இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


கம்ப இராமாயணம் - அயோத்தியா காண்டம்4. நகர் நீங்கு படலம்-1

Go down

 கம்ப இராமாயணம் - அயோத்தியா காண்டம்4. நகர் நீங்கு படலம்-1 Empty கம்ப இராமாயணம் - அயோத்தியா காண்டம்4. நகர் நீங்கு படலம்-1

Post by ஆனந்தபைரவர் Sat Aug 21, 2010 3:24 pm

 கம்ப இராமாயணம் - அயோத்தியா காண்டம்4. நகர் நீங்கு படலம்-1 Images?q=tbn:17Y6JXml3itLHM:இலக்குவனிடம் கோபம் வரக் காரணத்தை இராமன் கேட்டல்

இளையான் இதுகூற, இராமன், 'இயைந்த நீதி
வளையாவரும் நல் நெறி நின் அறிவு ஆகும் அன்றே?
உளையா அறம் வற்றிட, ஊழ் வழுவுற்ற சீற்றம்,
விளையாத நிலத்து, உனக்கு எங்ஙன் விளைந்தது?' என்றான். 125

இப்போது சினம் கொள்ளாது எப்போது சினம் கொள்வது என இலக்குவன் கூறல்

நீண்டான் அது உரைத்தலும், நித்திலம் தோன்ற நக்கு,
'"சேண்தான் தொடர் மாநிலம் நின்னது" என்று, உந்தை செப்பப்
பூண்டாய்; "பகையால் இழந்தே, வனம் போதி" என்றால்,
யாண்டோ , அடியேற்கு இனிச்சீற்றம் அடுப்பது?' என்றான். 126

'நின்கண் பரிவு இல்லவர் நீள் வனத்து உன்னை நீக்க,
புன்கண் பொறி யாக்கை பொறுத்து, உயிர் போற்றுகேனோ-
என் கட்புலமுன் உனக்கு ஈந்துவைத்து, "இல்லை" என்ற
வன்கண் புலம் தாங்கிய மன்னவன் காண்கொல்?' என்றான். 127

இராமன் சினம் கூடாது என்பதற்கு ஏற்ற காரணம் இயம்புதல்

'"பின், குற்றம் மன்னும் பயக்கும் அரசு" என்றல், பேணேன்;
முன், கொற்ற மன்னன், "முடி கொள்க" எனக் கொள்ள மூண்டது
என் குற்றம் அன்றோ? இகல் மன்னவன் குற்றம் யாதோ?-
மின்குற்று ஒளிரும் வெயில் தீக்கொடு அமைந்த வேலோய்! 128

'நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை; அற்றே
பதியின் பிழையன்று; பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று; மகன் பிழை அன்று; மைந்த!
விதியின் பிழை; நீ இதற்கு என்னை வெகுண்டது?' என்றான். 129

இலக்குவன் சினந்து பதில் கூறுதல்

உதிக்கும் உலையுள் உறு தீ என ஊதை பொங்க,
'கொதிக்கும் மனம் எங்ஙனம் ஆற்றுவென்? கோள் இழைத்தாள்
மதிக்கும் மதி ஆய், முதல் வானவர்க்கும் வலீஇது ஆம்,
விதிக்கும் விதி ஆகும், என் வில் - தொழில் காண்டி' என்றான். 130

இராமன் இலக்குவனின் கோபம் தணித்தல்

ஆய்தந்து, அவன் அவ் உரை கூறலும், 'ஐய! நின் தன்
வாய் தந்தன கூறுதியோ, மறை தந்த நாவால்?
நீ தந்தது, அன்றே, நெறியோர்கண் நிலாதது? ஈன்ற
தாய் தந்தை என்றால், அவர்மேல் சலிக்கின்றது என்னோ?' 131

இலக்குவனின் பிடிவாதம்

'நல் தாதையும் நீ; தனி நாயகன் நீ; வயிற்றில்
பெற்றாயும் நீயே; பிறரில்லை; பிறர்க்கு நல்கக்
கற்றாய்! இது காணுதி இன்று' எனக் கைம் மறித்தான்;
முற்றா மதியம் மிலைந்தான் முனிந்தானை அன்னான். 132

இராமன் மீண்டும் இலக்குவனுக்கு அறிவுரை கூறுதல்

வரதன் பகர்வான்: 'வரம் பெற்றவள்தான் இவ் வையம்
சரதம் உடையான்; அவள், என் தனித் தாதை, செப்பப்
பரதன் பெறுவான்; இனி, யான் படைக்கின்ற செல்வம்
விரதம்; இதின் நல்லது வேறு இனி யாவது?' என்றான். 133

ஆன்றான் பகர்வான் பினும்; 'ஐய! இவ் வைய மையல்
தோன்றா நெறி வாழ் துணைத் தம்முனைப் போர் தொலைத்தோ?
சான்றோர் புகழும் தனித் தாதையை வாகை கொண்டோ ?
ஈன்றாளை வென்றோ, இனி, இக் கதம் தீர்வது?' என்றான். 134

இராமன் அறிவுரை கேட்டு இலக்குவன் சினம் அடங்கல்

செல்லும் சொல் வல்லானெதிர், தம்பியும் 'தெவ்வர் சொல்லும்
சொல்லும் சுமந்தேன்; இருதோளெனச் சோம்பி ஓங்கும்
கல்லும் சுமந்தேன்; கணைப்புட்டிலும் கட்டு அமைந்த
வில்லும், சுமக்கப் பிறந்தேன்; வெகுண்டு என்னை?' என்றான். 135

இராமனின் சமாதான உரை

'நன் சொற்கள் தந்து ஆண்டு, எனை நாளும் வளர்ந்த தாதை
தன் சொல் கடந்து, எற்கு அரசு ஆள்வது தக்கது அன்றால்;
என் சொல் கடந்தால், உனக்கு யாது உளது ஈனம்?' என்றான் -
தென்சொல் கடந்தான், வடசொல்-கலைக்கு எல்லை தேர்ந்தான் 136

இராமன் உரையால் இலக்குவன் சீற்றம் தணிதல்

சீற்றம் துறந்தான்; எதிர்நின்று தெரிந்து செப்பும்
மாற்றம் துறந்தான்; மறை நான்கு என வாங்கல் செல்லா
நால் தெண் திரை வேலையின், நம்பி தன் ஆணையாலே,
ஏற்றம் தொடங்காக் கடலின், தணிவு எய்தி நின்றான். 137

இராம இலக்குவனர் சுமித்திரை அரண்மனை அடைதல்

அன்னான் தனை, ஐயனும் ஆதியொடு அந்தம் என்று
தன்னாலும் அளப்பருந் தானும், தன் பாங்கர் நின்ற
பொன் மான் உரியானும் தழீஇ எனப் புல்லி, பின்னை,
சொல் மாண்புடை அன்னை சுமித்திரை கோயில் புக்கான். 138

வனம் செல்லும் தன் மக்களைக் கண்ட சுமித்திரையின் வருத்தம்

கண்டாள், மகனும் மகனும் தன கண்கள் போல்வார்,
தண்டாவனம் செல்வதற்கே சமைந்தார்கள் தம்மை;
புண்தாங்கு நெஞ்சத்தனளாய்ப் படிமேல் புரண்டாள்;
உண்டாய துன்பக் கடற்கு எல்லை உணர்ந்திலாதாள். 139

இராமன் சுமித்திரையின் துயரை போக்குதல்

சோர்வாளை, ஓடித் தொழுது ஏந்தினன்; துன்பம் என்னும்
ஈர் வாளை வாங்கி, மனம் தேறுதற்கு ஏற்ற செய்வான்;
'போர் வாள் அரசர்க்கு இறை பொய்த்தனன் ஆக்ககில்லேன்;
கார்வான்நெடுங் கான் இறை கண்டு, இவன் மீள்வென்' என்றான் 140

'கான் புக்கிடினும், கடல் புக்கிடினும், கலிப்பேர்
வான் புக்கிடினும், எனக்கு அன்னவை மாண் அயோத்தி
யான் புக்கது ஒக்கும்; எனை யார் நலிகிற்கும் ஈட்டார்?
ஊன் புக்கு, உயிர் புக்கு, உணர் புக்கு, உலையற்க!' என்றான் 141

கைகேயி தோழியர் மூலம் மரவுரி அனுப்புதல்

தாய், ஆற்றுகில்லாள்தனை ஆற்றுகின்றார்கள் தம்பால்
தீ ஆற்று கிலார், தனி சிந்தையின் நின்று செற்ற,
நோய் ஆற்று கில்லா உயிர் போல நுடங்கு இடையார்
மாயாப் பழியாள்தர, வற்கலை ஏந்தி வந்தார். 142

கார்வானம் ஒப்பான் தனைக்காண் தொறும்காண் தொறும்போய்
நீராய் உகக் கண்ணினும் நெஞ் சழிகின்ற நீரார்,
பேரா இடர்ப்பட்டு அயலார் உறுபீழை கண்டும்
தீரா மனத் தாள்தர, 'வந்தன சீரம்' என்றார். 143

மரவுரியைக் காட்டுமாறு இலக்குவன் கூறுதல்

வாள் நித்தில வெண் நகையார் தர, வள்ளல் தம்பி,
'யாணர்த் திருநாடு இழப்பித்தவர் ஈந்த எல்லாம்
பூணப் பிறந்தானும் நின்றான்; அவை போர் விலோடும்
காணப் பிறந்தேனும் நின்றேன்; அவை காட்டும்' என்றான். 144

இலக்குவன் வனம் செல்ல தாயிடம் விடைபெறுதல்

அன்னான், அவர் தந்தன, ஆதரத்தோடும் ஏந்தி,
இன்னா இடர் தீர்ந்து, "உடன் ஏகு" என, எம்பிராட்டி
சொன்னால், அதுவே துணை ஆம்' என, தூய நங்கை
பொன் ஆர் அடிமேல் பணிந்தான்; அவளும் புகன்றாள்: 145

இலக்குவனுக்கு சுமித்திரையின் அறிவுரை

'ஆகாதது அன்றால் உனக்கு; அவ் வனம் இவ் அயோத்தி;
மா காதல் இராமன் நம் மன்னவன்; வையம் ஈந்தும்
போகா உயிர்த் தாயர் நம் பூங் குழல் சீதை-என்றே
ஏகாய்; இனி, இவ் வயின் நிற்றலும் ஏதம்' என்றாள். 146

பின்னும் பகர்வாள், 'மகனே! இவன் பின் செல்; தம்பி
என்னும் படி அன்று அடியாரினில் ஏவல் செய்தி;
மன்னும் நகர்க்கே இவன் வந்திடின் வா; அது அன்றேல்
முன்னம் முடி' என்றனள், வார் விழி சோர நின்றாள். 147

இராம இலக்குவனர் சுமித்திரையிடம் விடைபெற்று மரவுரி தரித்து செல்லுதல்

இருவரும் தொழுதனர்; இரண்டு கன்று ஒரீஇ
வெருவரும் ஆவினின் தாயும் விம்மினாள்;
பொரு அருங் குமரரும் போயினார் - புறம்
திரு அரைத் துகில் ஒரீஇ, சீரை சாத்தியே. 148

மரவுரி தரித்த இலக்குவனை பெற்றோருடம் இருக்க இராமன் கூறுதல்

தான் புனை சீரையைத் தம்பி சாத்திட,
தேன் புனை தெரியலான் செய்கை நோக்கினான்;
'வான் புனை இசையினாய்! மறுக்கிலாது, நீ
யான் புகல் இனையது ஓர் உறுதி கேள்' எனா. 149

'அன்னையர் அனைவரும், ஆழி வேந்தனும்
முன்னையர் அல்லர்; வெந் துயரின் மூழ்கினார்;
என்னையும் பிரிந்தனர்; இடர் உறாவகை,
உன்னை நீ என்பொருட்டு உதவுவாய்' என்றான். 150

இலக்குவனின் மறுமொழி

ஆண்தகை அம்மொழி பகர, அன்பனும்,
தூண் தகு திரள் புயம் துளங்க, துண்ணெனா,
மீண்டது ஓர் உயிர் இடை விம்ம விம்முவான்,
'ஈண்டு, உனக்கு அடியனேன் பிழைத்தது யாது?' என்றான். 151

'நீர் உளஎனின் உள, மீனும் நீலமும்;
பார் உளஎனின் உள, யாவும்; பார்ப்புறின்,
நார் உள தனு உளாய்! நானும் சீதையும்
ஆர் உளர் எனின் உளம்? அருளுவாய்!' என்றான். 152

'பைந்தொடி ஒருத்தி சொல் கொண்டு, பார்மகள்
நைந்து உயிர் நடுங்கவும், "நடத்தி கான்" எனா,
உய்ந்தனன் இருந்தனன் உண்மை காவலன்
மைந்தன் என்று, இனைய சொல் வழங்கினாய்?' எனா. 153

'"மாறு இனி என்னை? நீ வனம் கொள்வாய்" என
ஏறின வெகுளியை, யாதும் முற்றுற
ஆறினை, தவிர்க' என, 'ஐய! ஆணையின்
கூறிய மொழியினும் கொடியது ஆம்' என்றான். 154

'செய்துடைச் செல்வமோ, யாதும் தீர்ந்து, எமை,
கை துடைத்து ஏகவும் கடவையோ?-ஐயா!
நெய் துடைத்து, அடையலர் நேய மாதர் கண்
மை துடைத்து, உறை புகும் வயம் கொள் வேலினாய்!' 155

இராமன் உள்ளம் நெகிழ்தல்

உரைத்தபின், இராமன் ஒன்று உரைக்க நேர்ந்திலன்;
வரைத் தடந் தோளினான் வதனம் நோக்கினான்;
விரைத் தடந் தாமரைக் கண்ணை மிக்க நீர்
நிரைத்து இடை இடை விழ, நெடிது நிற்கின்றான். 156

வசிட்ட முனிவனின் வருகை

அவ்வயின், அரசவை நின்றும், அன்பினன்
எவ்வம் இல் இருந்தவ முனிவன் எய்தினான்;
செவ்விய குமரரும் சென்னி தாழ்ந்தனர்;
கவ்வையம் பெருங்கடல் முனியும் கால்வைத்தான். 157

வசிட்ட முனிவன் வருத்தம்

அன்னவர் முகத்தினோடு அகத்தை நோக்கினான்;
பொன் அரைச் சீரையின் பொலிவு நோக்கினான்;
என் இனி உணர்த்துவது? எடுத்த துன்பத்தால்,
தன்னையும் உணர்ந்திலன், உணரும் தன்மையான். 158

இராமன் வனவாசம் குறித்து வசிட்ட முனிவன் சிந்தனை

'வாழ்வினை நுதலிய மங்கலத்து நாள்,
தாழ் வினை அது வர, சீரை சாத்தினான்;
சூழ் வினை நான்முகத்து ஒருவன் சூழினும்,
ஊழ்வினை ஒருவரால் ஒழிக்கற்பாலதோ! 159

'வெவ்வினை யவள்தர விளைந்த தேயும் அன்று;
இவ்வினை இவன்வயின் எய்தற் பாற்றும் அன்று;
எவ்வினை நிகழ்ந்ததோ? ஏவர் எண்ணமோ?
செவ்விதின் ஒருமுறை தெரியும் பின்' என்றான். 160

இராமன் காட்டிற்கு செல்வதை வசிட்டன் தடுத்தல்

வில் தடந் தாமரைச் செங் கண் வீரனை
உற்று அடைந்து, 'ஐய! நீ ஒருவி, ஓங்கிய
கல் தடம் காணுதி என்னின், கண் அகல்
மல் தடந் தானையான் வாழ்கிலான்' என்றான். 161

வசிட்ட முனிவனுக்கு இராமனின் மறுமொழி

'அன்னவன் பணி தலை ஏந்தி ஆற்றுதல்
என்னது கடன்; அவன் இடரை நீக்குதல்
நின்னது கடன்; இது நெறியும்' என்றனன் -
பன்னகப் பாயலின் பள்ளி நீங்கினான். 162

கானகம் செல்ல கூறுதல் மன்னன் பணி அன்று என வசிட்டன் கூறுதல்

'"வெவ் வரம்பை இல் சுரம் விரவு" என்றான் அலன்;
தெவ்வர் அம்பு அனைய சொல் தீட்டினாள் தனக்கு,
அவ் அரம் பொருத வேல் அரசன், ஆய்கிலாது,
"இவ் வரம் தருவென்" என்று ஏன்றது உண்டு' என்றான். 163

இராமனின் விளக்க உரை

'ஏன்றனன் எந்தை இவ் வரங்கள்; ஏவினாள்
ஈன்றவள்; யான் அது சென்னி ஏந்தினேன்;
சான்று என நின்ற நீ தடுத்தியோ?' என்றான் -
தோன்றிய நல்லறம் நிறுத்தத் தோன்றினான். 164

வசிட்டனை வணங்கி இராமன் மன்னன் மாளிகை வாயில் அடைதல்

என்றபின், முனிவன் ஒன்று இயம்ப நேர்ந்திலன்;
நின்றனன், நெடுங் கணீர் நிலத்து நீர்த்து உக;
குன்றன தோளவன் தொழுது, கொற்றவன்
பொன் திணி நெடு மதில் வாயில் போயினான். 165

மக்களின் துயரம்

சுற்றிய சீரையன், தொடரும் தம்பியன்,
முற்றிய உவகையன், முளரிப் போதினும்
குற்றம் இல் முகத்தினன், கொள்கை கண்டவர்
உற்றதை ஒருவகை உணர்த்துவாம் அரோ. 166

ஐயனைக் காண்டலும், அணங்கு அனார்கள் தாம்,
மொய் இளந் தளிர்களால் முளரி மேல் விழும்
மையலின் மதுகரம் கடியும் ஆறு எனக்
கைகளின் மதர்நெடுங் கண்கள் எற்றினார். 167

தம்மையும் உணர்ந்திலர் தணப்பில் அன்பினால்
அம்மையின் இருவினை அகற்றவோ அன்றேல்,
விம்மிய பேருயிர் மீண்டி லாமைகொல்?
செம்மல் தன் தாதையிற் சிலவர் முந்தினார். 168

விழுந்தனர் சிலர்; சிலர் விம்மி விம்மிமேல்
எழுந்தனர்; சிலர்முகத்து இழிகண் ணீரிடை
அழுந்தினர்; சிலர்பதைத்து, அளக வல்லியின்
கொழுந்து எரி உற்றுஎனத் துயரம் கூர்கின்றார். 169

கரும்பு அன மொழியினர், கண் பனிக்கிலர்,-
வரம்பு அறு துயரினால் மயங்கியேகொலாம்,
இரும்பு அன மனத்தினர் என்ன நின்றனர்!-
பெரும் பொருள் இழந்தவர் போலும் பெற்றியார். 170

நெக்கன உடல்; உயிர் நிலையில் நின்றில;
'இக் கணம்! இக் கணம்!' என்னும் தன்மையும்
புக்கன; புறத்தன; புண்ணின் கண் மலர்
உக்கன, நீர் வறந்து, உதிர வாரியே! 171

இரு கையின் கரி நிகர் எண் இறந்தவர்,
பெருகு ஐயில் பெயர்த்தனர், தலையைப் பேணலர்,
ஒரு கையில் கொண்டனர், உருட்டுகின்றனர்;
சுரிகையின் கண் மலர் சூன்று நீக்கினார். 172

சிந்தின அணிமணி சிதறி வீழ்ந்தன;
பைந்துணர் மாலையின் பரிந்த, மேகலை;
நந்தினர், நகையொளி விளக்கம்; நங்கைமார்
சுந்தர வதனமும், மதிக்குத் தோற்றவே. 173

தயரதனின் அரசியர் அடைந்த துயரம்

அறுபதினாயிரர் அரசன் தேவியர்,
மறு அறு கற்பினர், மழைக் கண்ணீரினர்,
சிறுவனைத் தொடர்ந்தனர்; திறந்த வாயினர்;
எறி திரைக் கடல் என இரங்கி ஏங்கினார். 174

கன்னி நல் மயில்களும், குயில் கணங்களும்,
அன்னமும், சிறை இழந்து அவனி சேர்ந்தன
என்ன, வீழ்ந்து உழந்தனர் - இராமன் அல்லது,
மன் உயிர்ப் புதல்வரை மற்றும் பெற்றிலார். 175

கிளையினும், நரம்பினும், நிரம்பும் கேழன,
அளவு இறந்து உயிர்க்க விட்டு அரற்றும் தன்மையால்,
தொளைபடு குழலினோடு, யாழ்க்குத் தோற்றன
இனையவர் அமுதினும் இனிய சொற்களே. 176

'புகல் இடம், கொடுவனம் போலும்' என்று, தம்
மகன்வயின் இரங்குறும் மகளிர் வாய்களால்,
அகல்மதில் நெடுமனை, அரத்த ஆம்பல்கள்
பகலிடை மலர்ந்ததொர் பழனம் போன்றதே. 177

திடர் உடைக் குங்குமச் சேறும், சாந்தமும்,
இடை இடை வண்டல் இட்டு ஆரம் ஈர்த்தன;
மிடை முலைக் குவடுஒரீஇ, மேகலைத்தடம்
கடலிடைப் புகுந்த, கண் கலுழி ஆறு அரோ. 178

தண்டலைக் கோசலத் தலைவன் மாதரைக்
கண்டனன் இரவியும், கமல வாள் முகம் -
விண் தலத்து உறையும் நல் வேந்தற்கு ஆயினும்,
உண்டு இடர் உற்ற போது என் உறாதன? 179

தாயரும், கிளைஞரும் சார்ந்துளார்களும்,
சேயரும், அணியரும், சிறந்த மாதரும்,
காய் எரி உற்றனர் அனைய கவ்வையர்;
வாயிலும் முன்றிலும் மறைய மொய்த்தனர். 180

இராமன் தன் மாளிகைக்குச் செல்லுதல்

இரைத்தனர், இரைத்து எழுந்து ஏங்கி எங்கணும்,
திரைப்பெருங் கடலெனத் தொடர்ந்து பின்செல,
உரைப்பதை உணர்கிலன் ஒழிப்பது ஓர்கிலன்,
வரைப்புயத்து அண்ணல்தன் மனையை நோக்கினான். 181

இராமன் வீதியில் சென்ற காட்சி

நல் நெடு நளிர் முடி சூட, நல் மணிப்
பொன் நெடுந் தேரொடும் பவனி போனவன்,
துன் நெடுஞ் சீரையும் சுற்றி, மீண்டும், அப்
பொன் நெடுந் தெருவிடைப் போதல் மேயினான். 182

வீதியில் இராமனைக் கண்டோ ர் அடைந்த வருத்தம்

அந்தணர், அருந்தவர், அவனி காவலர்,
நந்தல் இல் நகருளார், நாட்டுளார்கள், தம்
சிந்தை என் புகல்வது? தேவர் உள்ளமும்
வெந்தனர், மேல் வரும் உறுதி வேண்டலர். 183

'அஞ்சன மேனி இவ் அழகற்கு எய்திய
வஞ்சனை கண்டபின், வகிர்ந்து நீங்கலா
நெஞ்சினும் வலிது உயிர்; நினைப்பது என் சில?
நஞ்சினும் வலிய, நம் நலம்' என்றார் - சிலர். 184

'"மண்கொடு வரும்" என, வழி இருந்த, யாம்,
எண்கொடு சுடர் வனத்து எய்தல் காணவோ?
பெண் கொடுவினை செயப்பெற்ற நாட்டினில்,
கண்கொடு பிறத்தலும் கடை' என்றார் - சிலர். 185

முழுவதே பிறந்து உலகு உடைய மொய்ம்பினோன்,
"உழுவை சேர் கானகத்து உறைவென் யான்" என
எழுவதே? எழுதல்கண்டு இருப்பதே? இருந்து
அழுவதே? அழகிது இவ் அன்பு!" என்றார் சிலர். 186

வலம் கடிந்து, ஏழையர் ஆய மன்னரை
'நலம் கடிந்து, அறம் கெட, நயக்கலீர்கள்; நும்
குலம் கடிந்தான் வலி கொண்ட கொண்டலை,
நிலம் கடிந்தாளொடு நிகர்' என்றார் - சிலர். 187

'திரு அரை சுற்றிய சீரை ஆடையன்,
பொருவருந் துயரினன், தொடர்ந்து போகின்றான்
இருவரைப் பயந்தவள் ஈன்ற கான்முளை
ஒருவனோ, இவற்கு இவ்வூர் உறவு?' என்றார்-சிலர். 188

'முழுக்கலின் வலியநம் மூரி நெஞ்சினை,
மழுக்களின் பிளத்தும்' என்று ஓடு வார்; வழி
ஒழுக்கிய கண்ணின் நீர்க் கலுழி ஊற்றிடை
இழுக்கலில் வழுக்கிவீழ்ந்து, இடர் உற்றார்-சிலர். 189

பொன்னணி, மணியணி, மெய்யின் போக்கினர்,
மின்னென, மின்னென விளங்கும் மெய் விலைப்
பன்னிறத் துகிலினைப் பறித்து நீக்கினர்,
சின்னநுண் துகிலினைப் புனைகின்றார்-சிலர். 190

'நிறைமக உடையவர், நெறி செல் ஐம்பொறி
குறை மகக் குறையினும், கொடுப்பராம் உயிர்
முறை மகன் வனம் புக, மொழியைக் காக்கின்ற
இறைமகன் திருமனம் இரும்பு' என்றார்-சிலர். 191

வாங்கிய மருங்குலை வருத்தும் கொங்கையர்,
பூங்கொடி ஒதுங்குவபோல், ஒதுங்கினர்;
ஏங்கிய குரலினர்; இணைந்த காந்தளின்
தாங்கிய செங் கை தம் தலையின்மேல் உளார். 192

தலைக் குவட்டு அயல் மதி தவழும் மாளிகை
நிலைக் குவட்டு இடை இடை நின்ற நங்கைமார்,
முலைக் குவட்டு இழி கணீர் ஆலி மொய்த்து உக,
மலைக் குவட்டு அகவுறு மயிலின் மாழ்கினார். 193

மஞ்சு என அகிற் புகை வழங்கும் மாளிகை
எஞ்சல் இல் சாளரத்து, இரங்கும் இன் சொலார்
அஞ்சனக் கண்ணின் நீர் அருவி சோர்தர,
பஞ்சரத்து இருந்து அழும் கிளியின் பன்னினார். 194

நல் நெடுங் கண்களின் நான்ற நீர்த் துளி-
தன் நெடுந் தாரைகள் தளத்தின் வீழ்தலால்,
மன் நெடுங் குமரன்மாட்டு அழுங்கி, மாடமும்
பொன் நெடுங் கண் குழித்து, அழுவ போன்றவே. 195

மக்களை மறந்தனர் மாதர்; தாயரைப்
புக்கிடம் அறிந்திலர் புதல்வர்; பூசலிட்டு
உக்கனர்; உயங்கினர்; உருகிச் சோர்ந்தனர்;
துக்கநின்று அறிவினைச் சூறை ஆடவே. 196

காமரங் கனிந்தெனக் கனிந்த மென்மொழி
மாமடந் தையர் எலாம் மறுகு சேர்தலால்,
தேமரு நறுங்குழல் திருவின் நீங்கிய
தாமரை ஒத்தன-தவள மாடமே. 197

மழைக்குலம் புரைகுழல் விரிந்து மண்ணுறக்
குழைக்குலம் முகத்தியர் குழாங்கொண்டு ஏகினர்
இழைக்குலம் சிதறிட, ஏவுண்டு ஓய்வுறும்
உழைக்குலம் உழைப்பன ஒத்து, ஓர் பால் எல்லாம். 198

அயோத்தி நகரில் பொழிவு அழிதல்

கொடி அடங்கின மனைக் குன்றம்; கோ முரசு
இடி அடங்கின; முழக்கு இழந்த பல் இயம்;
படி அடங்கலும், நிமிர் பசுங் கண் மாரியால்,
பொடி அடங்கின, மதிற் புறத்து வீதியே. 199

அட்டிலும் இழந்தன புகை; அகிற் புகை
நெட்டிலும் இழந்தன; நிறைந்த பால், கிளி
வட்டிலும் இழந்தன; மகளிர்-கால் மணித்
தொட்டிலும் இழந்தன, மகவும்-சோரவே. 200

ஒளி துறந்தன முகம், உயிர் துறந்தென;
துளி துறந்தன, முகில் தொகையும்; தூய நீர்த்
தளி துறந்தன பரி; தான யானையும்
களி துறந்தன, மலர்க் கள் உண் வண்டினே. 201

நிழல் பிரிந்தன குடை; நெடுங் கண் ஏழையர்
குழல் பிரிந்தன மலர்; குமரர் தாள் இணை
கழல் பிரிந்தன; சினக் காமன் வாளியும்
அழல் பிரிந்தன; துணை பிரிந்த, அன்றிலே. 202

தாரொலி நீத்தன, புரவி; தண்ணுமை
வாரொலி நீத்தன; மழையின் விம்முறும்
தேரொலி நீத்தன, தெருவுந் தெண்திரை
நீரொலி நீத்தன நீத்தம் போலுமே. 203

முழவு எழும் ஒலி இல; முறையின் யாழ் நரம்பு
எழ எழும் ஒலி இல; இமைப்பு இல் கண்ணினர்
விழவு எழும் ஒலி இல; வேறும் ஒன்று இல,
அழ எழும் ஒலி அலது - அரச வீதியே. 204

தெள் ஒலிச் சிலம்புகள் சிலம்பு பொன் மனை
நள் ஒலித்தில; நளிர் கலையும் அன்னவே;
புள் ஒலித்தில, புனல்; பொழிலும் அன்னவே;
கள் ஒலித்தில, மலர்; களிறும் அன்னவே. 205

செய்ம் மறந்தன புனல்; சிவந்த வாய்ச்சியர்
கைம் மறந்தன, பசுங் குழவி; காந்து எரி
நெய்ம் மறந்தன; நெறி அறிஞர் யாவரும்
மெய்ம் மறந்தனர்; ஒலி மறந்த, வேதமே. 206

ஆடினர் அழுதனர்; அமுத ஏழ் இசை
பாடினர் அழுதனர்; பரிந்த கோதையர்,
ஊடினர் அழுதனர்; உயிரின் அன்பரைக்
கூடினர் அழுதனர் - குழாம் குழாம்கொடே. 207

நீட்டில, களிறு கை நீரின்; வாய் புதல்
பூட்டில, புரவிகள்; புள்ளும், பார்ப்பினுக்கு
ஈட்டில இரை; புனிற்று ஈன்ற கன்றையும்
ஊட்டில, கறவை; நைந்து உருகிச் சோர்ந்தவே. 208

மாந்தர்தம் மொய்ம்பினின் மகளிர் கொங்கையாம்
ஏந்துஇள நீர்களும் வறுமை எய்தின;
சாந்தம் அம் மகிழ்நர் தம் முடியில் தையலார்
கூந்தலின், வறுமைய மலரின் கூலமே. 209

ஓடை நல்லணி முனிந்தன, உயர்களிறு உச்சிச்
சூடை நல்லணி முனிந்தன, தொடர்மனை; கொடியின்
ஆடை நல்லணி முனிந்தன, அம்பொன் செய் இஞ்சி;
பேடை நல்லணி முனிந்தன, மென்னடைப் புறவம். 210

'திக்கு நோக்கிய தீவினைப் பயன்' எனச் சிந்தை
நெக்கு நோக்குவோர், 'நல்வினைப் பயன்' என நேர்வோர்,
பக்கம் நோக்கல் என்? பருவரல் இன்பம் என்று இரண்டும்
ஒக்க நோக்கிய யோகரும், அருந் துயர் உழந்தார். 211

ஓவுஇல் நல் உயிர் உயிர்ப்பினோடு உடல் பதைத்து உலைய,
மேவு தொல் அழகு எழில் கெட, விம்மல் நோய் விம்ம,
தாவு இல் ஐம்பொறி மறுகுற, தயரதன் என்ன
ஆவி நீக்கின்றது ஒத்தது - அவ் அயோத்தி மா நகரம். 212

இராமன் சீதை இருக்குமிடம் சேர்தல்

உயங்கி அந் நகர் உலைவுற, ஒருங்கு, உழைச்சுற்றம்
மயங்கி ஏங்கினர்; வயின்வயின் வரம்பு இலர் தொடர,
இயங்கு பல் உயிர்க்கு ஓர் உயிர் என நின்ற இராமன்
தயங்கு பூண் முலைச் சானகி இருந்துழிச் சார்ந்தான். 213

இராமனின் கோலம் கண்டு சீதை திடுக்கிடுதல்

அழுது, தாயரோடு அருந்தவர், அந்தணர், அரசர்,
புழுதி ஆடிய மெய்யினர், புடை வந்து பொரும,
பழுது சீரையின் உடையினன் வரும்படி பாரா,
எழுது பாவை அன்னாள், மனத் துணுக்கமொடு எழுந்தாள். 214

மாமியார் இருவரும் சீதையைத் தழுவி நிற்க, சீதை இராமனை காரணம் வினாவுதல்

எழுந்த நங்கையை, மாமியர் தழுவினர்; ஏங்கிப்
பொழிந்த உண் கண் நீர்ப் புதுப் புனல் ஆட்டினர்; புலம்ப,
அழிந்த சிந்தையள் அன்னம், 'ஈது இன்னது' என்று அறியாள்;
வழிந்த நீர் நெடுங் கண்ணினள், வள்ளலை நோக்கி. 215

'பொன்னை உற்ற பொலங் கழலோய்! புகழ்-
மன்னை உற்றது உண்டோ , மற்று இவ் வன் துயர்
என்னை உற்றது? இயம்பு' என்று இயம்பினாள்-
மின்னை உற்ற நடுக்கத்து மேனியாள். 216

இராமன் நடந்தது இயம்புதல்

'பொரு இல் எம்பி புவிபுரப் பான்; புகழ்
இருவர் ஆணையும் ஏந்தினென்; இன்று போய்க்
கருவி மாமழைக் கல்-கடம் கண்டு, நான்
வருவென் ஈண்டு; 'வருந்தலை நீ' என்றான். 217

இராமன் சொல் கேட்ட சீதையின் துயர்

நாயகன் வனம் நண்ணல் உற்றான் என்றும்,
மேய மண் இழந்தான் என்றும், விம்மலன்;
'நீ வருந்தலை; நீங்குவென் யான்' என்ற
தீய வெஞ் சொல் செவி சுடத் தேம்புவாள். 218

'துறந்து போம்' எனச் சொற்ற சொல் தேறுமோ-
உறைந்த பாற்கடற் சேக்கை உடன் ஒரீஇ,
அறம் திறம்பும் என்று ஐயன் அயோத்தியில்
பிறந்த பின்பும், பிரியலள் ஆயினாள்? 219

அன்ன தன்மையள், 'ஐயனும், அன்னையும்,
சொன்ன செய்யத் துணிந்தது தூயதே;
என்னை, என்னை, "இருத்தி" என்றான்?' எனா,
உன்ன, உன்ன, உயிர் உமிழா நின்றாள். 220

இராமன் தன் கூற்றுக்கான காரணத்தை இயம்புதல்

'வல் அரக்கரின் மால் வரை போய் விழுந்து,
அல் அரக்கின் உருக்கு அழல் காட்டு அதர்க்
கல் அரக்கும் கடுமைய அல்ல-நின்
சில் அரக்குண்ட சேவடிப் போது' என்றான். 221

சீதை தன் மன உறுதியை இராமனுக்கு உரைத்தல்

'பரிவு இகந்த மனத்தொடு பற்றிலாது
ஒருவு கின்றனை; ஊழி அருக்கனும்
எரியும் என்பது யாண்டையது? ஈண்டுநின்
பிரிவினும் சுடுமோ, பெருங் காடு?' என்றாள். 222

சீதையின் மன உறுதியை அறிந்து இராமன் சிந்தனை வயப்படுதல்

அண்ணல், அன்னசொல் கேட்டனன்; அன்றியும்,
உள் நிவந்த கருத்தும் உணர்ந்தனன்;
கண்ணில் நீர்க்கடல் கைவிட நேர்கிலன்,
எண்ணு கின்றனன், 'என்செயல் பாற்று?' எனா. 223

சீதை மரவுரி தரித்து இராமன் அருகில் வந்து நிற்றல்

அனைய வேலை, அகல்மனை எய்தினள்;
புனையும் சீரம் துணிந்து புனைந்தனள்;
நினையும் வள்ளல் பின் வந்து, அயல் நின்றனள்,
பனையின் நீள்கரம் பற்றிய கையினாள். 224

சீதையைக் கண்டோர் கொண்ட துயரம்

ஏழை தன் செயல் கண்டவர் யாவரும்,
வீழும் மண்ணிடை வீழ்ந்தனர்; வீந்திலர்;
வாழும் நாள் உள என்றபின் மாள்வரோ?-
ஊழி பேரினும் உய்குநர் உய்வரே! 225

தாயர், தவ்வையர், தன் துணைச் சேடியர்,
ஆய மன்னிய அன்பினர், என்றிவர்
தீயில் மூழ்கினர் ஒத்தனர்; செங்கணான்
தூய தையலை நோக்கினன், சொல்லுவான். 226

இராமன் சீதை உரையாடல்

'முல்லையும் கடல் முத்தும் எதிர்ப்பினும்,
வெல்லும் வெண்ணகை யாய்! விளைவு உன்னுவாய்
அல்லை; போத அமைந்தனை ஆதலின்
எல்லை அற்ற இடர்தரு வாய்' என்றான். 227

கொற்றவன் அது கூறலும், கோகிலம்
செற்றது அன்ன குதலையள் சீறுவாள்,
'உற்று நின்ற துயரம் இது ஒன்றுமே?
என் துறந்த பின், இன்பம் கொலாம்?' என்றாள். 228

சீதையை அழைத்துக் கொண்டு இராமன் புறப்படுதல்

பிறிது ஓர் மாற்றம் பெருந்தகை பேசலன்;
மறுகி வீழ்ந்து அழ மைந்தரும் மாதரும்
செறுவின் வீழ்ந்த நெடுந் தெருச் சென்றனன் -
நெறி பெறாமை அரிதினின் நீங்குவான். 229

இராமன், சீதை மற்றும் இலக்குவனுடன் செல்லுதல்

சீரை சுற்றித் திருமகள் பின்செல,
மூரி விற்கை இளையவன் முன்செல,
காரை ஒத்தவன் போம்படி கண்ட, அவ்
ஊரை உற்றது உணர்த்தவும் ஒண்ணுமோ? 230

மக்கள் யாவரும் இராமனைத் தொடர்ந்து செல்லுதல்

ஆரும் பின்னர் அழுது அவலித்திலர்;
சோரும் சிந்தையர், யாவரும் சூழ்ந்தனர்;
'வீரன் முன் வனம் மேவுதும் யாம்' எனா,
போரென்று ஒல்லொலி கைம்மிகப் போயினார். 231

இராமன் தாயரை வணங்கி மன்னன் தயரதனுக்கு ஆறுதல் கூறுமாறு கூறுதல்

தாதை வாயில் குறுகினன் சார்தலும்,
கோதை வில்லவன் தாயரைக் கும்பிடா,
'ஆதி மன்னனை ஆற்றுமின் நீர்' என்றான்;
மாதராரும் விழுந்து மயங்கினார். 232

தாய்மார்கள் மூவரையும் வாழ்த்துதல்

ஏத்தினார், தம் மகனை, மருகியை;
வாழ்த்தினார், இளையோனை; வழுத்தினார்,
'காத்து நல்குமின், தெய்வதங்காள்!' என்றார்-
நாத் தழும்ப அரற்றி நடுங்குவார். 233

வசிட்டனை வணங்கி பின் மூவரும் தேர் ஏறிச் செல்லுதல்

அன்ன தாயர் அரிதின் பிரிந்தபின்,
முன்னர் நின்ற முனிவனைக் கைதொழா,
தன்னது ஆர் உயிர்த் தம்பியும், தாமரைப்
பொன்னும், தானும், ஒர் தேர்மிசைப் போயினான். 234

மிகைப் பாடல்கள்

விழுந்து பார்மிசை, வெய்து உயிர்த்து, ஆவி சோர்ந்து,
எழுந்து, 'என் நாயகனே! துயர் ஏது எனாத்
தெளிந்திலேன்; இது செப்புதி நீ' எனா,
அழுந்தினாள்; பின்னர் அரற்றத் தொடங்கினாள். 29-1

அன்னாள் இன்ன பன்னி அழியத் துயரால், மன்னர்
மன்னானவனும் இடரின் மயங்கி, 'மைந்தா! மைந்தா!
முன்னே வனம் ஏகிடல் நீ முறையோ? முதல்வா! முறையோ?
என்னே, யான் செய் குறைதான்?' என்றே இரங்கி மொழிவான்: 53-1

உணர்வு ஏதும் இலாள் உரையால் உரைசால் குமரன் நெடு நாள்
புணரான் நிலம்; மா வனமே போவானேயாம்; என்னில்,
இணரே பொலி தார் நிருபா; இடரால் அயர்வாய்; இதுவும்
துணையோ?- துணைவா!' என்றாள்; 'துயரேல்! துயரேல்!' என்றான் 53-2

'சேலா கியமா முதல்வன் திரு உந்தியின் நீள் மலரின்-
மேலா கியநான் முகனால், வேதங் களின் மா முறையின்-
பாலா கியயோனிகளின் பலவாம் வருணம் தருவான்,
நாலா கியதாம் வருணன் தனின், முன் எமை நல்கினனால். 76-1

'"அந்நான் மறையோன் வழியில் அருள் காசிபன் நல் மைந்தன்
மின்னார் புரிநூல் மார்பன் விருத்தே சனன்மெய்ப் புதல்வன்,
நன்னான் மறைநூல் தெரியும் நாவான் சலபோ சன் எனச்
சொன்னான் முனிவன் தரு சுரோசனன் யான்" என்றான். 76-2

'தாவாத அருந்தவர் சொல் தவறாததனால், தமியேன்
சாவாதவரும் உளரோ? தண்டா மகவு உண்டு' என்றே
ஓவாதார் முன் நின்றே; ஒரு சொல் உடையாது அவரும்,
பூவார் அனலுள் பொன்றி, பொன் - நாடு அதனில் புக்கார். 86-1

இம்மா மொழிதந்து அரசன் இடருற்றிடும் போழ்தினில், அச்
செம்மா மயில் கோசலையும் திகையா உணர்வு ஓவினளாய்,
மெய்ம்மாண் நெறியும், விதியின் விளைவும், தளர்வின்றி உணரும்
அம்மா தவனும் விரைவோடு அவலம் தருநெஞ் சினனாய். 87-1

என்று என்று சீற்றத்து இளையோன் இது இயம்பிடாமுன்,
கன்று ஒன்றும் ஆவின் பல யோனியும் காத்த நேமி
வன் திண் சிலைக் கைம் மனு என்னும் வயங்கு சீர்த்திக்
குன்று ஒன்று தோளான் மருமான் இவை கூறலுற்றான்: 127-1

ஆய் தந்த மென் சீரை அணிந்து அடி தாழ்ந்து நின்ற
சேய் உந்து நிலை நோக்கினன், சேய் அரிக் கண்கள் தேம்ப,
வேய் தந்த மென் தோளி தன் மென் முலை பால் உகுப்ப-
தாய், 'நிந்தை இன்றிப் பல ஊழி தழைத்தி!' என்றாள். 147-1

'வானமே அனையதோர் கருணை மாண்பு அலால்
ஊனம் வேறு இலானுடன், உலகம் யாவையும்,
கானமே புகும் எனில் காதல் மைந்தனும்
தானுமே ஆளும்கொல் தரை?' என்றார் சிலர். 191-1

போயினான் நகர் நீங்கி-பொலிதரு
தூய பேர் ஒளி ஆகி, துலங்கு அருள்
ஆய மூவரும் ஆகி, உயிர்த் தொகைக்கு
ஆயும் ஆகி, அளித்தருள் ஆதியான். 234-1
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum