேண்டும்.

பெரும்பாலும் கேதாரகௌரி நோன்பின் மறுநாள் கந்தசஷ்டி விரதாரம்பம் அல்லது கந்தசஷ்டி விரத முடிவில் அதாவது பாரணையன்று சோமவார விரதம் வருவதுண்டு, இச் சந்தர்ப்பத்தில் முதலில் நாம் பார்த்தவாறு தான் விதிமுறையைக் கைக் கொள்ள வேண்டும்.

விரத நியமனங்களை ஆரம்பத்திலேயே அளவுடன் கைக்கொள்வது நன்று கடுமையான முறையில் ஆரம்பித்து பின்னர் அரைகுறையாக நிறுத்துவது கூடாது. விரதத்தை கிரமப்படி அனுசரிக்க முடியாதவர்கள் தம்மாலியன்றளவு அனுசரிப்பதே தகுதி தம்மளவுக்கு மீறி உடலை வருத்த நேரிடின் விரதத்தில் வெறுப்பு தோன்றும் இதனால் விரத பலன் இல்லாமல் போய்விடும்.

ஆலயங்களில் ஆரம்பதினத்திலேயே தர்ப்பையணிந்து காப்புகட்டி, சங்கல்பித்து ஆறு நாளும் நோன்பிருத்தல் முறை, இறுதி நாளில் கர்ப்பை அவிழ்த்துத் தர்ப்பையுடன் சேர்த்துத் தாம்பூல தஷிணைகளுடன் அர்ச்சகரிடம் சமர்ப்பிப்பர்.

ஏழாம் நாள் அதிகாலையில் நீராடி நித்திய கர்மாநுஷ்டானங்களை நிறைவேற்றிப் பாரணைப் ப+ஜை என்று நடைபெறும் விசேஷ பூஜையையும் கண்டு வழிபட்டபின் மாஹேஸ்வர பூசை செய்து (அடியார்களுக்கு அன்னமிட்டு) பாரணை செய்ய வேண்டும்.

இவ்விதம் கடும் விரதம் அநுஷ்டிக்க முடியாதவர்கள் முதல் ஐந்து நாட்களும் இரவு ஒரு பொழுது பால்பழம் அல்லது பலகாரம் உண்டு இறுதி நாள் உபவாசம் இருக்கலாம். அதுவும் முடியாவதவர்கள் முதல் ஐந்து நாட்களும் பகல் ஒரு பொழுது அன்னமும் ஆறாம் நாள் இரவு பாலப்பழம் அல்லது பலகாரமும் உண்டு விரதமிருக்கலாம்.

ஆறாம் நாள் ஷஷ்டித்திதியில்; சூரசம்ஹாரம் முடிந்த அன்றிரவு முழுவதும் விழித்திருந்து முருகன் பெருமைகளையே பேசியும், வழிபட்டிருக்கமாறு பழம் நூல்கள் விதிக்கின்றன. சிவபிராணுக்குரிய சிவராத்திரியும், மஹாவிஷ்ணுக்குரிய வைகுண்ட ஏகாதசியும் போல முருகப்பெருமானுக்குரிய ஸ்கந்தசஷ்டியும் மிகவிஷேஷமான தினமாதலால் துயில் நீத்தல் (விளித்திருத்தல்) பொருத்தமானதே. ஆயினும் அனைவராலும் இது கைக்கொள்ளப்படுவதில்லை. இயன்றவர்கள் கைக்கொள்க.

விரதோயாபனத்தின் போது முருகன் ஆலயம் சென்று விரத பூர்த்தி சமயத்தில் விரதத்துக்குரிய பலன்கள் எனக்குச் சிந்திக்க வேண்டும் என்பதற்காக இந்த விசேச பூஜையை செய்கின்றேன் என்று சங்கல்பித்து விஷேஷ அபிஷேகம் பூஜை, ஷண்முகார்ச்சனை அல்லது சஹஸ்ர நாமார்ச்சனை முதலியவற்றைச் செய்வித்து காப்பு தர்ப்பை இவற்றுடன் தாம்பூலம் தஷிணை, வேட்டி, சால்வை, அரிசி, காய்கறி முதலிய தானங்களையும் சேர்த்து அர்ச்சகரிடம் சமர்ப்பித்து மகிழ்ச்சியுடன் இந்தத் தானத்தை வழங்குகின்றேன். சாஸ்திரங்களில் சொல்லியிருப்பது போல இந்த விரதபலன்கள் எனக்கு உண்டாகட்டும் என்று பிரார்த்திக்க வேண்டும்.

விரதங்கள் மக்களின் மன வலிமை அதிகமாகவும், நம்பிக்கைகளின் அடிப்படையில், அவர்களது வாழ்வில் வளமும், நலமும், மிகுவதற்கு பயன்படுகின்றன. ஏனைய விரத அனுட்டானங்களைப் போலன்றி கந்த சஷ்டி விரதானுஷ்டானத்தை ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் கடைப்பிடிக்கின்றார்கள். மாணவர்கள் படிப்பிற்கும், குடும்பப் பெண்கள் குடும்ப நன்மைக்கும், கன்னிப் பெண்கள் நல்ல கணவனை வாழக்கைத் துணையாக அடைய வேண்டியும், குழந்தை இல்லாதோர் குழந்தை வேண்டியும் இவ்விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.

இங்கு குறிப்பிட்ட விதத்தில் வீட்டிலே பூசைகளைச் செய்வதும் பொன் பிரதிமைகளைச் செய்து தானம் கொடுப்பதும் யாவருக்கும் எளிதானதன்று இதனால் உத்தியாயனமே செய்யாது விடுவதும் முறையன்று எனவே உரிய காலத்தில் ஆலயம் சென்று விரத உத்தியாபனம் செய்யப் போகின்றேன் என்று குருமுகமாகச் சங்கல்பம் செய்து இயன்ற வகையில் விசேஷ அபிஷேகம் பூசை அர்ச்சனை வழிபாடுகளைச் செய்து குருவுக்கு தாம்பூல தட்சணைகளும், தானங்களும் இயன்றவரையும் வழங்கி விரதத்தை மனநிறைவோடு முடித்து இறைவனிடம் சமர்ப்பிக்கலாம்.

உடலின் சுமை குறைவதால் மிகக் கடுமையான நோய்களைக்கூட உண்ணாநோன்பின் மூலம் நீக்கிவிட முடியும். உண்ணா நோன்பின் போது, உடலில் நோயுற்ற திசுக்களே முதலில் கரைக்கப்படுகின்றன. கொழுத்த உடல் கொண்ட மனிதன், உண்ணா நோன்பின்போது மறைமுகமாக உண்டு கொண்டே இருக்கிறார். உள்ளுருப்புக்களை வீணாகச் சுற்றியிருந்த பகுதிகள் கரைக்கப்படுகின்றன. உண்ணா நோன்பு மிகவும் எளிய, ஆனால் சிறப்பான ஊட்டச்செயலாக அமைந்து, உடலைக் காக்கிறது.

உண்ணா நோன்பின்போது, உடல் ஓய்வடைகிறது. எல்லா உறுப்புக்களுக்கும் அமைதி கிட்டுகிறது. நரம்புகள் தளர்ச்சி நீங்குகின்றன. வெப்பநிலை மாறி தண்மை ஏற்படுகிறது. கழிவுப்பொருள்களை உடலிலிருந்து வெளியேற்ற இயற்கை கொள்ளும் வழிகளில் உண்ணா நோன்பு மிகவும் சிறந்ததாக அமைந்திருக்கிறது. இரத்தமும் நிணநீரும் தூய்மையாக்கப்படுகின்றன. காம உணர்வு தணிகிறது. தூய நினைவுகள் வளர்கின்றன. மனதின் சக்தி, பகுத்தறிகின்ற ஆய்வுநிலை, நினைவு கூறும் சக்தி, இணைத்துக்காணும் அறிவு அதிகமாகின்றது. உண்ணா நோன்பினால் இளையவரும், முதியவரும் புதுப்பிக்கப்படுகிறார்கள். உடல் உறுப்புக்களில் மாத்திரம் அல்லாமல், உடலியல் செயல்களிலும் இது நிகழ்கிறது.

சூரனை முருகப் பெருமான் வதம் செய்த தலம் திருச்செந்தூர். எல்லா முருகன் கோவில்களிலும் சூரசம்ஹார விழா கொண்டாடப்படுகிறது. ஆனால் திருத்தணியில் மட்டும் கொண்டாடப்படுவதில்லை. அங்கு போருக்குப் பின்னே அமைதி நிலவுவதாக ஐதீகம்!.
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு

Back to top Go down

கந்தசஷ்டி விரதம் Empty Re: கந்தசஷ்டி விரதம்

Post by ஆனந்தபைரவர் Fri Dec 17, 2010 3:04 pm

புராணம்:

மூவிரு முகங்கள் போற்றி
முகம்பொழி கருணைபோற்றி
ஏவருந் துதிக்க நின்ற
ஈராறுதோள் போற்றி காஞ்சி
மாவடி வைகுஞ் செவ்வேள்
மலரடி போற்றி அன்னான்
சேவலும் மயிலும் போற்றி
திருக் கைவேல் போற்றி போற்றி

சுப்பிரமண்ய காயத்ரி:
"ஓம் தத் புருஷாய வித் மஹே
மஹா ஸேநாய தீமஹி.
தந்நோ ஷண்முக: ப்ரசோதயாத்"

"கார்த்திகேயாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ: ஸ்கந்த: பிரசோதாயாத்"

திருப்புகழ்:

ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறு படுசூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே



முருகனின் படை வீடுகள் ஆறு:

பழநி: பழநி ஆறுபடைவீடுகளில் முதலாவதாகும். ஞானப்பழம் கிடைக்காத காரணத்தால் தன் பெற்றோர்களிடம் கோபம்கொண்டு முருகன் ஆண்டியின் கோலத்தில் நிற்கும் இடமே பழநி. பழநிமைலயில் உள்ள முருகனின் சிலை நவபாஷானத்தால் ஆனது. அதனால்தான் அந்த முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் பால், பஞ்சாமிர்தம், விபூதி ஆகியவற்றை உட்கொண்டால் உடல் நலம் பெறும் என்று நம்பப்படுகிறது.

திருச்செந்ததூர் : கடல் அலை 'ஓம்' என்ற ரீங்காரத்துடன் கரை மோதும் 'அலைவாய்' என்னும் திருச்செந்தூர் முருகன், சூரபத்மன் என்ற அசுரனுடன் போரிட்டு வென்ற இடமாகும். சூரபத்மன் தேவர்களையும், இந்திரனையும், அவன் மனைவியையும் சிறை செய்து கொடுமை செய்தான். அவர்களைக் காப்பாற்ற முருகன் சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றினார். சூரபத்மனுடன் முருகன் போர்புரிந்த இடமே திருச்செந்தூர். அவர் போர்புரிந்த காலம் கார்த்திகை மாதம் சஷ்டியாகும். அதனால்தான் கார்த்திகை மாதம் சஷ்டியின் போது விரதம் இருந்து முருகனை வழிபடுகின்றனர். போரின் இறுதியில் சூரபத்மன் பெரியமரமாக நிற்க முருகன் தன் தாய் தந்த சக்திவேலால் மரத்தைப் பிளக்கிறார். அதில் ஒருபாதி மயில் ஆகிறது. மற்றொரு பாதி சேவலாகிறது. மயிலைத் தன் வாகனமாகவும், சேவலைத் தன் கொடியாகவும் ஏற்றுக் கொள்கிறார்.

திருப்பரங்குன்றம்: தேவேந்திரனையும், தேவர்களையும் சிறை மீட்டதற்கு நன்றிக் கடனாக இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்குத் திருமணம் செய்துகொடுக்கிறான். முருகனுக்கும், தெய்வானைக்கும் திருமணம் நடந்த இடம் திருப்பரங்குன்றம். முருகனுக்கும் சூரபத்மனுக்கும் போர் முடிந்து முருகன் போரில் வெற்றி பெற்ற மறுநாள் இத்தெய்வீகத்திருமணம் நடந்ததாகக் கூறப்படுகிறது

சுவாமிமலை: தந்தைக்குப் பாடம் சொன்ன இடம் சுவாமி மலை. பிரணவ மந்திரத்திற்குப் பொருள் தெரியாத பிரம்மனை முருகன் சிறையில் அடைக்கிறார். இதைக் கேள்வியுற்ற சிவபெருமான், எனக்கும், பிரம்மாவுக்கும் கூடத் தெரியாத பிரணவமந்திரத்தின் பொருள் உனக்குத் தெரியுமா? என்று கேட்கிறார். அதன்படி உபதேசிப்பவன் குரு, கேட்பவன் சீடன் என்ற முறையில் முருகன் ஆசனத்தில் அமர, அவர் கீழ் சிவன் அமர்ந்து தன் கரத்தால் வாய் பொத்தி உபதேசம் கேட்ட இடமே சுவாமிமலை

திருத்தணி: முருகன் வேடர்குலத்தில் பிறந்த வள்ளியைக் காதல் மணம் புரிந்துகொண்ட இடமே திருத்தணி. வள்ளியின் தந்தை நம்பிராஜன் முருகனுக்கு வள்ளியைத் திருமணம் செய்து கொடுக்க மறுத்து, முருகனுடன் போரிட்டு மடிகிறான். பின் முருகன் வள்ளியைத் திருமணம் செய்து கொள்கிறான். முருகன் போரிட்ட கோபம் தணிய நின்ற மலையே தணிகை மலை ஆகும். அதுவே திருத்தணி என்று போற்றப்படுகிறது.

பழமுதிர்ச்சோலை: நக்கீரர், 'இழுமென இழிதரும் அருவிப் பழமுதிர்ச்சோலை கிழவோனே' என்று முருகனின் ஆறாவது படைவீடாகப் பழமுதிர்ச்சோலையைக் கூறித் திருமுருகாற்றுப் படையை நிறைவு செய்கிறார். குறிஞ்சிக் கடவுளாகிய முருகன் வயோதிகனாகத் தோன்றி நக்கீரனுக்குக் காட்சியளித்த இடம் பழமுதிர்ச்சோலையாகும்.

"ஓம் ச ர வ ண ப வ"


நன்றி சந்திரன் வலைத்தளம்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு

Back to top Go down

கந்தசஷ்டி விரதம் Empty Re: கந்தசஷ்டி விரதம்

Post by ந.கார்த்தி Thu Feb 16, 2012 7:15 pm

பகிர்வுக்கு நன்றி
ந.கார்த்தி
ந.கார்த்தி

Posts : 269
Join date : 15/08/2011
Age : 30
Location : sholingar

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

கந்தசஷ்டி விரதம் Empty Re: கந்தசஷ்டி விரதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum