இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


நலம் தரும் நடராஜப் பெருமான்!-பண்டித கே.சுப்புலெட்சுமி

Go down

நலம் தரும் நடராஜப் பெருமான்!-பண்டித கே.சுப்புலெட்சுமி Empty நலம் தரும் நடராஜப் பெருமான்!-பண்டித கே.சுப்புலெட்சுமி

Post by ஆனந்தபைரவர் Thu Mar 24, 2011 4:10 pm

சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் என்று பொருள். உலக இயக்கம் ஐம்பூதங்களால் நடைபெற அவற்றை ஆட்டுவிக்கும் ஆடலரசனாக நடராஜராக விளங்குவது சிவமே. முதன் முதலாக அவர் அம்பலத்தில் ஆடியது சிதம்பரம் என்னும் தில்லைப்பதி. ஆனால் மணிவாசகப் பெருமான் நேரில் கண்டு ஆனந்தம் கொண்டது திருஉத்திரகோச மங்கை என்னும் பதியாகும். இங்கு அறையில் ஆடிய பெருமானிடம் மாணிக்கவாசகப் பெருந்தகை உலக மக்கள் கண்டு ஆனந்திக்க ஏதுவாக சிவம் அம்பலத்தில் ஆடவேண்டும் என வேண்டு கோள் வைக்க, அடியாரின் அன்பினை ஏற்று தில்லையில் திருநடமிட்டார்.
பஞ்சபூதத் தலங்களாக விளங்குவன வற்றுள் நிலம் என பிருத்வி தலம் காஞ்சிநகர். நீர் என விளங்கும் அப்புத்தலமாக திரு வானைக்கா. தீ என விளங்கும் ஜோதியாக விளங்குவது திருஅண்ணாமலை. வளி எனப்படும் காற்றின் தலமாக திருக்காளத்தி. பரவெளியாக வான்வெளியாக நிர்மலத்தன்மை கொண்டதாக சிதம்பரம் விளங்குகிறது. ஐம்பூதத் தலங்களில் சிதம்பரம் அம்பலத்தில் ஆடிய பெருமை அண்டங்களைத் தன்னுள் அடக்கி ஆளும் ஞானவிசும்பு ஐந்தொழில் வல்லானை வணங்க வந்து சேரும் வளங்கள்.

சிவம் பற்றி திரு.வி.கல்யாணசுந்தரனார் கூறிய விளக்கம்: ஆயிரத்தெட்டு பெயர்கள் கொண்ட சிவன் இரு நிலை கொண்டவர். ஒன்று எல்லாவற்றையும் கடந்த நிலை. மற்றொன்று எல்லாவற்றிலும் கலந்த இயற்கை நிலை.

இயற்கையோடு கலந்த நிலையில் இயக்கம் அசைவு உண்டாகிறது. தனித்த சிவத்திற்கும், தனித்த இயற்கைக்கும் இயக்கம் கிடையாது. சிவமும், இயற்கையும் கலந்த நிலையில் பல கலைகள் உள்ளன. அவற்றுள் மிக ஏற்ற முடையது நடமாடும் அழகுத் திருக்கோலம்.

சிவதாண்டவத் திருத்தலங்கள்:-

நடராஜர் அறையில் ஆடியது திருஉத்திர கோசமங்கை. இங்கு சுமார் ஆறு அடி உயர மரகத நடராஜர் காட்சி தருவது ஆருத்ரா தரிசன நாளில் மட்டும்தான். மற்றைய நாள்களில் திருக்கதவம் திறப்பதில்லை. ஆருத்ரா அபிஷேகம் நள்ளிரவு முதல் காலை சுமார் நான்கு மணிவரை நடைபெறும். காலையில் திருமேனி காணத் திருக்கதவம் திறந்து முந்தைய ஆண்டில் அபிஷேகங்கள் முடித்து மரகத நடராஜருக்கு தூய சந்தனக்காப்பு மேனி முழுவதும் சாற்றியதை எடுத்து நடராஜ தரிசனம் அமைய வைத்திருப்பார்கள். அன்றிரவு, அபிஷேகங்கள் முடிந்ததும் சந்தனக்காப்பிட்டு பூஜைகள் நடக்கும். நடைசாற்றினால் மறு ஆண்டில்தான் மீண்டும் காணமுடியும்.

மணிவாசகர் பாடல்களில் “உத்திரகோச மங்கைக்கரசே” என முடியும் பாடல்கள் சிவத்தலங்களில் பள்ளியறைக்காட்சி தரிசனத் தில் பாடி நடைசாற்றுவது நடைமுறையில் உள்ளது.

பதஞ்சலி முனிவரும், புலிக்கால் முனி எனப் போற்றப்படும் வியாக்ரபாதரும், சிவகாமி அம்மையும் மகிழ, முயலகனை மிதித்து சிதம்பரத்தில் சிற்றம்பலத்தில் ஆடும் நடனமே ஆனந்த நடனம். நெல்லையம்பதியில் முனிதாண்டவம், திருப்பத்தூரில் கௌரி தாண்டவம், திருக்குற்றாலத்தில் திரிபுரத் தாண்டவம், மதுரையில் சந்தியா தாண்டவம், மன்னனுக்காக கால் மாறி ஆடிய இடமாகும். திருவாரூர் அஜபா நடனம், திருமால் தன் நெஞ்சத் தாமரையில் வைத்துள்ளதால் பூஜித்து மந்திரம் சொல்லிய போது மேல்மூச்சு, கீழ்மூச்சு அசைந்தாடிய நடனம் அஜபா நடனம் என்பர்.

திருநள்ளாறு பதியில் ஆடுவது உன்மத்த நடனம். பித்தம் போல் தலைசுற்றி ஆடுவதாகும். கடலலை போல் ஆடுவது திருநாகையில் தரங்க நடனம். கோழிபோல் ஆடுவது திருக்காறாயில் பதியில் குக்குட நடனம். திருக்கோளிலி (திருக்குவளை) பதியில் பிருங்க நடனம். பிருங்கம் என்றால் வண்டு என்ற பொருள்படும். வண்டு போல் குடைந்தாடும் நடனம் பிருங்க நடனமாகும். திருவாய்மூர் என்னும்பதியில் கமல நடனம். தாமரை மலர் குளத்தில் காற்று அலைகளுக்கு ஏற்ப அசைந்தாடும் தன்மை போன்றது.

திருமறைக்காடு (வேதாரண்யம்) பதியில் அம்ஸபாத நடனம். அன்னம் போல் அடி எடுத்து வைத்தாடுவது. திருவாலங்காட்டில் காளியின் செருக்கை அடக்க வீரபத்திர உருவில் ஆடிய தாண்டவம் ஊர்த்துவ நடனமாகும். தில்லை பொன்னம்பலத்தின் எதிரில் உள்ள நிருத்த சபையில் ஊர்த்துவ தாண்டவ சிற்பம் உள்ளது. மேல்நோக்கி ஆடும் நடனம் ஊர்த்துவ தாண்டவம் என்பர்.

சிதம்பரம் என்பது கோவிலையும், தில்லை என்பது ஊரின் பெயராகவும் அமைந்தவை. சித்+அம்பரம்=சிதம்பரமாகியதாகக் கூறுவர். “சித்” என்பது ஞானத்தைக் குறிக்கும். “அம்பரம்” என்பது “பரவெளி” அதாவது ஞானவெளி என்பது ஆய்ந்த அறிஞர்களின் முடிவு.

அம்பலம் என்ற சொல் கேரளத்தில் உள்ள கோவில்களைக் குறிப்பிடுவதாகும். இங்கும் அம்பலங்கள் உண்டு.

நடராஜப் பெருமான் எழுந்தருளிக் காட்சி தரும் இடம் சிற்றம்பலம். திருமஞ்சன மாடுமிடம் பொன்னம்பலம். ஊர்த்துவ மூர்த்தியாக கற்சிலை உள்ள இடம் கூத்தம் பலம். தீட்சிதர்கள் பொதுக்குழு கூடுமிடம் பேரம்பலம். ஆயிரக்கால் மண்டபம் இராஜ சபையாகும். குதிரைகள் பூட்டிய தேர் போன்ற அமைப்பிலான மண்டபம் நிருத்தசபை. இவ்வாறு பல அம்பலங்கள் (சபை) இருப்பதனால் சபாபதி, அம்பலவாணர் என்ற பெயர்களும் நடராஜருக்கு உண்டு.

பொன்னம்பலத்தில் மேற்கூரையாக உள்ள பொன் ஓடுகள் 21600 ஆகும். அவற்றை நிலையாக உறுதிப்படுத்தும் ஆணிகள் 72000 எனக் கூறுவர். ஒவ்வொரு மனிதனும் தினந்தோறும் 21600 முறை சுவாசிப்பதாகவும், 72000 நரம்புகள் மனித உடல்கூறாக இருப்பதாகவும் இவற்றை விளக்குமுகமாக ஓடுகளும் ஆணிகளும் அமைந்திருப்பதாகக் கூறுவார்கள்.

பொது நோக்கில் மனிதன் உடற்கூறு, ஆன்மா என்னும் பரம்பொருளால் ஆட்டு விக்கப்படுகிறது என்பதையே உணர்த்தும்.

கலைவளரக் காரணமாக அமைந்து மனித நேயத்தை, பண்புகளை பக்திமார்க்கத்தில் பரமனடி போற்றி கலைகளுள் மிகத்தொன் மையான பலகலைகளின் கால்கோளாக விளங்குவது நடனமாகிய பரதக்கலை.

மனம் போன போக்கில் நடந்து மாசுபடுதலைத் தடுக்க கலைகள் ஈர்ப்புச் சக்தியாக விளங்குகின்றன.

பரதம் என்ற சொல்லில் நாட்டியம் என்ற பொருள் இருந்தாலும் நம் மனத்தை வயப்படுத்த ஆனந்த நிலை கொள்ள அச்சொல்லில் நயமிகு கருத்துகள் உள்ளன.

“பா” என்பது சுருக்கமாகி “ப” எனக் கூறப்பட்டதாகக் கொள்ளலாம். சொற் குறுக்கம் தமிழ் இலக்கிய வழக்கில் உண்டு. சான்றாக அன்னம் என்பது அனம் என்று குறுகிவரும். “பா” என்பது அபிநயத்திற்கு உரியதான பாடல்கள் கொண்டது எனலாம். அதேபோல “ர” நீக்கி விட்டுப் பார்த்தால் பதம் என வரும். இசைக்கேற்ப தாளக்கட்டு அவசியம். பதம் என்பது தாள வகைகளைக் குறிக்கும்.

இசையோடு லயம் கூடும்போது அதற் கேற்ப சுற்றி, வளைந்து, நெளிந்து பாவங்களைப் பரிணமிக்கச் செய்ய வேண்டும். கோவிலைச் சுற்றி ரதம் ஆடி அசைந்து வருதல் போல் இருக்க வேண்டும் என்பதாகும். அவ்வாறு ஆடுங் கலையுடையோர் மூச்சிழுத்து “தம்” பிடிக்க வேண்டும்.

இசை, லயம், பாவம் உணர்வுகள் வெளிப்பாடு என ஒன்றிணையும் போது மனமொன்றிய ஈடுபாடு எற்படுகிறது. பரதக்கலை மூலம் மன அமைதி. ஆனந்தம், தெய்வ உணர்வில் லயித்தல், மெய்ஞான உணர்வு உண்டாக்குதல் ஏற்படுகிறது. ராக, தாள, பாவ நிலையுடையது கூத்து. இதைத் தோற்றுவித்து ஆடலரசனாக விளங்குவதால் கூத்தன் என்ற பெயர் பெற்றான்.

அறையில் ஆடிய சிவனார் நடனம் கண்டு பரவசம் கொண்ட மாணிக்கவாசகர் பாடல்களில் ஒன்றேனும் படித்து பயனாக்குதல் பக்திநெறியில் ஓர் ஊன்றுகோல் ஆகும்.

“கடையவ னேனைக் கருணையினால்
கலந்தாண்டு கொண்ட
விடையவனே விட் டிடுதிகண்டாய்
விறல் வேங்கையின் தோல்
உடையவனே மன்னும்
உத்தரகோச மங்கைக் கரசே
சடையவனே தளர்ந்தே னெம்பி
ரானென்னைத் தாங்கிக் கொள்ளே!”

உத்தரம்=உபதேசம், கோசம்=ரகசியம், மங்கை=மங்களநாயகி.

பிரணவ ரகசியப் பொருளை மங்கள நாயகியாம் உமையம்மைக்கு உபதேசித்த இடம் திருஉத்தரகோசமங்கை என்பதாகும்.

“பொருளே தமியேன் புகலிட
மேநின் புகழிகழ்வார்
வெருளே யெனை விட்டிடுதிகண்டாய்
மெய்மை யார் விழுங்கும்
அருளே அணிபொழில்
உத்தரகோச மங்கைக்கரசே
இருளே வெளியே இகபர
மாகி இருந்தவனே”

கழல் கண்ட காட்சியினைக் கூறும்போது அறையுள் ஆடிய ஆடல் வல்லாரின் திருவடி கண்ட களிப்போடு பாடுகிறார்.

“களிவந்த சிந்தையொடுன்
கழல் கண்டும் கலந்தருள
வெளி வந்திலேனை விடுதிகண்
டாய் மெய்ச் சுடருக்கெல்லாம்
ஒளி வந்த பூங்கழல்
உத்தரகோச மங்கைக்கரசே
எளிவந்த எந்தைபிரான்
என்னை யாளுடை யென்னப்பனே”

சிவனுறை திருக்கோவில்களில் நடராஜப் பெருமான் திருநடனக் காட்சி காணலாம். ஒரு கால் முயலகனை மிதித்தவாறும் மற்றொரு கால் தூக்கிய திருவடியாகவும் காண்கிறோம். அதன் உட்பொருள் நம் இருவினைப் பயன்களை அவருடைய திருவடிகளில் அழிந்துபட ஒரு திருவடியும், இறையின்பம் எளிதே பெற, தூக்கிய திருவடியை நம் இரு கரங்களாலும் பற்றிக் கொள்ள “வா” என அழைப்பதாகும்.

சிவநெறியில் சிந்தை கொண்டு தவநெறியாம் ஒழுக்கநிலை நிறைவாகக் கொண்டு பரம்பொருள் தருமின்பம் பேரின்பம் என்ற உணர்வு கொண்டு கருமங்கள் தருமநெறியில் செயல்பட சிலைவடிவாய் கலையுணர்த்தும் வழி கொண்டு ஆலமர் செல்வன் திருவடி போற்றுவோம்.

ஆட்டுவிக்கும் அம்பலவாணன் நீட்டிக் காட்டும் திருவடிப் பேறு எல்லாரும் பெற்று இன்புற வேண்டுவோம்.

“நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே” என்று மணிவாசகர் பெருந்தகை கூறுகிறார். காரைக்கால் அம்மை “நன்காடு” என்று மங்கலச் சொல்லாகப் பயன் படுத்தப்படும் சுடுகாடு மற்றும் இடுகாட்டில் நள்ளிரவில் பேய்கணங்களோடு எம்பெருமான் நடமாடிக் கொண்டிருக்கும் செய்தியை அதாவது ஊர்த்துவ தாண்டவத்தை தனது திருவாலங் காட்டு மூத்த திருப்பதிகத்தில் கூறி ஆனந்தப் படுகிறார்.

“தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே” என்று மாணிக்கவாசகர் திருவாசகத்தில் (திருச்சாழலில்) கூறுவதன் உட்பொருள் உணரத்தக்கது.

“கோவில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை
தாயுமிலி தந்தையிலி தான் தனியன்காணேடி”

என்பது விளக்கமாக நமக்களிக்கப்பட்ட பாடல் வரிகளாகும். குடியிருப்பது சுடுகாட்டில், அணிவது புலித்தோல், தாய் தந்தையற்ற தனித்த நிலையுடையவன் என்று ஒருத்தி வினாவிட மற்றொருத்தி சிவனின் பெருமைகளைக் கூறும் நிலை சிறப்பிற்குச் சிறப்பு சேர்க்கும்.

உலகம் யாவிலும் ஒழுங்காக ஐந்தொழிலும் நடைபெற விழிப்பு நிலை அமைய வேண்டும். நன்கு நடனமாடுபவர் விழிப்புணர்வு பெற்றிருப்பது அவசியம். உலக இயக்கம் ஒடுக்கம் ஆகியன நடத்தும் போது விழிப்புணர்வு கொண்ட கலையான நடனக்கலையை ஏற்றுக் கூத்தாடியாக, கூத்தாட்டுபவனாக விளங்குகிறான்.

பிரபஞ்சம் அழியும் நிலை கொண்டது என்ற உணர்வினை ஊட்டும் சுடுகாடு - ஆணவத்தை அழித்திடலைக் குறிப்பிடும். புலித்தோல் பிறவாதவன், இறவாதவன்.

உலகம் ஒரு சுடுகாடு - விரும்பி உறையும் இடம். கோவில் சுடுகாடு - உண்டாக்கியன யாவும் அழியும் தன்மையன. இதை உணர்விக்கும் முகமாக கோவில் சுடுகாடு என்றார் திருவாசகத்தேன் தந்த பெருந்தகை. ஊழிக்காலத்தினில் நள்ளிருளில் சுடுகாட்டில் கோவில் கொண்டு (கோ-ஆண்டவன், இல்-வீடு)

தாண்டவமாடும் தலைவன் ஒருவனே=நடராஜனாகிய சிவனே என மற்றவள் பதில் கூறுவது போல தேனமுதில் விளக்குகிறார்.

எல்லா உயிர்களும் ஐந்தொழில் புரியும் ஆடல் வல்லானின் கோவிலுக்கு கட்டாயமாக வந்து சேர வேண்டும். வீடு பேறு தரும் கோவில் கொண்டவன் என்பதற்கும் ஒரு சான்று காண்போம்.

சுவாமி விவேகானந்தரின் ஞானகுரு ஸ்ரீஇராமகிருஷ்ண பரமஹம்ஸர் என்ற ஞானி என்பதை அறிவோம். இவர் சுடுகாட்டிற்கு அவ்வப்போது சென்று நள்ளிரவு நேரங்களில் தியானம் செய்து வந்தார் என அறியும்போது வீடு பேறு பெற நன்காடு என்னும் கோவில் சென்று பக்குவ நிலை பெற்றார் என்பது விளக்கப்படும் உண்மை. சித்தர்களும், ஞானிகளும், யோகிகளும், முனிவர்களும் நன்காட்டிலே தியானம் கொண்டு தவவலிமைகளைப் பெருக்கி ஆத்ம சாதகர்களாக விளங்கியுள்ளனர். அவர்களின் அதிட்டானத்தில் சாதகத்திற்கான தியானம் செய்து மாமுனிவர்களாக விளங்கியுள்ள நிலைகள் யாவரும் ஏற்கும் தன்மையனவாகும்.

வாரணாசி என்னும் காசியில் உயிர் துறக்கும் எல்லா ஆன்மாக்களுக்கும் தாரக மந்திரமாகிய பிரணவத்தை உபதேசித்து முக்தியாம் வீடுபேறு தருபவர் சிவபெருமான் என்பது அறிந்த ஒன்றே.

பிறப்பு ஏன்? இறப்பு ஏன்? பிறக்குமுன் யார்? பிறப்பிறப்பற்ற நிலை பெறுவது எவ்வாறு? போன்ற ஆத்ம விசாரணைக்கு, தன்னைத்தான் உணரும் நிலைக்கு தியானம் செய்ய, எம்பெருமான் விழிப்புணர்வின் விளக்கமாக நடுஇரவில் கணங்களோடு ருத்ர தாண்டவம் ஆடும். புண்ணியபூமிக்கு எல்லாரும் நடு இரவில் சென்று நாதனருள் பெற முடியாதே! சிலராலே மட்டும்தான் முடியும். எனவே திருக்கோவில்களில் நடராஜராக அருள் பாலித்து ஆத்மசோதனை செய்து கொண்டு நல்வழி கைக்கொள்ள ஆனந்த நிலையடைய ஆனந்த நடராஜராக விளங்குகிறார்.

வாழ்வியல் ஒரு கலை. தன் வாழ்விற்கும் பிறரது வாழ்வுக்கும் ஆனந்தமளிக்கும் நிலையில் வாழ்வது உயர்கலை. நற்றொண்டு நாளும் கொண்டு கொற்றவனின் பாதம் கண்டு பணிந்திட வீடுபேறு என்னும் ஆனந்த நிலையுண்டு. படமாடும் உடலோடு நடமாடும் ஈசனின் திருவடிகளைப் போற்றிப் பணிவோம். நன்மைகள் நாளும் உண்டாம்.

தாண்டவ நிலைகள் உணர்த்தும் செயல் பாடுகள் படைத்தல் தொழிலை ஈசன் கைக் கொண்ட நிலையே காளிகா நடனம் என்றும், காத்தல் தொழில் நிலை பெற்று சிறப்புற கௌரி நடனம் என்றும், காத்தலுக்கு உரிய செயல்கள் சிறப்புக்கு சந்தியா தாண்டவம் என்றும் உற்பத்தியான உண்டாக்கப்பட்டவை ஒடுங்கும் நிலையான அழித்தல் தொழில் பற்றி அறிவுறுத்துவதுதான் சங்கார தாண்டவம். மறைத்தல் தொழில் பற்றிய விளக்கமாகத் திரிபுர தாண்டவம். அருள் புரியும் ஆற்றலைக் காட்டுவது ஊர்த்துவ தாண்டவம். ஐந்தொழில் யாவும் தனக்கே உரியதென விளக்குவதே ஆனந்த தாண்டவம் எனச் சான்றோர் கூறியுள்ளனர்.

படமாடும் உடலோடு
நடமாடும் ஈசனவன்
இடர்நீக்கி இன்பமுற
எளிவந்த நாதனவன்
மடமைபோக்க மன்றிலவன்
மனமுவந்து ஆடுகிறான்
கடமையாம் திருப்பாதம்
விடாதிதியத்தில் நிறுத்துவமே!

பரம்பொருளில் நடத்தால் பார் சிறக்கும். பணி எனக் கண்டு, தண்மதிப் பிறைசூடிய பரமன் நினைவகலா பேரின்பம் நிலையாக வரம் பெற்று வல்லமை மிகவாக திருவடி தினம் போற்றி திருவருள் பெற்று எல்லாரும் இன்புற வேண்டுவோம்.

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
திருச்சிற்றம்பலம்


நன்றி அம்மன் தரிசனம்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum