இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Fri Apr 14, 2017 9:47 am

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


வினை முற்றுக்கு திருமுறைப் பாடல்கள்

Go down

 வினை முற்றுக்கு திருமுறைப் பாடல்கள்   Empty வினை முற்றுக்கு திருமுறைப் பாடல்கள்

Post by ஆனந்தபைரவர் Fri Aug 27, 2010 3:51 pm

 வினை முற்றுக்கு திருமுறைப் பாடல்கள்   Shivafamily


-கிருஷ்ணன், சிங்கப்பூர்.

வாழ்க்கையை நல்வழிப்படுத்தி ஆன்மாவை உயர்னிலையடையச் செய்வதற்கு மதங்கள் உதவி செய்துள்ளன. மேலும், மதங்கள், அந்தந்த மக்கள் பேசுகிற மொழிகளையும் வளப்படுத்தி அம்மொழிகளில் சிறந்த இலக்கியங்களையும் அளித்திருக்கின்றன. சைவம், வைணவம், சமணம், பௌத்தம், கிருத்துவம், இசுலாம் ஆகிய மதங்கள் தமிழ் மொழியை வளப்படுத்தி அதில் சிறந்த இலக்கியங்களைக் கொடுத்திருக்கின்றன.

திருவாசகத்தில் அமைந்துள்ள ஐம்பத்தொரு பதிகங்கள் மனித பிறவியை உயர்த்துவதாகவே அமைந்துள்ளது. அதில் சிவபுராணம் கயிலாயம் போல் உயர்ந்திருக்கிறது. சீவனான இந்த ஜீவாத்மாக்கள் அனைத்தும் சிவனை நாடி பயணித்து, பல படித்தரங்களை கடந்து, பக்குவமாகி, பின் முடிந்த நிலையான வீடு (முக்தி) பெறுவதை மாணிக்க வாசகரின் சிவ புராணத்தில் காணலாம். திருமுறைகளில் இதனை ஞானஒளியாக கொள்ளலாம். திருவாசகத்தில் பல இடங்களில் இந்த பிறவியின் வினை முற்று வரிகளை நாம் காணலாம்.

'' பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் பெய்கழல்கள் வெல்லக''

'' மாயப்பிறப்பு அறுக்கும் மன்னன் அடிபோற்றி''

'' முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்''

'' மெய்யே உன்பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்''

'' அல்லற் பிறவி அறுப்பானே ஓ என்று ''

-இப்படி பலவிடங்களில் பிறவி பெரும் பிணி தீர சிவனைத் தியானியுங்கள் என்கிறார் மாணிக்க வாசகர்.

நாம் செய்கிற நல்வினை, தீவினைகளே நமக்கு ஏற்படுகின்ற இன்ப துன்பங்களுக்குக் காரணம், வினைக்குக்குரிய பயன்கள் தாமாகச் செய்தவரைத் தேடி வருவதில்லை. வரவும் முடியாத வினைப் பயன்களைச் சேர்ப்பித்த அறிவுள்ள ஒருவன் வேண்டும். அவன்தான் இறைவன். வண்டி தானாக ஓடாது அதை ஓட்ட அறிவுள்ள ஒருவன் தேவை. இதை நம்புகிறவர்களும், நம்பாதவர்களும் உள்ளனர். புராணங்களும், காப்பியங்களும், காவியங்களும் விதியை மறுக்கவில்லை.

திருவள்ளுவரும் ''ஊழிற் பெருவலி யாஉள?" என்றே கேட்கிறார்.

விதியை அடியார்கள் மறுக்கவில்லை. அதை வென்று விடலாம் என்கிறார்கள். விதிப்பயன், வினைப்பயன், ஊழ்வினை என்பார்கள் என்பவர்களுக்கு விமோசனம் உண்டு. எப்படி? இறைவனை உறுதியாகப் பற்றி நிற்பதுதான் அந்த வழி. சான்று சிலவற்றை காணலாம்.

திருஞான சம்பந்தப் பெருமான் முதலாம் திருமுறையில், திருநீலகண்டப் பதிகத்தில் ''இறைவனை நெறியாகத் தொழுபவரை வினைப்பயன் வந்து தீண்டாது'' என்று ஆணை இட்டுச் சொல்லியுள்ளார்,

அவ்வினைக்கு இவ்வினை யாம் என்று சொல்லும் அது அறிவீர்
உய்வினை நாடாது இருப்பதும் உந்துமக்கு ஊனம் அன்றே
கைவினை செய்து எம் பிரான் கழல் போற்றும் நாம் அடியோம்
செய்வினை வந்தெமைத் தீண்டப் பெறாதிரு நீலகண்டம் [ திருமுறை-1]

[முற்பிறவிகளில் செய்யப்பட்ட வினைகளுக்கு ஏற்றபடி இந்தப் பிறவியில் இன்ப துன்பங்கள் வருகின்றன என்பதை மட்டும் அறிந்து கொண்டிருக்கிறீர்கள் ஆனால், அந்த வினையிலிருந்து உய்யும் வழி பற்றி யோசிக்காமல் இருப்பது உங்களுக்குக் குறையல்லவா? அடியார்களாகிய நாம் நம் கைகளைக் கொண்டு செய்யக்கூடிய சிவத்தொண்டுகளைச் செய்து எம்பெருமானின் திருவடிகளை வணங்கினால், முற்பிறவி வினைப்பயன்கள் வந்து தீண்டா, திருநீலகண்டத்தின் மேல் ஆணை]

இந்தப் பதிகத்தில் பத்துப் பாடல்களிலும் ''தீவினை தீண்டப் பெறா திருநீலகண்டம்'' என திருஞான சம்பந்தர் அருளி உள்ளதாக அன்பர்கள் எண்ணிப் பார்க்கத் தக்கவையாகும்.

முனைவனைத் தொழுதால் வினை நீங்கும் என்பதைத் திருஞான சம்பந்தர் வேறு இடங்களில் விளம்பி இருக்கின்றார். திருவுடை மருதூர்ப் பதிகத்தில் அவர் திருவாக்காக வந்துள்ள பாடலாவது:

'கழுலும் சிலம்பு ஆர்க்கும் எழிலார் மருதரைத்
தொழலே பேணுவார்க்கு உழலும் வினைபோமே''

''கருது சம்பந்தன் மருதர் அடிபாடிப்
பெரிதும் தமிழ்ச்சொல்லப் பொருத வினைபோமே''

திருநாவுக்கரசர் இறைவனை முறைமையால் தொழுபவர் முற்பிறவி வினைகளை திண்ணமாக நீங்கிக் கொள்ள முடியும் என்று ஊக்க மூட்டுகிறார்.

''உள்ளம் உள்கி உகந்து சிவன் என்று
மெள்ள உள்க வினைகளும் மெய்ம்மையே
புள்ளினார் பணி புள் இருக்கு வேளூர்
வள்ளல் பாதம் வணங்கித் தொழுமினே !'' [ திருக்குறுந்தொகை-89]

ஞான சம்பந்தர் 'நீலகண்டம்' என்றார். நாவுக்கரர், ' மெய்ம்மையே' என்றார். வள்ளல் பாதம் வணங்கி தொழுந்து மெள்ள நினைத்தால் மெய்ம்மையாக வினைகள் விலகும். ஐயமில்லை. இந்த பதிகப் பத்தாம் பாடலும் இதே கருத்தை உரைக்கிறது

'அரக்கனார் தலை பத்தும் அழிதர
நெருக்கி மாமலர்ப் பாதம் நிறுவிய
பொருப்பபார் உறை புள்ளிருக்கு வேளூர்
விருப்பினார் தொழுவார் வினை வீடுமே' [திருமுறை -10]

வினையை அறுப்பவன் வேத நாயகன் சிவநாயகன், இதைச் சொல்கிறார் செந்தமிழ்ப்பாட்டுடைச் சுந்தரர், "என் வினையை அறுத்திட்டு, என்னை ஆளும் கங்கா நாயகரே!" என அவர் பாடி முறையிடுகிறார்.

'எங்கேனும் இருந்து உன் அடியேன் உனை நினைந்தால்
அங்கே வந்து என்னொடும் உடன் ஆகி நின்று அருளி
இங்கே என் வினையை அறுத்து இட்டு எனை ஆளும்
கங்கா நாயகனே! கழிப்பாலை மேயானே! [ திருமுறை- 7]

இறைவனை இறுகப் பிடித்துத் திருமுறைகளைக் காதலோடு ஓதி வந்தால் வினைகள் நீங்கும். இதனை மூவருமே மொழிந்துள்ளனர். நாவலூரார்,

''ஏரரும் பொழில் நிலவு வெண்பாக்கம் இடம் கொண்ட
காராகும் மிடற்றானைக் காதலித்திட்டு அன்பினொடும்
சீராரும் திருவாரூர்ச் சிவன் பேர் சென்னியில் வைத்த
ஆரூரன் தமிழ் வல்லார்க்கு அடையாவல் வினைதானே' [திருமுறை-7]

வல்லினையான ஊழ்வினைத் துன்பம் நம்மை அடையாமலிருக்க, இறைவனை நினைவதும் தொழுவதும், போற்றுவதும், முறையிடுவதும், வேண்டுவதும் அந்த வழி. குறுக்கு வழி இல்லை. குறுக்கு வழி சறுக்கலில்தான் விடும். வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய் தேடி அலைவார் உண்டு. திருமுறைத் தேனைத் தினமும் அருந்தி வந்தால் வினைப் பயனுக்கு விமோசனம் முனைவன் அருளால் தானாக சேரும்.

திருமூலர் இதை எடுத்துச் சொல்கிறார். இப்பிறவியில் நான் பெற்ற அனுபவங்கள், முன்னம் பிறவிகளில் நான் செய்த வினைகளின் பலன்களே என்று நான் உணர்ந்து கொண்டேன். ஆகவே, அவற்றின் மீது நான் விருப்போ, வெறுப்போ கொள்ளவில்லை. அவ்வாறு நான் செய்தால் மீண்டும் புதிய வினைகளை உருவாக்குவேன் என்பதும் எனக்குப் புலனாகி விட்டது. இறைவன் என் தலையில் எழுதியவை இவை என்று தெரிந்தது. அந்த நிலையில் நான் பெற்ற இன்ப துன்பங்களை, அவனுடைய அருளே என்று ஏற்றுக் கொண்டேன். அவன் வழி செல்வதே மேல் என்ற உள் அறிவு பிறந்தது. இன்ப துன்பங்களிலே ஈடுபாடு இல்லை. இதுவே, நான் பெற்ற நலன்களுக்கெல்லாம் காரணமாயிற்று. இது திருமூலருடைய விளக்கம். அவர் அருளிய மந்திரத்தைப் பார்க்கலாம்.

''தான் முன்னஞ் செய்த விதி வழி தானல்லால்
வான் முன்னஞ் செய்து அங்கு வைத்ததோர் மாட்டில்லை
கோள் முன்னஞ் சென்னி குறி வழியே சென்று
நான் முன்னஞ் செய்ததே நன்னிலம் ஆனதே ''

இந்து சமயம் மறுபிறப்பு உண்டு என்ற நம்பிக்கை கொண்டது. ஒரு மனிதனின் பிறப்பானது அவனது முற்பிறவி வினைக்கு ஏற்ப அமைகிறது. அரசனுக்கு மகனாய்ப் பிறப்பது முதல் ஆண்டியாய் இருப்பது வரை அனைத்தும் கருமம், வினையை சார்ந்தே இருக்கிறது.

இறை என்கிற ஞானம் இல்லை எனில் இப்பிரபஞ்சம் முழுவது அறியாமையில்தான் மூழ்கி கிடக்கும். எல்லா உயிர்களும் அறியாமையோடுதான் வாழும். தெளிவு என்பது, இறைவனுடைய கருணையால், அன்பால் ஏற்படுவது. நம்மை நாமே உணர்வதற்கு, உங்களை உங்களுக்கு உணர்த்துவதற்கு, அறியாமை என்னும் இருள் இறைவன் படைக்கப்பட்டது. இதில் நாத்திகச் செயலும், எண்ணமும் உள்ளடக்கம். நாத்திகம் ஆதிக்கம் அல்லது அறியாமை என்கிற செயல் கிளர்ந்து எழும்போதுதான், அங்கு சிவம் என்னும் சோதி, பிழம்பு போராடி வெற்றி பெறுகிறது. சிவ சோதியில் தெளிவும், ஞானமும் ஒளிர்கிறது. இதனைத்தான் திருமூலர் இப்படி விளக்குகிறார்.

சிவபெருமானுடைய திருவடிகள் என்னுடைய தலையில் வைக்கப் பெற்றேன். அவனுடைய திருவருளால், பிறவித் தளையை நீக்கிக் கொண்டேன். இந்த உலகத்தில் உறவு, பந்தம், பாசம் என்று வளர்க்கும் நிலையை மாற்றி இறைவனுடைய திருவடிகளில் சேர்ந்து, தன்னை இழந்து நிற்கும் ஆற்றல் பெற்றேன். அவ்வகையில் இறைவனுடன் ஒன்றியிருக்கும் ஒப்பற்ற பேறு பெற்றேன். இனிமேல் எனக்கு இறப்பு, பிறப்பு என்பது கிடையாது. சிவப்பரம் பொருளை நான் கண்டு கொண்ட காரணத்தால், இந்த பேறுகளெல்லாம் எனக்குக் கிடைத்தன என்கிறார் திருமூலர்.

''ஒழிந்தேன் பிறவி உறவென்னும் பாசம்
கழிந்தேன் கடவுளும் நானும் ஒன்றானேன்
அழிந்தாங்கு இனி வரும் ஆக்கமும் வேண்டேன்
செழுஞ்சார்புடைய சிவனைக் கண்டேனே''

விதியை வெல்லுதல்

வினைகளையும், பிறவிகளையும், விதியையும் மாற்றிக் கொள்ள முடியுமா? இறைவனாலும் மாற்றியமைக்க முடியாதது விதி என்றால், அது இறைவனின் இறைத் தன்மையையே கேள்விக்குரியதாகச் செய்யும். இறைவனாலும் கூட விதியை மாற்ற முடியாது என்றால், நமது சமயத்தின் அஸ்திவாரமே ஆட்டங்கண்டு விடும். பிரார்த்தனைகளுக்கு அங்கு இடமே கிடையாது. வழிபாட்டில் 'காம்ய வழிபாடு', 'நிஷ்காம்ய வழிபாடு' என்று இரு வகையுண்டு. எதையேனும் வேண்டிப் பெறுதலுக்காகச் செய்யப்படுவதே 'காம்யம்'. இறைவன்பால் அன்பால் இறைவனுக்கே அர்ப்பணமாகச் செய்யப்படுவது, 'நிஷ்காம்யம்'. 'கலையாத கல்வியும், குறையாத வயதும், கபடுவராத நட்பும்', என்ற பாடலில் அன்னை அபிராமியிடம் நீண்ட பட்டியலிட்டு பதினாறு பேறுகளையும் நிறையவே கேட்கிறார், அபிராமி பட்டர்.

இப்பாடலின் முடிவில் அபிராமி தோன்றி, சுப்பிரமணிய பட்டா! எல்லாமே விதிப்படிதான் நடக்கும். இதையெல்லாம் அடைய உனக்கு விதியில்லை. ஆகவே நீ கேட்பது எதையுமே என்னால் தர இயலாது", என்று கூறினால், எப்படியிருக்கும்? விதி என்றிருந்தால், விதி விலக்கும் இருக்கும் அல்லவா? விதியிலிருந்து விலகி நின்று விதிக்கெல்லாம் விலக்கு வழங்க வல்லான் இறைவன். கந்தர் அனுபூதியின் கடைசிப் பாடலில்,

"கருவாய் உயிராய், கதியாய் விதியாய்,
குருவாய் வருவாய்; அருள்வாய் குகனே! "

கதி என்பது மாற்றப்பட முடியாத . விதி என்பது அதற்குள் உள்ள மாற்றக்கூடிய அம்சம். விதியை, மதியால் பண்ண முடியும். விதியை மாற்றுமாறு இறைவனை இறைஞ்சுவதும் கூட மதியினால் ஆவதுதான். ஒரு சிறிய கதை...

எழு நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்தது. மைசூர்ப் பகுதியில் ஓர் ஏழை. செல்வம் வேண்டி நீண்டகாலம் திருமகளை உபாசித்து வந்தான். லட்சுமியும் தோன்றினாள்.

" உனக்கு செல்வம் அந்த ஜென்மத்தில் கொடுத்து வைக்கவில்லை."என்று கூறினாள். அந்த ஏழை, உடனடியாக 'ஆபத் சன்னியாச' முறையில் தன்னையே சன்னியாசியாக்கிக் கொண்டு விட்டான்.

"அம்மா! 'சன்னியாசம்' என்பது மறுபிறவி போன்றதே! ஆகவே அப்போது எனக்கு செல்வம் வழங்க அட்டி ஒன்றும் இல்லையே?" என்று லட்சுமியைக் கேட்டான்.

லட்சுமியும் பொன்மழையைக் கொட்டச் செய்தாள்.

அதை அள்ளப் போனவனிடம் கேட்டாள், "சன்னியாசிக்கு ஏனப்பா, இவ்வளவு செல்வம்?"

************

கைவினை செய்து எம்பிரான் சுழல் போற்றுவதே செய்வினை வந்து தீண்டாதொழிவதற்கு உபாயம் எனத் திருஞான சம்பந்தப் பெருமான் உணர்த்துகின்றார்.

''வேதமோதி வெண்ணூல் பூண்டு வெள்ளை எருதேறிப்
பூதஞ்சூழப் பொலிய வருவார் புலியினுரி தோலார்
நாதா எனவும் நக்கா என நின்று
பாதந்தொழுவார் பாவந் தீர்ப்பார் பழன் நகராரே'' [திருமுறை 1-67-1 திருப்பழனம்]

' 'கற்றாங் கெரியோபிக் கலியை வாராமே
செற்றார் வாழ் தில்லை சிற்றம்பலமேய
முற்றா வெண் திங்கள் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்ற பாவமே'' [திருமுறை 1-80-1 கோயில் பதிகம்]

விதியை மாற்ற வல்லவன் இறைவன். விதியின் எந்த அம்சங்களை எல்லாம் மாற்ற வேண்டும் என்று நினைக்கிறானோ, அவற்றை எல்லாம் மாற்ற வல்லவன் இறைவன்.

"விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகில் அவை ஒன்றுமில்லையே!
பண்ணிய உலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணி நின்றறுப்பது நம சிவாயவே!" [திருமுறை 4, திருநாவுக்கரசரின் பஞ்சாட்சரப் பதிகம்]

"நவச்சிவாயம்" என்னும் நாமத்தை ஓதினாலே போதும் ஒருவனது இடர் மறைந்துவிடும் அப்பர் வாக்கு. விண்ணளவுக்கு அடுக்கிவைத்த விறகுக் குவியல். அதனை எரித்துப் புகையாக்கும் நெருப்பு; சிந்தித்துப் பார்த்துச் சொல்லும் போது அது ஒன்றுமே இல்லை. நாதனின் நாமம் தீவினைகளை அழித்துவிடும். சிவஞானிக்கு வினைப்பயன் நுகர்ச்சி வினை விளைவும் சாராமைக் கீழ்க்காணும் 3 செய்யுள்கள் உணர்த்துகின்றன. இதனை சிவஞான சித்தியார்,

'' இவன் உலகில் இதம் அகிதம் செய்த எல்லாம்
இதம் அகிதம் இவனுக்குச் செய்தார்பால் இசையும்
அவன் இவனாய் நின்றமுறை ஏகனாகி
அரன்பணியில் நின்றிடவும் அகலும் குற்றம்
சிவனும் இவன் செய்தி எல்லாம் என் செய்தி என்றும்
செய்தது எனக்கு இவனுக்குச் செய்த தென்றும்
பாவம் அகல உடனாமி நின்றுகொள்வன் பரிவாற்
பாதகத்தைச் செய்திடினும் பணியாக்கி விடுமே''

[இறைவன் எடுத்துச் சுமப்பானாக ஏன்று கொள்வதால் அடியார்களை வினைப் பயன் சார்வதில்லை]

வினைப் பயன் நியதி தத்துவத்தின் பிரகாரம் அனுபவித்துத் தீர வேண்டும் அல்லது முறைப்படி பிராயச்சித்தம் செய்தாலும் தீரும் என ஆகமங்கள் கூறுகின்றன.

மனுநீதிச் சக்கரவர்த்தியின் மைந்தன் திருவாரூரில் பசுவின் கன்றைத் தேர்க்காலில் நசுக்கிச் கொன்ற
பாவம் தீர ''மறை மொழிந்த அறம் புரிதல் தொன்று தொடுநெறியன்றோ தொல் நிலங்கால் என்று!''

[அதாவது, பிராயச்சித்தம் செய்து பாவத்தைத் தீர்க்கலாம் என்று] அமைச்சர் கூறியதை கேளாது

''தருமம் தன் வழிச் செல்கை கடன்'' என்ற நிலையில்
''தண்ணளிவெண் குடைவேந்தன் செயல்கண்டு தரியாது,
மண்ணவர்கண் மழைபொழிந்தார் வானவர் பூ மழை சொரிந்தார்
அண்ணலவன் கண்ணெதிரே அணி வீதி மழவிடை மேல்
விண்ணவர்கள் தொழ நின்றான் வீதிவிடங்கப் பெருமான்''
''கண்டரசன் போற்றிசைப்ப விடை மருவும் பெருமானும்
விறல் வேந்தற் அருள் கொடுத்தான்''

என்ற பெரிய புராணச் செய்தி நியதி தத்துவம் ஆன்மாக்களைக் கன்மா அனுபவங்களைப் பெறச் செய்து, திருந்தி வாழ்ந்து, முத்திக்கு ஆளாகச் செய்வதற்கு உரிய கருவியாக அமைகின்றன என்பதை அறிகிறோம்.

கூறு கூவல் மன்னும் அக்குடம் குறித்து நீள்கரை
ஏறல் உற்ற தன்மை நீ ஒருத்தரின்றி ஏறுதல்
வேறொருத்தன் அக்குடத்தை மீது நின்று எடுக்கவே
ஏறல் உற்ற தன்மையில் சிவன் திறத்து நின்றிடே

[உயிர்களுக்கு அப்பால் ஆனால் உயிர்களோடு அவையே தானாக உடனாயும் வேறாயும் நிற்கும் பரம்பொருள் (இரும்பை காந்தம் வலிப்பது போன்று) மேலே இழுக்கவே தான் ஆன்மாக்கள் உயரும் என்பதை மறுக்கும் உன் கூற்று, கிணற்றில் விழுந்த குடம் நீருடன் தானே கரையேறும் என்று கூறுவது ஒக்கும். அக்குடத்தை மேலே இருந்தவாறு ஒருவன் இழுக்கவே தான் அந்தக்குடம் கரையைச் சேரும் என்பதுபோல், ஆனமாவுடன் அதுவே தானாக நிற்கும் சிவன் வேறாகி உயர்ந்து தன்பால் இழுக்கவேதான் ஆன்மாக்கள் வினை, கன்மம் தொலைத்து சுத்தமாகி அழியா பேரின்பத்து அற்புத தில்லை மன்று புகும் என்று தெளிந்து சிவ வழிபாட்டில் நிற்கக் கடவாய்.]

பத்தாம் திருமுறை திருமந்திரம் முழுமையும் தத்துவக் கருத்துக்களை உட்கொண்டு விளங்குவதால்
அத்திருமுறையில் அகப் பாடல் குறிப்பு காணப்படுவதில்லை. மற்ற திருமுறைகளில் அகத்துறைப் பாடல்கள் காணப்படுகின்றன.

திருமுறைகள் அவனது திருவடியை பிரியாது நின்று இன்பம் துய்ப்பதற்குரிய பாடல்கள். அருளாளர்கள் உளமுருகி பாடிய பதிகங்களை நாமும் பாடி, அவன் அன்பையும், அருளையும் பெறுவதோடு நமது வினைகளிலிருந்து முற்றம் பெறுவோம்


நன்றி முத்துகமலம்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 36
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum