இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


மாபலிச் சக்கரவர்த்தி- டாக்டர்.டி. செல்வராஜ்

Go down

மாபலிச் சக்கரவர்த்தி- டாக்டர்.டி. செல்வராஜ் Empty மாபலிச் சக்கரவர்த்தி- டாக்டர்.டி. செல்வராஜ்

Post by ஆனந்தபைரவர் Fri Feb 04, 2011 3:04 pm

மாபலிசக்கரவர்த்தியின் வரலாற்றுச் சுருக்கம்:
இராமாயணம், பாகவத புராணம், ஹரிவம்ச புராணம், அக்னிபுராணம் முதலிய பல புராணங்களில் மாபலிச் சக்கரவர்த்தியின் வரலாற்றைக் காண முடியும். இந்த வரலாறு மிக்க பழைமையானது.

பலி: ஸ்ரீமந் நாராயணனின் பேரருளைப் பெற்ற பிரகலாதனின் மகனான விரோசனனுக்கும், தேவிக்கும் பிறந்தவன் பலி. தன் தந்தையார், பாட்டனாரைப் போலவே பலியும், அறிவும், அழகும், அருளும், ஆற்றலும், ஆண்மையும், பக்தியும் பிறவும் நிறைந்த மாவீரன்.

மூன்று உலகங்களையும் வென்று தன் அடிப்படுத்த பலி “விஸ்வசித்” முதலிய பல சிறந்த வேள்விகளைச் செய்தான். அவற்றின் பயனாக அவன் பொன்தேர், குதிரைகள், சிம்மக்கொடி, வில், அம்புகள், திவ்யகவசம் முதலிய பல அரிய பொருள்களை அடைந்தான். அவற்றை மகிழ்ச்சியுடன் கொண்டுவந்து பாட்டனார் பிரகலாதனின் முன்னும், அசுரகுரு சுக்கிராசாரியார் முன்னும் வைத்து அவர்களின் வாழ்த்துகளை வேண்டினான். அவனை வாழ்த்திப் பிரகலாதன் ஒரு கவசத்தை அளித்தான். குரு ஒரு சங்கைக் கொடுத்தார்.

இவ்வாறு, பலியின் பரம்பரைத் தொடர்பாலும், தொடர்ச்சியாலும் கிடைத்த நாராயணப் பக்தியும், வரங்களும், பெரியவர்களின் வாழ்த்துகளும், குருவின் அருளும், பல வேள்விகளைச் செய்ததால் விளைந்த பல பலன்களும் ஒருங்கே நிறைந்தன. மற்ற எல்லாரையும் விடக் கூடுதலான பேராற்றல்கள் நிரம்பவே, அவனிடம் ஆணவப் பண்பும் அதிகமாகி மேலோங்கியது. இது ஓர் அசுரனுக்குரிய அடிப்படை இயல்பே.

மாபலி: பலி முதலில் தேவருலகமான அமராவதியை முற்றுகையிட்டான். முன்னர் அஞ்சி, அடங்கியோடிய அசுரர்கள், இப்போது அதிகமான ஆற்றல்களுடன் போரிட வந்திருப்பதை உணர்ந்த இந்திரனும், மற்றத் தேவர்களும் தேவகுருவான பிரகஸ்பதியிடம் அடைக்கலம் புகுந்தனர். உதவ வேண்டினர். அவரும் “இப்போது பலியை வெல்வது கடினம்; நீங்கள் மறைந்திருந்து பொறுத்திருங்கள்; நாராயணன் அவனுடைய ஆணவத்தை அடக்கி உங்கள் உலகை மீண்டும் மீட்டுத்தருவார்” என்று ஆணையிட்டார். குருவின் சொற்படி தேவர்களும் மறைந்து ஒடுங்கினர்.

பலி மூன்று உலகங்களையும் வென்றான். மாமன்னனாக முடிசூட்டிக் கொண்டு மகாபலியாக-மாபலியாக-உயர்ந்து பெருமையடைந்தான். அவனுடைய ஆணவப்பண்பும் மிக அதிகமானது.

வாமன அவதாரம்: காசிபரின் மனைவி அதிதி; சுரமாதா. இவள் தேவர்கள் தோற்றதால் மிக்க கலக்கமடைந்தாள். காசிபர் அறிவுறுத்தியபடி நாராயணனின் திவ்யத் திருமேனியைப் பொன்னால் வடித்து வழிபட்டாள். பசும்பாலை மட்டும் பருகிப் பன்னிரண்டு நாள்கள் பயோ விரதம் (பயோ=பால்) காத்தாள்.

அதிதியின் குறைகளை நிறைவேற்ற நாராயணன் ஆவணி மாதம், வளர்பிறை, துவாதசி திதி, திருவோண நட்சத்திரத்துடன் கூடிய திருமுகூர்த்த வேளையில், காசியப்பருக்கும், அதிதிக்கும் மாமகனாக வாமன அவதாரத்தை மேற்கொண்டார்.

வாமனன் இரண்டடி உயரமுள்ள குள்ளன்; குறளன்; பிரமச்சாரி. அப்புனிதமான வாமனனைத் தரிசித்தாலே இரக்கவுணர்வும், பரிதாபமும் உடனே தோன்றும். தானம் கேட்பதற்குரிய பொருத்தமான கச்சிதமான வடிவத்தை எம்பெருமான் ஏற்றருளினார்.

மாபலி நர்மதைக் கரையில் அசுவமேத யாகத்தைச் செய்து கொண்டிருந்தான். வாமனன் மாபலியிடம் “எனக்கு மூன்றடி மண் தானமாக வேண்டும். அதையும் என் கால்களால் அளந்தெடுத்துக் கொள்வேன்.” என்று யாசித்தான்.

மாபலி ஒரு வள்ளல். யாகம் நடைபெறுகிறபோது தானம் தர உடனே ஒப்புக் கொண்டான். ஓர் அலட்சியப்புனகை பூத்தான்.

சுக்கிராசாரியார், “வாமனனாக வந்திருப்பவன் வேறு யாருமில்லை; மாயங்களைச் செய்ய வல்ல நாராயணனே தேவர்களைக் காத்து அசுரர்களைத் தண்டிப்பதற்காகவே அவன் உன்னிடம் வஞ்சனையாய்த் தானம் கேட்கிறான். அவனுக்கு வெறும் மூன்றடி மண்ணைக் கூடத் தானமாகத் தரக்கூடாது” என்றும் மறுத்துக் கூறித் தடுத்தார்.

“வந்திருப்பவன் நாராயணன் என்றால் அவனுக்கு நான் நிச்சயம் தானம் தர வேண்டும். ஏனென்றால், அவன் செல்வத்துக்குரிய இலக்குமியின் கணவன். நான் தானம் தரும்போது இலக்குமியைத் தீண்டிய அவனது திருக்கை தாழ்ந்திருக்கும்; என் கை உயர்ந்திருக்கும். இதைவிட மேலான பேறு எனக்கு எப்போதும் கிடைக்கப் போவதில்லை” என்று மாபலி விளக்கிக் கூறி நிலத்தைத் தாரை வார்த்துத் தானம் தர முனைந்தான். எள்ளும், நீரும் கொண்டு வருமாறு தன் மனைவி வித்யாவலிக்கு ஆணையிட்டான்.

திரிவிக்கிரம அவதாரம்: தாரை நீருடன் நிலத்தைத் தானமாகப் பெறும்போதே வாமனன் விஸ்வரூபமெடுத்துத் திரிவிக்கிரமனாக விராட்புருடனாகத் திருக்காட்சி தந்தான்.

திரிவிக்கிரமன் முதலடியால் மேல் உலகத்தையும், இரண்டாமடியால் நிலவுலகத்தையும் அளந்தான். மூன்றாம் அடியை எங்கே வைப்பது என்று மாபலியை வினவினான். வாமனனாக வந்தவன் திரிவிக்கிரமனாக நின்றதைக் கண்டு மாபலி பதறினான். செயலற்றுத் திகைத்தான். வியப்புற்று நோக்கினான்.

மாபலிச் சக்கரவர்த்தி: மாபலியின் சத்தியக் குணமும், வாக்கும் வள்ளல் தன்மையும் செயலும் மாறவே கூடாது. ஆகவே, மூன்றாமடியைத் தன் தலைமீது பொருத்தி அளக்க மாபலி வேண்டினான். சரணடைந்தான். தலை தாழ்த்தினான்.

திரிவிக்கிரமன் மாபலியின் தலைமீது தன் திருவடியை வைத்து, அவனைக் கீழுலகத்தில் ஒன்றான அதலத்தில் அழுத்தி, அங்கு சக்கரவர்த்தியாக நிலைத்திருந்து அரசாளும்படி ஆணையிட்டான். அப்போது முதல் மாபலி மன்னன் மாபலிச் சாக்கரவர்த்தியாக உயர்ந்து மேலும் மேன்மையடைந்தான். நாராயணனின் திருவடித் தரிசனம் மூன்று உலகத்திலும் கிடைத்தது.

மாபலிச் சிரஞ்சீவியார்: மாபலிச்சக்கரவர்த்தி சிரஞ்சீவியர் எழுவரில் ஒருவனாக இப்போதும் நிலைத்து வழ்கிறான்.

வரம்: சிரஞ்சீவியாக என்றும் வாழும் மாபலி “ஆவணி மாதம் திருவோண நாளன்று, ஆண்டுக்கொரு நாள், நான் ஆண்ட நிலவுலகத்திற்கு வந்து, என் மக்களை வாழ்த்த வரந்தரவேண்டும்.” என்று நாராயணனை இறைஞ்சினான். எம்பெருமானும் இசைந்து வரம் தந்தருளினார்.

மாபலிச்சக்கரவர்த்தி ஆணவக் குணத்தால் தேவருலகத்தை இழந்தான். வள்ளல் குணத்தால், ஆண்டு தோறும் ஒரு நாள் நிலவுலகத்திற்கு வந்து மக்களுக்கு அருளும் வரத்தைப் பெற்றான். பாதாள உலகத்தின் சக்கரவர்த்தியாக சிரஞ்சீவியாகப் பெருமிதத்துடன் வாழ்கிறான். வரத்தின்படி ஆவணித் திருவோணத்தன்று மக்களுக்குத் தரிசனம் தருகிறான்.

அவதாரங்களும், அசுர மரபும்
நாராயணனின் அவதாரங்கள் பலவாம். இவற்றுள் ‘தசாவதாரம்’ என்ற பத்து அவதாரங்கள் மேன்மையானவை.

1.மச்ச அவதாரமும்,
2.கூர்ம அவதாரமும் முதல் இரண்டு அவதாரங்களாகும்.
3.வராக அவதாரம். இது மூன்றாம் அவதாரம்.

ஸ்ரீவைகுண்டத்தில், நாராயணனின் வாயிற்காவலராக ஜயன், விஜயன் என்ற இருவர் இருந்தனர். இவர்கள் சனகாதி முனிவர் நால்வரது சாபத்தால் இரணியகசிபு, இரண்யாக்ஷன் என்ற அசுர சகோதர்களாகப் பிறந்தனர். இரண்யாக்ஷனை வதைக்க எடுத்த அவதாரம் வராக அவதாரம். இது பகவானின் மறச்செயல்.

4.நரசிம்ம அவதாரம். இது நாலாம் அவதாரம். இரண்யாக்ஷனின் அண்ணன் இரண்யகசிபு (இரண்யன்). இவன் மகன் பிரகலாதன். இறைவன் நரசிம்மராக அவதரித்து இரண்யனைப் பிளந்தெறிந்தார். இதுவும் இறைவனின் மறச்செயல்.

5.வாமன - திரிவிக்கிரம அவதாரம். இது ஐந்தாம் அவதாரம். பிரகலாதனின் பேரனும், விரோசனனின் மகனுமான மாபலியின் ஆணவத்தை வெட்டி எறிந்து, அவனுக்குச் சிரஞ்சீவிப் பதமளித்த அவதாரம் இது. எம்பெருமானின் இச்செயல் அறச் செயலாம்.

மாபலியின் தேவி வித்யாவலி. இவர்களுக்கு நூறு மகன்கள் பிறந்தனர் என்பர். மூத்தமகன் வாணாசுரன். மாபலியின் பாதாள உலகத்தேவி தேவகி.

ஆகவே, இரண்யாக்ஷன், இரண்யகசிபு ஆகிய அசுர சகோதரர்களின் மரபுக்காக நாராயணன் மேற்கொண்டருளிய அவதாரங்கள் மொத்தம் மூன்று என்பது தெளிவாகத் தெரிகிறது.

வாமன, திரிவிக்கிரம அவதாரங்களின் தனிச்சிறப்புகள்:
1. வாமன அவதாரம், இதைத் தொடர்வது திரிவிக்கிரம அவதாரம். இவ்வாறு இரட்டை அவதாரங்கள் அடுத்தடுத்து இணைந்து நிகழ்கின்றன. இத்தகைய தனிச்சிறப்பு வேறு அவதாரங்களில் இல்லை.

2. வாமன, திரிவிக்கிரம அவதாரங்கள் இரண்டும் முரண்பட்டவை. (அ) வாமனன் குறளன்; மனிதன்; இந்த அவதாரம் உலகியலுடன் இயைந்தது. (ஆ) திரிவிக்கிரமன் உலகியலுக்கு மிக மிக அப்பாற்பட்ட தெய்விக நிலையுடையது. (இ) வாமனன் யாசிக்கிறான்; திரிவிக்கிரமன் அருளுகிறான். (ஈ) தானம் தந்தவனின் தலை மீது திருவடியைப் பொருத்தி, அவனை ஆழமான பாதாளத்தில் ஆழ்த்தித் தண்டித்ததும் ஒரு முரண்பாடுதான்.

3. மாபலி வாமனனுக்கு மூன்றடி மண்ணைத் தானமாகத் தந்தான். இதற்குப் பரிவர்த்தனையாகப் பாதாள உலகத்தின் ஆட்சிப் பொறுப்பை அளித்தான் திரிவிக்கிரமன்.

4. அவதாரம் எடுத்த நோக்கத்தைத் தொடங்கிச் செயற்படுத்துவது வாமன அவதாரம். அதை முடித்து நிறைவேற்றுவது திரிவிக்கிரம அவதாரம். இவை இரண்டும் ஒரே அவதாரமாகப் போற்றப் படுகின்றன.

5. வாமன அவதாரம் என்பது மனித வடிவத்தைப் பெற்ற முதல் அவதாரம் என்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.

6. இறைவன் எல்லாப் பொருள்களிலும் உறைந்து உறைபவன். சிறிய வடிவமான வாமன அவதாரத்தை இதற்கு விளக்கமாகக் கொள்ளலாம்.

கடவுள் எல்லாப் பொருள்களையும் கடந்த நிலையில் உள்ளவன். பெரிய வடிவமான திரிவிக்கிரம அவதாரத்தை இதற்கு மேற்கோளாகக் கொள்ளலாம்.

மேற்குறித்த இரண்டு அவதாரங்களும், நாராயணன் சிறிய பொருள்களை விட மிகச் சிறியவன், பெரிய பொருள்களை விட மிகப் பெரியவன் என்ற தத்துவங்களை உணர்த்துகின்றன.

திருவோணத்தின் சிறப்புகள்:
நட்சத்திரங்களில் நாராயணன் பிறந்த திருவோணமும், சிவனுக்குரிய திருவாதிரையும் “திரு” என்ற சிறப்பு அடைமொழியுடன் விளங்குகின்றன.

“நீ பிறந் ததிரு வோணம்
இன்றுநீ நீராட வேண்டும்
எம்பிரான் ஓடாதே வாராய்”
என்பது பெரியாழ்வார் திருமொழி (2:4:2)

திருவோணத்தில் பிறந்த நாராயணனுக்குத் “திருவோணத்தான்” என்பது ஒரு திருநாமமாம். “திருவோணத் தானுல காளுமென் பார்களே” பெரியார்வார் திருமொழி (1:2:3)

பழைமைச் சிறப்புகள்:
வாமன, திரிவிக்கிரம அவதாரச் சிறப்புகளும், மாபலிச் சக்கரவர்த்தியின் வரலாறும் மிக மிகப் பழைமை வாய்ந்தவை. இவர்களைப் பற்றிய அரிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. சில குறிப்புகள் வருமாறு:

1. “நீர் செல நிமிர்ந்த மாஅல் போல” முல்லைப்பாட்டு(3). நீர்செல=மாபலி தாரைவார்க்க.

2. “இருநிலம் கடந்த திருமறு மார்பன்” பெரும் பாணாற்றுப்படை (29).

3. “கணம்கொள் அவுணர்க் கடந்து பொலந்தார் மாயோன் மேய ஓண நன்னாள்” மதுரைக் காஞ்சி (590-591). மேய=விரும்பிய.

4. “ஞாலம் மூன்று அடித்தாய முதல்வன்” கலித்தொகை (124:1)

5. திரிவிக்கிரமன் கீழ் ஏழுலகங்களை ஓரடியால் கடந்தான் என்றும், அப்போது அவுணர்கள் அஞ்சி ஓடினர் என்றும் பரிபாடல் பாடுகிறது. (30:20, 54-56)

திருக்குறள்: (610)
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.

அடியால் உலகத்தை அளந்த திரிவிக்கிரமன் தாவிய நிலப்பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத மன்னன் ஒரு சேர அடைவான்.

சைவம்
மாபலிச் சக்கரவர்த்தியின் வரலாற்றைச் சைவ இலக்கியங்களும், வைணவ இலக்கியங்களும் ஒருங்கே புகழ்கின்றன.

திருமறைக்காடு எலியின் மறுபிறவி மாபலி:

இந்து சமயத்தில் மறுபிறவிகளைப் பற்றிய நம்பிக்கைகள் மிக அதிகமாகவே உள்ளன. இரண்டு “மறுபிறவிகள்” இங்கு முக்கியமாகக் குறிக்கத்தக்கன.

சிலந்தி 1. திருவானைக்காவில், இறைவனின் திருமேனிக்கு மேல், தூசும், மாசும் படியாதபடி, வலைகளைப் பின்னி, விதானம் அமைத்து, சிவத்தொண்டுகள் புரிந்த சிலந்தி, கோச்செங்கணான் என்ற மன்னனாக மறுபிறவி எடுத்தது.

எலி நிறைமறைக் காடு தன்னில்
நீண்டெரி தீபம் தன்னைக்
கறைநிறத்து எலிதன் மூக்குச்
சுட்டிடக் கனன்று தூண்ட
நிறைகடல் மண்ணும் விண்ணும்
நீண்ட வானுலக மெல்லாம்
குறைவறக் கொடுப்பர் போலும்
குறுக்கை வீரட்ட னாரே.
திருநாவுக்கரசர், ஓர் எலி மாபலியாக மறுபிறவி எடுத்த வரலாற்றைச் சுருக்கமாக வரைகின்றார். (திருக்குறுக்கை வீரட்டம், பாடல் 8)

“திருமறைக்காட்டில் (கருவறையில்) எரியும் விளக்கில் நிறைந்த எண்ணெயை உண்ண ஓர் எலி முயன்றது. தீயினால் அதன் மூக்கு சுட்டது. எலி திரியை நகர்த்தித் தள்ளியதால் விளக்கு முன்னைவிட மிகப்பிரகாசமாக எரியத் தொடங்கியது. அறியாமல் செய்த இச்சிவத்தொண்டின் பயனாக எலி மறுபிறவியில் மாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறந்தது. விண்ணையும், மண்ணையும், வானுலகையும் ஆளும் பேறு பெற்றது. இத்தகைய அருளைப் புரிபவர் திருக்குறுக்கை வீரட்டானத்து இறைவன் ஆவர்.”

மாபலிச் சக்கரவர்த்தியின் முற்பிறவி வரலாறு திருநாவுக்கரசர் தேவாரத்தில் விவரிக்கப்பட்டிருப்பது ஒரு தனிச் சிறப்பு.

மாபலி-சுக்கிரனின் வரலாற்றைச் சார்ந்த ஒரு சிவத்தலமும் உண்டு. அது வருமாறு:

திருமயிலாப்பூர் வெள்ளீசுவரர் கோவில்:

இது மயிலை கபாலீசுவரர் கோவிலின் தெற்கு மாட வீதியில், வடக்குப் பக்கத்தில், தெற்கு நோக்கி உள்ளது. முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பெற்றது.

சுக்கிரன் (வெள்ளி) நிலைநாட்டி வழிபட்ட ஈசுவரன் வெள்ளீசுவரன். இப்போது “வள்ளீசுவரன்” என்று மருவி வழங்குகிறது. இறைவி-காமாட்சியம்மன். தீர்த்தம்-சுக்கிரன் தீர்த்தம்.

தல வரலாறு:
மாபலி கமண்டல நீரைத் தாரையாக வார்த்து வாமனனுக்கு மூன்றடி மண்ணைத் தானமாகத் தந்தான். தானத்தைத் தடுக்கும் சுக்கிரன், ஒரு வண்டாக உருமாறித் தூம்பின் வாயிலை அடைத்து நீர் வழியாமல் நிறுத்தினான். இதனை உணர்ந்த வாமனன், ஒரு தருப்பையால் குத்தினான். சுக்கிரன் ஒரு கண்ணை இழந்தான்.

சுக்கிரன் இழந்த கண்ணைப் பெறவும், தானத்தைத் தடுத்த பாபம் அகலவும் ஈசுவரனைத் தியானித்துக் கடுந்தவம் புரிந்தான். இறையருளால் சுக்கிரன் இழந்த கண்ணை மீளவும் பெற்றான். பாபமும் அகன்றது.

திருக்கோவிலில், வைகாசித் திங்களில் பிரம்மோற்சவம் நிகழ்கிறது. எட்டாம் நாள் திருவிழாவில், இறைவன் சுக்கிரனுக்குக் கண் பார்வை அளிக்கும் ஐதிகம் நடைபெறுகிறது.

பொதுவாக, மாபலி, சுக்கிரனைச் சைவ இலக்கியங்களும் வாமன, திரிவிக்கிரம அவதாரத்தை வைணவ இலக்கியங்களும் போற்றிச் சிறப்பிக்கின்றன என்று சுருக்கமாகவும், தொகுத்தும் கூறலாம்.

ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியும், திரிவிக்கிரமனும்:
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவங்களில் ஊர்த்துவ தாண்டவமும் ஒன்றாகும். வலக்காலை உயர்த்தி நடனமாடும் ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியின் வடிவமும், வலக்காலை உயர்த்தி விண்ணளக்கும் திரிவிக்கிரமனின் வடிவமும் ஒப்பிட்டு நோக்கி மகிழத்தக்கன. இரண்டும் ஒரே சாயலுடையன.

வைணவம்
திருத்தலங்களில் வாமனன்-திரிவிக்கிரமன்-மாபலி-சுக்கிரன் திருவடிவங்கள்:
மாமல்லபுரம்: இங்கு வராகக் குகையில் அமைந்த திரிவிக்கிரமனின் வடிவம் மிகவும் நேர்த்தியானது. எட்டுத் திருக்கைகளுடன் கம்பீரமாகக் காட்சி தரும் திரிவிக்கிரமனைப் பிரமனும், சிவனும், சூரியனும், சந்திரனும் வழிபடுகின்றனர்.

திரிவிக்கிரமனின் சிற்ப வடிவங்களில் காலத்தால் மிக்க பழைமை வாய்ந்த வடிவம் இதுவே. இதன் காலம் கி.பி.7ஆம் ந்நூற்றாண்டு.

திருக்கோவலூர்: முதன் முதலில் ஆழ்வார்களால் பாடப் பெற்ற திவ்யதேசம் இதுதான். விழுப்புரம்-காட்பாடி ரயில் பாதையில் உள்ளது.

மிருகண்டு முனிவர் வாமன-திரிவிக்கிரம அவதாரத்தைத் தரிசிக்க விரும்பினார். தம் மனைவி மித்ராவதியுடன் கடுந்தவம் புரிந்தார். முடிவில், திரிவிக்கிரமன் அவருக்குத் திருக்காட்சி தந்து மூலவராக நிலைத்தார்.

மூலவர் பதினெட்டடி உயரமானவர். இடக்காலை ஊன்றியவர். வலக்காலை உயர உயர்த்தியவர். வலக்காலின் அருகில் முன் வலக்கை நீண்டுள்ளது. இச்சிலை மரத்தாலானது.

மூலவரின் வலக்கையில் சங்கும், இடக்கையில் சக்கரமும் இடம் மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மூலவர், பக்த பிரகலாதன், மாபலி, சுக்கிரன், தேவர், சித்தர் முதலானோர் புடை சூழ எழுந்தருளியுள்ளார்.

திருஊரகம் உலகளந்த பெருமாள் திருக்கோவில் காஞ்சிபுரம்:

மூலவர்: உலகளந்த பெருமாளின் சிலை 35அடி உயரமானது; 24அடி அகலமானது. மிக அழகானது; கம்பீரமானது; சுதையாலானது. திரிவிக்கிரமனின் சிலைகளில் இதுவே மிக மிகப் பெரியது. “பேரகத்தான்” என்பது இவரது திருநாமம்.

இடக்காலை விண்ணோக்கி உயர்த்தி வலக்காலை மாபலியின் தலைமீது ஊன்றியவர்.

இவர் இடக்கையில் இரண்டு விரல்களையும், வலக்கையில் ஒரு விரலையும் உயர்த்திக் காட்டுகிறார். அதாவது, விண்ணுலகையும், மண்ணுலகையும் ஈரடிகளால் அளந்து முடித்ததை இடக்கை இருவிரல்களால் சுட்டினார். தூக்கிய ஓரடியை எங்கே வைப்பது என்று மாபலியிடம் வினாவும் பாவனையில் வலக்கை ஒரு விரலை உயர்த்திக் காட்டுகிறார்.

வரலாறு: முன்னர் தானம் தந்தபோது மாபலியால் வாமனனை எளிதில் முழுமையாகத் தரிசிக்க முடிந்தது. ஆனால், திரிவிக்கிரமனின் ஊன்றிய திருவடிக்கீழ் அகப்பட்டு இடர்ப் பட்ட மாபலி அவனை முழுமையாகத் தரிசிக்க முடியவில்லை. அவ்வாறு தரிசிக்கவும் முடியாது. மாபலி, தனக்காக நாராயணன் எடுத்த அவதாரத்தைத் தானே முழுமையாகச் சேவிக்க முடியாமல் மிகத் துன்பமுற்றான்.

ஆகவே, மாபலி திரிவிக்கிரமனை மீண்டும் ஒருமுறை சேவிக்க வேண்டும் என்று பாதாள உலகத்தில் கடுமையான தவத்தை மேற்கொண்டான். எம்பெருமானும் திருவுள்ளம் மகிழ்ந்து நெகிழ்ந்தார். இத்தலத்தில் உலகளந்த பெருமாளாக மாபலிக்கு மீண்டும் தரிசனம் தந்தார்.

ஊரகம்: அப்படியும் மாபலியால் உலகளந்த பெருமாளைக் கண்ணார, உளமார, உயிரார முழுமையாகச் சேவிக்க முடியவில்லை. அனைவரும் எளிதில் சேவிக்கப் பகவான் பெருமாள் சந்நிதிக்குப் பக்கத்தில், சிறிய திருமேனியுடன் ஐந்தலை ஆதிசேடனாகப் பிரகாசிக்கிறார். இவரைப் போன்ற நாக மூர்த்தியை வேறு எங்கும் காணமுடியாது.

உலகளந்த பெருமாள் கோவிலும், ஊரகமும் இணைத்து ஒரே திவ்ய தேசமாகக் கருதப்படுகின்றன.

ஊரகம்: உரகம்=பாம்பு எழுந்தருளி இருப்பது ஊரகம். ஊர்ந்து செல்லும் பாம்பின் சந்நிதி.

திருவெள்ளியங்குடி: வெள்ளி=சுக்கிரன், மாபலி தானம் தரும்போது, ஒரு வண்டாகித் தடுத்து, ஒரு கண்ணை இழந்த சுக்கிரன் தவமிருந்து மீண்டும் கண்ணைப் பெற்ற திருத்தலம் இது. வெள்ளி என்ற சுக்கிரனின் பெயரோடு வழங்குகிறது.

மிக்க பெருபுகழ் மாவலி வேள்வியில்
“தக்கது இது அன்று” என்று தானம் விலக்கிய
சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய
சக்கரக் கையனே அச்சோ அச்சோ
சங்கமிடந்தானே அச்சோ அச்சோ.
என்று இந்த வரலாற்றைப் பாடுகிறார், பெரியாழ்வார் (1:9:7)

இத்திவ்ய தேசத்தை அடையக் கும்பகோணத்திலிருந்து பேருந்து வசதியுண்டு.

சீர்காழி: மூலவர் திரிவிக்கிரமன். தாடாளன். தாள்+ஆளன்; தன் தாள்களால் உலகை அளந்த தாளாளன்; தாடாளன்.

மாபலி யாகம் செய்த இடத்தில், தானும் யாகம் செய்ய விசுவாமித்திரர் விரும்பினார். யாகம் முடியும் வரையில் இடையூறுகள் வாராமல் காக்க இராமலக்குவர்களைத் துணைக்கு அழைத்ததாக வான்மீகி கூறுவர். அந்த இடத்திற்குச் “சித்தாஸ்ரமம்” என்பது பெயர். அச்சித்தாஸ்ரமம் இத்திருத்தலமே என்பது ஆய்வாளர் சிலரது கருத்து. இது மேலும் ஆய்வுக்குரியது; முடிந்த முடிபன்று.

திருக்குறுங்குடி: திருநெல்வேலியிலிருந்து தென்மேற்காக நாற்பத்தேழு கி.மீ. தூரத்திலுள்ள வாமனத் திருத்தலம். ஆகவே இதற்குக் குறுங்குடி என்ற திருப்பெயர் அமைந்தது.

திருவரங்கம்: அரங்கநாதர் கோவிலில் வாமனனுக்குத் தனிச் சந்நிதி உள்ளது.

மற்றவை: திரிவிக்கிரமன், மாபலியின் வடிவங்களை 1.காஞ்சிபுரம், கயிலாய நாதர் கோவில். 2.வரதராசப்பெருமாள் கோவில், 3.வைகுண்ட பெருமாள் கோவில். 4.நாமக்கல். 5.ஸ்ரீவைகுண்டம். 6.கள்ளழகர் கோவில். 7.மன்னார் கோவில். 8.தாடிக்கொம்பு. 9.திருக்கண்ண மங்கை. முதலிய பல திருத்தலங்களில் சேவிக்க முடியும்.

மாபலியை வரவேற்று வழிபடும் நாள்கள்.

பழங்கால முதல், இன்று வரை, தமிழகத்திலும், கேரளத்திலும் பக்தர்கள் மாபலியை வரவேற்று வழிபடுகின்றனர். இத்தகைய சிறப்பு வழிபாட்டு விழா நாள்கள், ஆவணி முதல் தொடர்ச்சியாக நான்கு மாதங்களில் அமைந்து வருவதை ஒரு தனிச்சிப்பாகவே கருதலாம். அந்த நான்கு நாள்கள் வருமாறு:

1. ஆவணி-திருவோண விழா. 2.புரட்டாசி-தீபாவளித் திருநாள். 3.ஐப்பசி-திருவோண விழா. 4.கார்த்திகை-திருக்கார்த்திகைத் திருநாள்.

ஆவணி- திருவோண விழா: கேரளத்தில், ஆவணி திருவோண நாளன்று, அனைவரும் மாபலியை வழிபட்டுப் பெருவிழாவாய்க் கொண்டாடிக் களிக்கின்றனர்.

புரட்டாசி-தீபாவளித் திருநாள்: புரட்டாசி அமாவாசையில் வருவது தீபாவளித் திருநாள். தீபம்+ஆவளி=தீப வரிசை. மாபலி, மாமன்னனாக முடிசூட்டிக் கொண்ட நாள் தீபாவளி என்பர். இந்த நாளை மக்கள் தீபங்களை வரிசையாக ஏற்றிச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.

நாராயணன் தந்த வரத்தின்படி, மாபலி, தான் அரசாண்ட நாட்டைக் காணவும், அதன் மக்களை வாழ்த்தவும் தீபாவளித் திருநாளன்று அவன் நிலவுகத்திற்கு வருவான் என்ற நம்பிக்கையும் உண்டு. அவனை மரியாதையுடன் வரவேற்க மக்கள் தீபங்களை வரிசையாக ஏற்றுகின்றனர்.

ஐப்பசி திருவோண விழா: சைவர்களும், வைணவர்களும் சமய வேறுபாடுகள் இல்லாமல், பழங்காலத்தில் திருவோண விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினர்.

திருஞான சம்பந்த சுவாமிகள் திருமயிலைத் திருப்பதிகத்தில், கபாலீச்சுரத்தில், ஒவ்வொரு மாதமும் நிகழ்ந்த திருவிழாக்கள் முறையே விவரிக்கிறார்.

“ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய்”
(திருமயிலைத்திருப்பதிகம், பாடல்2)

பொருள்: “பூம்பாவாய்! முனிவர்கள் மகிழ்ந்து போற்றும் ஐப்பசி மாதத் திருவோண விழாவைக் காணாமல் போவாயோ?” போகமாட்டாய். எழுந்து வருவாய் என்பது குறிப்பு.

ஐப்பசி ஓண நாளைத் தீர்த்த நாளாகக் கொண்டு, புராண காலதில், இராமர் பத்து நாள்கள் கொண்டாடிய விழா இது என்று தலபுராணத்தால் அறிய முடிகிறது. (ஓணம்=தீர்த்தம்) ஆனால் இக்காலத்தில் இவ்விழா நடைபெறுவதில்லை. சமய வேறுபாடு காரணமாக, வைணவச்சார்புடைய திருவோண விழாவைக் காலப்போக்கில் சைவர்கள் கொண்டாடாமல் கைவிட்டனர்.

திருமழிசை ஆழ்வாரும்,
“ஓண விழாவில் ஒலியதிர-பேணி
வருவேங் கடவா”

(நான்முகன் திருவந்தாதி 41) என்று வேங்கடவன் விரும்பும் திருவோண விழாவைச் சுட்டினார். இவ்விழா எந்த மாதத்தில் நடைபெற்றது என்பதைத் துல்லியமாக அறிய முடியவில்லை. ஆனால், இது வைணவச் சார்புடையது என்பது மட்டும் தெளிவாகிறது.

திருக் கார்த்திகைத் திருநாள்:

மாவலி: கார்த்திகைத் திருநாளன்று குழந்தைகள் “மாவலி” சுற்றுவார்கள். பனங்கருக்குகளை ஆணங்காய்களைப் பொடியாக்கி எரித்துக் கரியாக்குவர். அதைப் பனை யோலைக் கூடுகளில் நிரப்பி, கயிற்றோடு இணைத்து, மீண்டும் எரித்து விரைவாகச் சுற்றுவார்கள். அப்போது வட்ட வட்டமாகத் தீப்பொறிகள் தெறித்துச் சிதறுவது மிக்க கவர்ச்சியாக இருக்கும். சுற்றும் போது,

“கார்த்திகையோ கார்த்திகை
மாவலியோ மாவலி”

என்று மாவலியை-மாபலியை அழைத்து வரவேற்பது வழக்கம். இவ்வழக்கம் கிராமப் புறரங்களில் இப்போதும் உண்டு.

தீபத்தூண்: தீபத்தூண் ஒன்றை நாட்டி, அதில் வைக்கோலைச் செறிவாகச் சுற்றி, நெய்வார்த்து எரிக்கின்றனர். மாபலியை நினைத்து, அவனை நிலவுலகத்திற்கு வரவேற்கும் பாவனையில் தீபத்தைப் பிரகாசமாக ஏற்றுகின்றனர். ஜோதி மிகப் பிரகாசமாக எரியக் குங்குலியத்தை வாரி வீசுகின்றனர்.

மாபலியை வரவேற்க மாவலி சுற்றுகின்றனர். தீபத்தூண்களை எரிக்கின்றனர். வரவேற்பு முறைகள் அனைத்தும் தீயோடும், மிகப் பிரகாசமான ஒளியோடும், விளக்கு வரிசைகளோடும் தொடர்பு கொண்டு விளங்குவதைக் காணலாம்.

மாபலிச்சக்கரவர்த்தி நாராயணனிடம் விண்ணப்பித்த விண்ணப்பத்தின்படி இத்தகைய பிரகாசமான ஒளி அலங்காரங்கள் வீடுகளிலும், ஊர்களிலும் செய்யப்படுகின்றன.

கேரள நாட்டில்...
இரண்டு பேரரசர்கள்: புராண மரபின்படி கேரள நாடு இரண்டு பேரரசர்களுடன் தொடர்புடையது. ஒருவர் பரசுராமர். மற்றொருவர் மாபலிச் சக்கரவர்த்தி.

பரசுராமர்: இவர் நாராயணனின் ஆறாம் அவதாரம். ஏழாம் அவதாரமான இராமரிடம் இவர் தோல்வியடைந்தார். இவர், தமக்கென ஒரு தனி அரசு வேண்டுமென்று தியானித்துச் சிந்தித்தார். பின்னர் கடலரசனின் ஒப்புதல் ஆணையுடன் தம் பரசினை (கோடரியை) வீசி எறிந்தார். அது விழுந்த எல்லை வரையில் அமைந்த நாடே கேரள நாடு. எனவே, இந்த நாட்டிற்குப் “பரசுராமர் திருத்தலம்” என்ற வேறு பெயரும் அமைந்தது.

மாபலிச் சக்கரவர்த்தி: கேரள மக்கள் ஆவணித் திருவோணத்தன்று மாபலிச் சக்கரவர்த்தியை வரவேற்று வழிபடுகின்றனர். அன்று பெரும்பாலும் நிறைமதி நாளாகவும் இருக்கும்.

ஆவணித் திருவோணம்: கேரளாவில் ஆவணி மாதமே ஆண்டின் முதல் மாதமாம். ஆவணித் திருவோணத்தின் முன்வரும் அஸ்தநட்சத்திரம் தொடங்கிய பின் வரும் மக நட்சத்திரம் வரை மொத்தம் இருபத்தைந்து நாள்கள் திருவோண விழாவைப் பெரு விழாவாகக் கொண்டாடுகின்றனர். அவரவர் வசதி, வளப்பங்களுக்குத் தகுந்தபடி விழா நாள்களின் எண்ணிக்கை வேறுபடுகிறது.

அஸ்தப் பூக்கோலங்கள்: திருவோண நாளுக்குப் பத்து நாள்கள் முந்தியது அஸ்த நட்சத்திர நாள். இந்த நாளில் திருவோணவிழா பூக்கோலங்களுடன் தொடங்குகிறது.

அஸ்த நாளில், வண்ண வண்ணப் பூக்களைத் தொகுத்து, முற்றங்களில், விதவிதமான கோலங்களைப் புனைகின்றனர். இவற்றை “அஸ்தப் பூக் கோலங்கள்” என்பர்.

வண்ண வண்ணப் பூக்களில் குறிப்பாக வெள்ளை நிறத் தும்பைப் பூக்களை மிகுதியாகப் பயன் படுத்துகின்றனர். இப்பூக்கள் அனைத்தும் மக்களின் களிப்பின் வெளிப்பாடாக அடையாளமாகப் பொலிகின்றன.

கோலங்களின் மையத்தில், சதுர வடிவுடைய பிரமிடு போலக் கூம்பு தலையுடைய அமைப்பைப் பொருத்தி, அதில் நாராயணனையும், மாபலிச் சக்கரவர்த்தியையும் எழுந்தருளச் செய்து வழிபடுகின்றனர். பலர் குத்துவிளக்கை மையத்தில் வைத்து வழிபடுகின்றனர்.

சமுதாய விழா: கேரளத்தில் திருவோண விழா சமயத் தொடர்பான விழாவாக நடைபெறுவதில்லை. மலையாளிகள் அனைவரும் ஒருங்கே திரண்டு, சமய வேறுபாடுகள் இல்லாமல் பக்திப் பரவசத்துடன் கொண்டாடுகின்றனர்.

திருவோண விழாவைச் சார்ந்து மகிழ்ச்சி பூக்கும் நிகழ்ச்சிகள் பல, பல இடங்களில் நிகழ்கின்றன.

கத களி நடனம்: ஷோரனூரில் கதை பொதி நடனத்தைக் - கதகளியைக் கண்டு களிக்கின்றனர்.

கை கொட்டிக்களி: மகளிர் ஒரு விளக்கை மையமாக வைத்து, வட்டமாக நின்றும், இயங்கியும் கைகளைக் கொட்டிக் களிப்பது களிப்படையச் செய்வது “கை கொட்டிக் களி” இதனைத் தமிழகத்தில் “கும்மி அல்லது கொம்மியடித்தல்” என்பர். நடமாடும் மகளிருக்கு மலர் விரிப்புகளை விரிப்பது ஒரு தனிச் சிறப்பாகும்.

வள்ளம் களி: ஆரன் மூலாவில் உலகப் புகழ்பெற்ற “வள்ளம் களி” என்ற படகுப் போட்டி மிக மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

இவ்வாறு, கேரள மக்கள் தம்மையும், தம் வீடுகளையும், நாட்டையும் உயர் உச்சநிலைச் சிறப்புகளுடன் அழகு படுத்திச் சுற்றத்தினரையும், நட்பினரையும் விருந்தோம்பித் திருவோண விழாவை மிக்க சிறப்புடன் கொண்டாடுகின்றனர். அவர்கள் மிக்க சிறப்புடன் கொண்டாடுகிற ஒரே விழா இத்திருவோண விழாவேயாம்.

திருக்காட்கரை: இது கேரள நாட்டுத் திவ்ய தேசம். இது ஷோரனூர், எர்ணாகுளம் ரயில் மார்க்கத்தில் உள்ள இடைப்பள்ளி என்ற புகைவண்டி நிலையத்திலிருந்து மூன்று கி.மீ. தூரத்தில் உள்ளது.

மூலவர்: வாமன மூர்த்தி; அப்பன், வாமனன் சங்கு, சக்கரம், கதை, பத்மத் திருக்கைகளுடன் மாபலிக்குக் காட்சி கொடுத்த அதே திருக்கோலத்துடன் சேவை சாதிக்கிறார். ஆகவே, இது வாமனத் திருத்தலம். தாயார்: பெருஞ்செல்வ நாயகி.

அப்பனிடம் ஓர் அடியார் பொன் வாழைக்குலைகளைச் சமர்ப்பித்து நேர்ந்து கொண்டு வழிபட்டதால் “நேந்திர வாழை” என்ற இனமே உருவானதாம்.

நம்மாழ்வார் மட்டும் பதினொரு பாசுரங்களால் இத்திவ்ய தேசத்தை மங்களா சாசனம் செய்தார். ஒரு பாசுரம் வருமாறு:-

நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை
ஈர்மை செய்து என்னுயிராய் என்னுயிருண்டான்
சீர்மல்கு சோலை தென் காட்கரை என்னப்பன்
கார்முகில் வண்ணன்தன் கள்வம் அறிகிலேனே.
திருவாய் மொழி (9:6:3)

இத்திவ்ய தேசம் தோன்றிய பிறகே கேரளத்தில் திருவோண விழா மிக்க புகழ் பெற்றது என்று பலரும் கருதுகின்றனர்.

செப்புப்பட்டயம்: திருவோண விழாவைப் பற்றிய விவரங்கள் அடங்கிய கி.பி. 861ஆம் ஆண்டில் எழுதப்பட்ட செப்புப் பட்டயம் ஒன்று கிடைத்துள்ளது. இவ்விழாவின் அருமை பெருமைகளை அறிய இச்செப்புப் பட்டயம் ஒரு சான்றாக இருக்கிறது.

அறுவடைத்திருவிழா: உழவர்கள் திருவோண விழாவை அறுவடைத் திருவிழாவாகக் கொண்டாடுகின்றனர். அறுவடைக் காலத்தில் புதுப்பயிரை அறுவடை செய்து திருவோணத் திருநாளன்று விருந்தோம்பிக் களிக்கின்றனர்.

விரதங்கள்.
திருவோண விரதம்: மாதந்தோறும் திருவோண நாளன்று நாராயணனை வழிபட்டு விரதங்காப்பது திருவோண விரதம். இந்த விரதத்தால், சீர் குலைந்த மனநலம் சீராகும். உறவினர் கொண்ட பகை அகலும். பகைவர் நண்பராவர். பொதுவாக, துன்பங்கள் அனைத்தும் நீங்கும் அல்லது தணியும்.

வாமன ஜெயந்தி விரதம்: வாமனன் அவதரித்த நாளான ஆவணி-வளர்பிறை-துவாதசி-திருவோண நாளன்று, வாமனனை வழிபட்டு மிக மிகப் பலர் உண்டு களிப்பர். மிக மிகச் சிலர் விரதமிருப்பர்.


நன்றி அம்மன் தரிசனம்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics
» டாக்டர் உதய மூர்த்தி ஒலி வடிவப் புத்தகம்
» சமஸ்கிருதம், வேதத்தில் புதைந்துள்ள அறிவுப் பொக்கிஷம்-- டாக்டர் அப்துல் கலாம்
» மூச்சுப் பயிற்சியின் சூட்சுமம்!-டாக்டர் ஜாண் பி. நாயகம் M.B.B.S., M.D., Ph.D., D.Sc., F.C.D.
» டாக்டர் இயான் ஸ்டீவன்சனின் முற்பிறவி – மறுபிறவி ஆராய்ச்சிகள்
» டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பேச்சு-தமிழாக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum