இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


கம்ப இராமாயணம் - கிட்கிந்தா காண்டம்7. வாலி வதைப் படலம்

Go down

கம்ப இராமாயணம் - கிட்கிந்தா காண்டம்7. வாலி வதைப் படலம் Empty கம்ப இராமாயணம் - கிட்கிந்தா காண்டம்7. வாலி வதைப் படலம்

Post by ஆனந்தபைரவர் Tue Aug 24, 2010 4:05 pm

இராமன் முதலிய யாவரும் சென்ற மலைவழி

வெங் கண் ஆளிஏறும், மீளி மாவும், வேக நாகமும்,
சிங்க ஏறு இரண்டொடும் திரண்ட அன்ன செய்கையார்,
தங்கு சாலம், மூலம் ஆர் தமாலம், ஏலம், மாலைபோல்
பொங்கு நாகமும், துவன்று, சாரலூடு போயினார். 1

உழை உலாம் நெடுங் கண் மாதர் ஊசல்; ஊசல் அல்லவேல்,
தழை உலாவு சந்து அலர்ந்த சாரல்; சாரல் அல்லவேல்,
மழை உலாவு முன்றில்; அல்ல, மன்றல் நாறு சண்பகக்
குழை உலாவு சோலை; சோலை அல்ல, பொன் செய் குன்றமே 2

அறங்கள் நாறும் மேனியார், அரிக் கணங்களோடும், அங்கு
இறங்கு போதும், ஏறு போதும், ஈறு இலாத ஓதையால்,
கறங்கு வார் கழல் கலன் கலிப்ப, முந்து கண் முகிழ்த்து
உறங்கு மேகம், நன்கு உணர்ந்து, மாசு மீது உலாவுமே. 3

நீடு நாகமூடு மேகம் ஓட, நீரும் ஓட, நேர்
ஆடு நாகம் ஓட, மானை யானை ஓட, ஆளி போம் -
மாடு நாகம் நீடு சாரல், வாளை ஓடும் வாவியூடு
ஓடு நாகம் ஓட, வேங்கை ஓடும், யூகம் ஓடவே. 4

மருண்ட மா மலைத் தடங்கள் செல்லல் ஆவ அல்ல - மால்
தெருண்டிலாத மத்த யானை சீறி நின்று சிந்தலால்,
இருண்ட காழ் அகில், தடத்தொடு இற்று வீழ்ந்த சந்து வந்து
உருண்டபோது, அழிந்த தேன் ஒழுக்கு பேர் இழுக்கினே! 5

மினல் மணிக் குலம் துவன்றி, வில் அலர்த்து, விண் குலாய்,
அனல் பரப்பல் ஒப்ப, மீது இமைப்ப, வந்து அவிப்பபோல்
புனல் பரப்பல் ஒப்பு இருந்த பொன் பரப்பும் என்பரால் -
இனைய வில் தடக் கை வீரர் ஏகுகின்ற குன்றமே. 6

மருவி ஆடும் வாவிதோறும் வான யாறு பாயும், வந்து;
இருவி ஆர் தடங்கள் தோறும் ஏறு பாயுமாறுபோல்,
அருவி பாயும்; முன்றில், ஒன்றி யானை பாயும்; ஏனலில்,
குருவி பாயும்; ஓடி, மந்தி கோடு பாயும் - மாடு எலாம். 7

தேன் இழுக்கு சாரல் வாரி செல்லின், மீது செல்லும் நாள் -
மீன் இழுக்கும்; அன்றி, வான வில் இழுக்கும்; வெண் மதிக்
கூன் இழுக்கும்; மற்று உலாவு கோள் இழுக்கும்; என்பரால் -
வான் இழுக்கும் ஏல வாச மன்றல் நாறு குன்றமே. 8

வாலியின் இருப்பிடம் சார்ந்து, ஒருவர்க்கொருவர் ஆலோசித்தல்

அன்னது ஆய குன்றின் ஆறு, சென்ற வீரர், ஐந்தொடு ஐந்து
என்னல் ஆய யோசனைக்கும் உம்பர் ஏறி, இம்பரில்
பொன்னின் நாடு இழிந்தது அன்ன, வாலி வாழ் பொருப்பு இடம்
துன்னினார்கள்; 'செய்வது என்னை?' என்று நின்று சொல்லுவார்: 9

இராமன் தன் கருத்தை வெளியிடுதல்

அவ் இடத்து, இராமன், 'நீ அழைத்து, வாலி ஆனது ஓர்
வெவ் விடத்தின் வந்து போர் விளைக்கும் ஏல்வை, வேறு நின்று,
எவ்விடத் துணிந்து அமைந்தது; என் கருத்து இது' என்றனன்;
தெவ் அடக்கும் வென்றியானும், 'நன்று இது' என்று சிந்தியா, 10

சுக்கிரீவன் ஆரவாரித்து, வாலியைப் போருக்கு அழைத்தல்

வார்த்தை அன்னது ஆக, வான் இயங்கு தேரினான் மகன்,
நீர்த் தரங்க வேலை அஞ்ச, நீல மேகம் நாணவே,
வேர்த்து மண் உளோர் இரிந்து, விண் உளோர்கள் விம்ம, மேல்
ஆர்த்த ஓசை, ஈசன் உண்ட அண்டம் முற்றும் உண்டதே. 11

இடித்து, உரப்பி, 'வந்து போர் எதிர்த்தியேல் அடர்ப்பென்' என்று,
அடித்தலங்கள் கொட்டி, வாய் மடித்து, அடுத்து அலங்கு தோள்
புடைத்து நின்று, உளைத்த பூசல் புக்கது என்ப - மிக்கு இடம்
துடிப்ப, அங்கு, உறங்கு வாலி திண் செவித் துளைக்கணே. 12

முழக்கம் கேட்டு, வாலி போருக்கு எழுதல்

மால் பெருங் கட கரி முழக்கம் வாள் அரி
ஏற்பது செவித்தலத்து என்ன, ஓங்கிய
ஆர்ப்பு ஒலி கேட்டனன் - அமளிமேல் ஒரு
பாற்கடல் கிடந்ததே அனைய பான்மையான். 13

உருத்தனன் பொர எதிர்ந்து இளவல் உற்றமை,
வரைத் தடந் தோளினான், மனத்தின் எண்ணினான்;
சிரித்தனன்; அவ் ஒலி, திசையின் அப் புறத்து
இரித்தது, அவ் உலகம் ஓர் எழொடு ஏழையும். 14

எழுந்தனன், வல் விரைந்து, இறுதி ஊழியில்
கொழுந் திரைக் கடல் கிளர்ந்தனைய கொள்கையான்;
அழுந்தியது, அக் கிரி; அருகில் மால் வரை
விழுந்தன, தோள் புடை விசித்த காற்றினே. 15

போய்ப் பொடித்தன மயிர்ப் புறத்த, வெம் பொறி;
காய்ப்பொடு உற்று எழு வட கனலும் கண் கெட,
தீப் பொடித்தன, விழி; தேவர் நாட்டினும்
மீப் பொடித்தன புகை, உயிர்ப்பு வீங்கவே. 16

கைக் கொடு கைத்தலம் புடைப்ப, காவலின்
திக் கயங்களும் மதச் செருக்குச் சிந்தின;
உக்கன உரும் இனம்; உலைந்த உம்பரும்;
நெக்கன, நெரிந்தன, நின்ற குன்றமே. 17

'வந்தனென்! வந்தனென்!' என்ற வாசகம்
இந்திரி முதல் திசை எட்டும் கேட்டன;
சந்திரன் முதலிய தாரகைக் குழாம்
சிந்தின, மணி முடிச் சிகரம் தீண்டவே. 18

வீசின காற்றின் வேர் பறிந்து, வெற்பு இனம்
ஆசையை உற்றன; அண்டப் பித்திகை
பூசின, வெண் மயிர் பொடித்த வெம் பொறி;
கூசினன் அந்தகன்; குலைந்தது உம்பரே. 19

கடித்த வாய் எயிறு உகு கனல்கள் கார் விசும்பு
இடித்த வாய் உகும் உரும் இனத்தின் சிந்தின;
தடித்து வீழ்வன எனத் தகர்ந்து சிந்தின,
வடித்த தோள் வலயத்தின் வயங்கு காசு அரோ. 20

ஞாலமும், நால் திசைப் புனலும், நாகரும்,
மூலமும், முற்றிட முடிவில் தீக்கும் அக்
காலமும் ஒத்தனன்; கடலில் தான் கடை
ஆலமும் ஒத்தனன், எவரும் அஞ்சவே. 21

மனைவி தாரை தடுக்க, வாலி மறுத்துக் கூறுதல்

ஆயிடை, தாரை என்று அமிழ்தின் தோன்றிய
வேயிடைத் தோளினாள், இடை விலக்கினாள்;
வாயிடைப் புகை வர, வாலி கண் வரும்
தீயிடை, தன் நெடுங் கூந்தல் தீகின்றாள். 22

'விலக்கலை; விடு; விடு; விளிந்துளான் உரம்
கலக்கி, அக் கடல் கடைந்து அமுது கண்டென,
உலக்க இன் உயிர் குடித்து, ஒல்லை மீள்குவல்,
மலைக் குல மயில்!' என, மடந்தை கூறுவாள்: 23

'கொற்றவ! நின் பெருங் குவவுத் தோள் வலிக்கு
இற்றனன், முன்னை நாள், ஈடு உண்டு ஏகினான்;
பெற்றிலன் பெருந் திறல்; பெயர்த்தும் போர் செயற்கு
உற்றது, நெடுந் துணை உடைமையால்' என்றாள். 24

'மூன்று என முற்றிய முடிவு இல் பேர் உலகு
ஏன்று, உடன் உற்றன, எனக்கு நேர் எனத்
தோன்றினும், தோற்று, அவை தொலையும் என்றலின்
சான்று உள; அன்னவை - தையல்! - கேட்டியால்: 25

'மந்தர நெடு வரை மத்து, வாசுகி
அந்தம் இல் கடை கயிறு, அடை கல் ஆழியான்,
சந்திரன் தூண், எதிர் தருக்கின் வாங்குநர்,
இந்திரன் முதலிய அமரர், ஏனையோர்; 26

'பெயர்வுற வலிக்கவும், மிடுக்கு இல் பெற்றியார்
அயர்வுறல் உற்றதை நோக்கி, யான், அது
தயிர் எனக் கடைந்து, அவர்க்கு அமுதம் தந்தது,
மயில் இயல் குயில்மொழி! மறக்கல் ஆவதோ? 27

'ஆற்றல் இல் அமரரும், அவுணர் யாவரும்,
தோற்றனர்; எனையவர் சொல்லற்பாலரோ?
கூற்றும், என் பெயர் சொலக் குலையும்; ஆர் இனி
மாற்றலர்க்கு ஆகி வந்து, எதிரும் மாண்பினார்? 28

'பேதையர் எதிர்குவர் எனினும், பெற்றுடை
ஊதிய வரங்களும், உரமும், உள்ளதில்
பாதியும், என்னதால்; பகைப்பது எங்ஙனம்?
நீ, துயர் ஒழிக!' என, நின்று கூறினான். 29

'சுக்கிரீவனுக்கு இராமன் துணை வந்துள்ளான்' என்று தாரை சொல்ல, வாலி இராமனது நற்பண்புகளை கூறி, மறுத்துரைத்தல்

அன்னது கேட்டவள், 'அரச! "ஆயவற்கு
இன் உயிர் நட்பு அமைந்து இராமன் என்பவன்,
உன் உயிர் கோடலுக்கு உடன் வந்தான்" என,
துன்னிய அன்பினர் சொல்லினார்' என்றாள். 30

'உழைத்த வல் இரு வினைக்கு ஊறு காண்கிலாது
அழைத்து அயர் உலகினுக்கு அறத்தின் ஆறு எலாம்
இழைத்தவற்கு, இயல்பு அல இயம்பி என் செய்தாய்?
பிழைத்தனை; பாவி! உன் பெண்மையால்' என்றான். 31

'இருமையும் நோக்குறும் இயல்பினாற்கு இது
பெருமையோ? இங்கு இதில் பெறுவது என்கொலோ?
அருமையின் நின்று, உயிர் அளிக்கும் ஆறுடைத்
தருமமே தவிர்க்குமோ தன்னைத் தான் அரோ? 32

'ஏற்ற பேர் உலகு எலாம் எய்தி, ஈன்றவள்
மாற்றவள் ஏவ, மற்று, அவள்தன் மைந்தனுக்கு
ஆற்ற அரும் உவகையால் அளித்த ஐயனைப்
போற்றலை; இன்னன புகறல்பாலையோ?' 33

'நின்ற பேர் உலகு எலாம் நெருக்கி நேரினும்,
வென்றி வெஞ் சிலை அலால், பிறிது வேண்டுமோ?
தன் துணை ஒருவரும், தன்னில் வேறு இலான்,
புன் தொழில் குரங்கொடு புணரும் நட்பனோ? 34

'தம்பியர் அல்லது தனக்கு வேறு உயிர்
இம்பரின் இலது என எண்ணி ஏய்ந்தவன்,
எம்பியும் யானும் உற்று எதிர்ந்த போரினில்
அம்பு இடை தொடுக்குமோ, அருளின் ஆழியான்? 35

'இருத்தி, நீ, இறை, இவண்; இமைப்பு இல் காலையில்,
உருத்தவன் உயிர் குடித்து, உடன் வந்தாரையும்
கருத்து அழித்து, எய்துவென்; கலங்கல்' என்றனன்;
விரைக் குழல், பின், உரை விளம்ப அஞ்சினாள். 36

போரை விரும்பி வாலி குன்றின் புறத்து வருதல்

ஒல்லை, செரு வேட்டு, உயர் வன் புய ஓங்கல் உம்பர்
எல்லைக்கும் அப்பால் இவர்கின்ற இரண்டினோடும்,
மல்லல் கிரியின் தலை வந்தனன், வாலி - கீழ்பால்,
தொல்லைக் கிரியின் தலை தோற்றிய ஞாயிறு என்ன. 37

நின்றான், எதிர் யாவரும் நெஞ்சு நடுங்கி அஞ்ச,
தன் தோள் வலியால் தகை மால் வரை சாலும் வாலி,
குன்றூடு வந்து உற்றனன் - கோள் அவுணன் குறித்த
வன் தூணிடைத் தோன்றிட மா நரசிங்கம் என்ன. 38

ஆர்க்கின்ற பின்னோன் தனை நோக்கினன்; தானும் ஆர்த்தான்;
வேர்க்கின்ற வானத்து உரும் ஏறு வெறித்து வீழப்
போர்க்கின்றது, எல்லா உலகும் பொதிர்வுற்ற பூசல் -
கார்க் குன்றம் அன்னான் நிலம் தாவிய கால் இது என்ன. 39

இருவரையும் கண்ட இராமன் வியந்து இளவலுக்குக் கூறுதல்

அவ் வேலை, இராமனும், அன்புடைத் தம்பிக்கு, 'ஐய!
செவ்வே செல நோக்குதி; தானவர் தேவர் நிற்க,
எவ் வேலை, எம் மேகம், எக் காலொடு எக் கால வெந் தீ,
வெவ் வேறு உலகத்து இவர் மேனியை மானும்?' என்றான். 40

சுக்கிரீவன் குறித்து இலக்குவன் ஐயுற்றுக் கூறுதல்

வள்ளற்கு, இளையான் பகர்வான், 'இவன், தம்முன் வாழ்நாள்
கொள்ள, கொடுங் கூற்றுவனைக் கொணர்ந்தான்; குரங்கின்
எள்ளற்குறு போர் செய எண்ணினன் என்னும் இன்னல்
உள்ளத்து ஊன்ற, உணர்வு உற்றிலென் ஒன்றும்' என்றான். 41

ஆற்றாது, பின்னும் பகர்வான், 'அறத்தாறு அழுங்கத்
தேற்றாது செய்வார்களைத் தேறுதல் செவ்வியது அன்றால்;
மாற்றான் எனத் தம்முனைக் கொல்லிய வந்து நின்றான்,
வேற்றார்கள் திறத்து இவன் தஞ்சம் என்? வீர!' என்றான். 42

இளவலுக்கு இராமன் ஏற்ற மறுமொழி பகர்தல்

'அத்தா! இது கேள்' என, ஆரியன் கூறுவான், 'இப்
பித்து ஆய விலங்கின் ஒழுக்கினைப் பேசல் ஆமோ?
எத் தாயர் வயிற்றினும், பின் பிறந்தார்கள் எல்லாம்
ஒத்தால், பரதன் பெரிது உத்தமன் ஆதல் உண்டோ ? 43

'வில் தாங்கு வெற்பு அன்ன விலங்கு எழில் தோள! "மெய்ம்மை
உற்றார் சிலர்; அல்லவரே பலர்" என்பது உண்மை.
பெற்றாருழைப் பெற்ற பயன் பெறும் பெற்றி அல்லால்,
அற்றார் நவை என்றலுக்கு ஆகுநர், ஆர்கொல்?' என்றான். 44

வாலி-சுக்கிரீவன் போர்

வீரத் திறலோர், இவை இன்ன விளம்பும் வேலை,
தேரில் திரிவான் மகன், இந்திரன் செம்மல், என்று இப்
பாரில் திரியும் பனி மால் வரை அன்ன பண்பார்,
மூரித் திசை யானை இரண்டு என, முட்டினாரே. 45

குன்றோடு குன்று ஒத்தனர்; கோள் அரிக் கொற்ற வல் ஏறு
ஒன்றோடு சென்று, ஒன்று எதிர் உற்றனவேயும் ஒத்தார்;
நின்றார்; திரிந்தார் நெடுஞ் சாரி; நிலம் திரிந்த,
வன் தோள் குயவன் திரி மட்கலத்து ஆழி என்ன. 46

தோளோடு தோள் தேய்த்தலின் தொல் நிலம் தாங்கல் ஆற்றாத்
தாளோடு தாள் தேய்த்தலின், தந்த தழல் பிறங்கல்,
வாளோடு மின் ஓடுவபோல், நெடு வானின் ஓடும் -
கோளோடு கோள் உற்றென ஒத்து அடர்ந்தார், கொதித்தார். 47

தம் தோள் வலி மிக்கவர், தாம் ஒரு தாய் வயிற்றின்
வந்தோர், மட மங்கை பொருட்டு மலைக்கலுற்றார்;
சிந்து ஓடு அரி ஒண் கண் திலோத்தமை காதல் செற்ற
சுந்தோபசுந்தப் பெயர்த் தொல்லையினோரும் ஒத்தார். 48

கடல் ஒன்றினொடு ஒன்று மலைக்கவும், காவல் மேருத்
திடல் ஒன்றினொடு ஒன்று அமர் செய்யவும், சீற்றம் என்பது
உடல் கொண்டு இரண்டு ஆகி உடற்றவும், கண்டிலாதேம்,
மிடல், இங்கு இவர் வெந் தொழிற்கு ஒப்புரை வேறு காணேம். 49

ஊகங்களின் நாயகர் வெங் கண் உமிழ்ந்த தீயால்,
மேகங்கள் எரிந்தன; வெற்பும் எரிந்த; திக்கின்
நாகங்கள் நடுங்கின; நானிலமும் குலைந்த;
மாகங்களை நண்ணிய விண்ணவர் போய் மறைந்தார். 50

'விண் மேலினரோ? நெடு வெற்பின் முகட்டினாரோ?
மண் மேலினரோ? புற மாதிர வீதியாரோ?
கண் மேலினரோ?' என, யாவரும் காண் நின்றார்,
புண்மேல் இரத்தம் பொடிப்ப, கடிப்பார், புடைப்பார். 51

ஏழ் ஒத்து, உடன் ஆம் திசை எட்டொடு இரண்டும் முட்டும்,
ஆழிக் கிளர் ஆர் கலிக்கு ஐம் மடங்கு ஆர்ப்பின் ஓசை;
பாழித் தடந் தோளினும் மார்பினும் கைகள் பாய,
ஊழிக் கிளர் கார் இடி ஒத்தது, குத்தும் ஓதை. 52

வெவ் வாய் எயிற்றால் மிடல் வீரர் கடிப்ப, மீச் சென்று,
அவ் வாய் எழு சோரி அது, ஆசைகள் தோறும் வீச,
எவ் வாயும் எழுந்த கொழுஞ் சுடர் மீன்கள் யாவும்,
செவ் வாயை நிகர்த்தன; செக்கரை ஒத்த, மேகம். 53

வெந்த வல் இரும்பிடை நெடுங் கூடங்கள் வீழ்ப்ப,
சிந்தி எங்கணும் சிதறுவபோல், பொறி தெறிப்ப,
இந்திரன் மகன் புயங்களும், இரவி சேய் உரனும்,
சந்த வல் நெடுந் தடக் கைகள் தாக்கலின் தகர்வ. 54

உரத்தினால் மடுத்து உந்துவர்; பாதம் இட்டு உதைப்பர்;
கரத்தினால் விசைத்து எற்றுவர்; கடிப்பர்; நின்று இடிப்பர்;
மரத்தினால் அடித்து உரப்புவர்; பொருப்பு இனம் வாங்கிச்
சிரத்தின் மேல் எறிந்து ஒறுக்குவர்; தெழிப்பர்; தீ விழிப்பர். 55

எடுப்பர் பற்றி; உற்று ஒருவரை ஒருவர் விட்டு எறிவர்;
கொடுப்பர், வந்து, உரம்; குத்துவர் கைத்தலம் குளிப்ப;
கடுப்பினில் பெருங் கறங்கு எனச் சாரிகை பிறங்கத்
தடுப்பர்; பின்றுவர்; ஒன்றுவர்; தழுவுவர்; விழுவர். 56

வாலினால் உரம் வரிந்தனர், நெரிந்து உக வலிப்பர்;
காலினால் நெடுங் கால் பிணித்து உடற்றுவர்; கழல்வர்;
வேலினால் அற எறிந்தென, விறல் வலி உகிரால்,
தோலினால் உடன் நெடு வரை முழை எனத் தொளைப்பர். 57

மண்ணகத்தன மலைகளும், மரங்களும், மற்றும்
கண்ணகத்தினில் தோன்றிய யாவையும், கையால்,
எண் நகப் பறித்து எறிதலின், எற்றலின், இற்ற,
விண்ணகத்தினை மறைத்தன; மறி கடல் வீழ்ந்த. 58

வெருவிச் சாய்ந்தனர், விண்ணவர்; வேறு என்னை விளம்பல்?
ஒருவர்க்கு ஆண்டு அமர், ஒருவரும் தோற்றிலர்; உடன்று
செருவில் தேய்த்தலின், செங் கனல் வெண் மயிர்ச் செல்ல,
முரி புல் கானிடை எரி பரந்தன என முனைவார். 59

அன்ன தன்மையர், ஆற்றலின் அமர் புரி பொழுதின்,
வல் நெடுந் தடந் திரள் புயத்து அடு திறல் வாலி,
சொன்ன தம்பியை, தும்பியை அரி தொலைத்தென்ன,
கொல் நகங்களின், கரங்களின், குலைந்து, உக மலைந்தான். 60

வருத்தத்துடன் சுக்கிரீவன் இராமனை அடைய, அவன், 'கொடிப் பூ அணிந்து செல்க' எனக் கூறல்

மலைந்தபோது இனைந்து, இரவி சேய், ஐயன்மாடு அணுகி,
உலைந்த சிந்தையோடு உணங்கினன், வணங்கிட, 'உள்ளம்
குலைந்திடேல்; உமை வேற்றுமை தெரிந்திலம்; கொடிப் பூ
மிலைந்து செல்க' என விடுத்தனன்; எதிர்த்தனன் மீட்டும். 61

தயங்கு தாரகை நிரை தொடுத்து அணிந்தென, போல
வயங்கு சென்னியன், வயப் புலி வான வல் ஏற்றொடு
உயங்கும் ஆர்ப்பினன், ஒல்லை வந்து, அடு திறல் வாலி
பயம் கொளப் புடைத்து, எற்றினன்; குத்தினன், பலகால். 62

அயிர்த்த சிந்தையன், அந்தகன் குலைகுலைந்து அஞ்ச,
செயிர்த்து நோக்கினன்; சினத்தொடு சிறு நகை செய்யா,
வயிர்த்த கையினும், காலினும், கதிர்மகன் மயங்க,
உயிர்த் தலம்தொறும், புடைத்தனன், அடித்தனன், உதைத்தான் 63

கக்கினான் உயிர், உயிர்ப்பொடும்; செவிகளின், கண்ணின்,
உக்கது, ஆங்கு, எரிப் படலையோடு உதிரத்தின் ஓதம்;
திக்கு நோக்கினன், செங் கதிரோன் மகன்; செருக்கிப்
புக்கு, மீக் கொடு நெருக்கினன், இந்திரன் புதல்வன். 64

சுக்கிரீவனைப் வாலி மேலே தூக்கலும், வாலி மேல் இராமன் அம்பு எய்தலும்

'எடுத்துப் பாரிடை எற்றுவென், பற்றி' என்ரு, இளவல்
கடித்தலத்தினும், கழுத்தினும், தன் இரு கரங்கள்
மடுத்து, மீக் கொண்ட வாலிமேல், கோல் ஒன்று வாங்கி,
தொடுத்து, நாணொடு தோள் உறுத்து, இராகவன் துரந்தான். 65

கார் உண் சுவைக் கதலியின் கனியினைக் கழியச்
சேரும் ஊசியின் சென்றது - நின்றது என், செப்ப?-
நீரும், நீர் தரு நெருப்பும், வன் காற்றும், கீழ் நிவந்த
பாரும், சார் வலி படைத்தவன் உரத்தை அப் பகழி. 66

வாலி மண்ணில் சாய்தல்

அலங்கு தோள் வலி அழிந்த அத் தம்பியை அருளான்,
வலம் கொள் பாரிடை எற்றுவான் உற்ற போர் வாலி,
கலங்கி, வல் விசைக் கால் கிளர்ந்து எறிவுற, கடைக்கால்
விலங்கல் மேருவும் வேர் பறிந்தாலென, வீழ்ந்தான். 67

சுக்கிரீவனை விடுத்து, அம்பினை வாலி இறுகப் பற்றுதல்

சையம் வேரொடும் உரும் உறச் சாய்ந்தென, சாய்ந்து,
வையம் மீதிடைக் கிடந்த போர் அடு திறல் வாலி,
வெய்யவன் தரு மதலையை மிடல் கொடு கவரும்
கை நெகிழ்ந்தனன்; நெகிழ்ந்திலன், கடுங் கணை கவர்தல். 68

வாலி அம்பினை வெளியில் எடுக்க முயல்தல்

எழுந்து, 'வான் முகடு இடித்து அகப்படுப்பல்' என்று, இவரும்;
'உழுந்து பேரு முன், திசை திரிந்து ஒறுப்பல்' என்று, உதைக்கும்;
'விழுந்து, பாரினை வேரொடும் பறிப்பல்' என்று, உறுக்கும்;
'அழுந்தும் இச் சரம் எய்தவன் ஆர்கொல்?' என்று, அயிர்க்கும். 69

எற்றும் கையினை நிலத்தொடும்; எரிப் பொறி பறப்ப,
சுற்றும் நோக்குறும்; சுடு சரம்தனைத் துணைக் கரத்தால்
பற்றி, வாலினும் காலினும் வலி உற, பறிப்பான்
உற்று, உறாமையின் உலைவுறும்; மலை என உருளும். 70

'தேவரோ?' என அயிர்க்கும்; 'அத் தேவர், இச் செயலுக்கு
ஆவரோ? அவர்க்கு ஆற்றல் உண்டோ ?' எனும்; 'அயலோர்
யாவரோ?' என நகைசெயும்; 'ஒருவனே, இறைவர்
மூவரோடும் ஒப்பான், செயல் ஆம்' என மொழியும். 71

'நேமிதான் கொலோ? நீலகண்டன் நெடுஞ் சூலம்,
ஆம் இது, ஆம் கொலோ? அன்று எனின், குன்று உருவு அயிலும்,
நாம இந்திரன் வச்சிரப் படையும், என் நடுவண்
போம் எனும் துணை போதுமோ? யாது?' எனப் புழுங்கும். 72

'வில்லினால் துரப்ப அரிது, இவ் வெஞ் சரம்' என வியக்கும்;
'சொல்லினால் நெடு முனிவரோ தூண்டினார்' என்னும்;
பல்லினால் பறிப்புறும்; பல காலும் தன் உரத்தைக்
கல்லி ஆர்ப்பொடும் பறிக்கும் அப் பகழியைக் கண்டான். 73

'சரம் எனும்படி தெரிந்தது; பல படச் சலித்து என்?
உரம் எனும் பதம், உயிரொடும் உருவிய ஒன்றை,
கரம் இரண்டினும், வாலினும், காலினும், கழற்றி,
பரமன் அன்னவன் பெயர் அறிகுவென்' என, பறிப்பான். 74

வாலி மார்பினின்று அம்பைப் பறிக்க, இரத்த வெள்ளம் பெருகுதல்

ஓங்கு அரும் பெருந் திறலினும், காலினும், உரத்தின்,
வாங்கினான், மற்று அவ் வாளியை, ஆளிபோல் வாலி
ஆங்கு நோக்கினர், அமரரும் அவுணரும் பிறரும்,
வீங்கினார்கள் தோள்; - வீரரை யார் வியவாதார்? 75

மோடு தெண் திரை முரிதரு கடல் என முழங்கி,
ஈடு பேர் உலகு இறந்துளது ஆம் எனற்கு எளிதோ?
காடு, மா நெடு விலங்கல்கள், கடந்தது; அக் கடலின் -
ஊடு போதல் உற்றதனை ஒத்து உயர்ந்துளது உதிரம். 76

உடன்பிறந்த பாசத்தால் சுக்கிரீவனும் வருந்தித் தரை மீது விழுதல்

வாசத் தாரவன் மார்பு எனும் மலை வழங்கு அருவி
ஓசைச் சோரியை நோக்கினன்; உடன்பிறப்பு என்னும்
பாசத்தால் பிணிப்புண்ட அத் தம்பியும், பசுங் கண்
நேசத் தாரைகள் சொரிதர, நெடு நிலம் சேர்ந்தான். 77

அம்பில் இராம நாமம் பொறித்திருத்தலை வாலி பார்த்தல்

பறித்த வாளியை, பரு வலித் தடக் கையால் பற்றி,
'இறுப்பென்' என்று கொண்டு எழுந்தனன், மேருவை இறுப்போன்;
'முறிப்பென் என்னினும், முறிவது அன்று ஆம்' என மொழியா,
பொறித்த நாமத்தை அறிகுவான் நோக்கினன், புகழோன். 78

மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் பதத்தை, தானே
இம்மையே, எழுமை நோய்க்கும் மருந்தினை, 'இராமன்' என்னும்
செம்மை சேர் நாமம் தன்னை, கண்களின் தெரியக் கண்டான். 79

அம்பு எய்தவன் இராமன் தான் என அறிந்து வாலி இகழ்ந்துரைத்தல்

'இல்லறம் துறந்த தம்பி, எம்மனோர்க்காகத் தங்கள்
வில் அறம் துறந்த வீரன் தோன்றலால், வேத நல் நூல்
சொல் அறம் துறந்திலாத சூரியன் மரபும், தொல்லை
நல் அறம் துறந்தது' என்னா, நகை வர நாண் உட்கொண்டான் 80

வெள்கிடும் மகுடம் சாய்க்கும்; வெடிபடச் சிரிக்கும்; மீட்டும்
உள்கிடும்; 'இதுவும்தான் ஓர் ஓங்கு அறமோ?' என்று உன்னும்,
முள்கிடும் குழியில் புக்க மூரி வெங் களி நல் யானை
தொள்கொடும் கிடந்தது என்ன, துயர் உழந்து அழிந்து சோர்வான் 81

எதிரில் தோன்றிய இராமனை வாலி இகழ்ந்து பேசுதல்

'இறை திறம்பினனால்; என்னே, இழிந்துளோர் இயற்கை! என்னின்,
முறை திறம்பினனால்' என்று மொழிகின்ற முகத்தான் முன்னர்,
மறை திறம்பாத வாய்மை மன்னர்க்கு மனுவில் சொல்லும்
துறை திறம்பாமல் காக்கத் தோன்றினான், வந்து தோன்ற, 82

கண்ணுற்றான் வாலி, நீலக் கார் முகில் கமலம் பூத்து,
மண் உற்று, வரி வில் ஏந்தி, வருவதே போலும் மாலை;
புண் உற்றது அனைய சோரி பொறியோடும் பொடிப்ப, நோக்கி,
'எண்ணுற்றாய்! என் செய்தாய்?' என்று, ஏசுவான் இயம்பலுற்றான்: 83

'வாய்மையும், மரபும், காத்து, மன் உயிர் துறந்த வள்ளல்
தூயவன், மைந்தனே! நீ, பரதன்முன் தோன்றினாயே!
தீமைதான், பிறரைக் காத்து, தான் செய்தால் தீங்கு அன்று ஆமோ?
தாய்மையும் அன்றி, நட்பும், தருமமும், தழுவி நின்றாய்! 84

'குலம் இது; கல்வி ஈது; கொற்றம் ஈது; உற்று நின்ற
நலம் இது; புவனம் மூன்றின் நாயகம் உன்னது அன்றோ?
வலம் இது; இவ் உலகம் தாங்கும் வண்மை ஈது; என்றால் - திண்மை
அலமரச் செய்யலாமோ, அறிந்திருந்து அயர்ந்துளார் போல்? 85

'கோ இயல் தருமம், உங்கள் குலத்து உதித்தோர்கட்கு எல்லாம் -
ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய்! - உடைமை அன்றோ?
ஆவியை, சனகன் பெற்ற அன்னத்தை, அமிழ்தின் வந்த
தேவியை, பிரிந்த பின்னை, திகைத்தனை போலும், செய்கை! 86

'அரக்கர் ஓர் அழிவு செய்து கழிவரேல், அதற்கு வேறு ஓர்
குரக்கு இனத்து அரசைக் கொல்ல, மனு நெறி கூறிற்று உண்டோ?
இரக்கம் எங்கு உகுத்தாய்? என்பால் எப் பிழை கண்டாய்? அப்பா!
பரக்கழி இது நீ பூண்டால், புகழை யார் பரிக்கற்பாலார்? 87

'ஒலி கடல் உலகம் தன்னில் ஊர் தரு குரங்கின் மாடே,
கலியது காலம் வந்து கலந்ததோ? - கருணை வள்ளால்!-
மெலியவர் பாலதேயோ, ஒழுக்கமும் விழுப்பம் தானும்?
வலியவர் மெலிவு செய்தால், புகழ் அன்றி, வசையும் உண்டோ ? 88

'கூட்டு ஒருவரையும் வேண்டாக் கொற்றவ! பெற்ற தாதை
பூட்டிய செல்வம் ஆங்கே தம்பிக்குக் கொடுத்துப் போந்து,
நாட்டு ஒரு கருமம் செய்தாய்; எம்பிக்கு, இவ் அரசை நல்கி,
காட்டு ஒரு கருமம் செய்தாய்; கருமம் தான் இதன்மேல் உண்டோ ? 89

'அறை கழல் அலங்கல் வீரர் ஆயவர் புரிவது ஆண்மைத்
துறை எனல் ஆயிற்று அன்றே? தொன்மையின் நல் நூற்கு எல்லாம்
இறைவ! நீ, என்னைச் செய்தது ஈது எனில், "இலங்கை வேந்தன்
முறை அல செய்தான்" என்று, முனிதியோ? - முனிவு இலாதாய்! 90

'இருவர் போர் எதிரும் காலை, இருவரும் நல் உற்றாரே;
ஒருவர் மேல் கருணை தூண்டி, ஒருவர்மேல், ஒளித்து நின்று,
வரி சிலை குழைய வாங்கி, வாய் அம்பு மருமத்து எய்தல்
தருமமோ? பிறிது ஒன்று ஆமோ? தக்கிலது என்னும் பக்கம். 91

'வீரம் அன்று; விதி அன்று; மெய்ம்மையின்
வாரம் அன்று; நின் மண்ணினுக்கு என் உடல்
பாரம் அன்று; பகை அன்று; பண்பு அழிந்து
ஈரம் இன்றி, இது என் செய்தவாறு அரோ? 92

'இருமை நோக்கி நின்று, யாவர்க்கும் ஒக்கின்ற
அருமை ஆற்றல் அன்றோ, அறம் காக்கின்ற
பெருமை என்பது? இது என்? பிழை பேணல் விட்டு,
ஒருமை நோக்கி ஒருவற்கு உதவலோ? 93

'செயலைச் செற்ற பகை தெறுவான் தெரிந்து,
அயலைப் பற்றித் துணை அமைந்தாய் எனின்,
புயலைப் பற்றும் அப் பொங்கு அரி போக்கி, ஓர்
முயலைப் பற்றுவது என்ன முயற்சியோ? 94

'கார் இயன்ற நிறத்த களங்கம் ஒன்று
ஊர் இயன்ற மதிக்கு உளதாம் என,
சூரியன் மரபுக்கும் ஒர் தொல் மறு,
ஆரியன் பிறந்து ஆக்கினையாம் அரோ! 95

'மற்று ஒருத்தன் வலிந்து அறைகூவ வந்து
உற்ற என்னை, ஒளித்து, உயிர் உண்ட நீ,
இற்றையில், பிறர்க்கு, இகல் ஏறு என,
நிற்றிபோலும், கிடந்த நிலத்து அரோ! 96

'நூல் இயற்கையும், நும் குலத்து உந்தையர்
போல் இயற்கையும், சீலமும், போற்றலை;
வாலியைப் படுத்தாய் அலை; மன் அற
வேலியைப் படுத்தாய் - விறல் வீரனே! 97

'தாரம் மற்று ஒருவன் கொள, தன் கையில்
பார வெஞ் சிலை வீரம் பழுதுற,
நேரும் அன்று, மறைந்து, நிராயுதன்
மார்பின் எய்யவோ, வில் இகல் வல்லதே?' 98

என்று, தானும் எயிறு பொடிபடத்
தின்று, காந்தி விழிவழித் தீ உக,
அன்று அவ் வாலி, அனையன விளம்பினான்.
நின்ற வீரன், இனைய நிகழ்த்தினான்: 99

இராமன் தன் செய்கை முறை என மொழிதல்

'"பிலம் புக்காய் நெடு நாள் பெயராய்" எனப்
புலம்புற்று, உன் வழிப் போதலுற்றான் தனை,
குலம் புக்கு ஆன்ற முதியர், "குறிக் கொள் நீ -
அலம் பொன் தாரவனே! - அரசு" என்றலும், 100

'"வானம் ஆள என் தம்முனை வைத்தவன்
தானும் மாள, கிளையும் இறத் தடிந்து,
யானும் மாள்வென்; இருந்து அரசு ஆள்கிலென்;
ஊனம் ஆன உரை பகர்ந்தீர்" என, 101

'பற்றி, ஆன்ற படைத் தலை வீரரும்,
முற்று உணர்ந்த முதியரும், முன்பரும்,
"எற்றும் நும் அரசு எய்துவையாம்" என,
கொற்ற நன் முடி கொண்டது, இக் கோது இலான். 102

'வந்த உன்னை வணங்கி மகிழ்ந்தனன்;
"எந்தை! என்கண், இனத்தவர் ஆற்றலின்,
தந்தது உன் அரசு" என்று, தருக்கு இலான்
முந்தை உற்றது சொல்ல, முனிந்து நீ, 103

'கொல்லல் உற்றனை, உம்பியை; கோது அவற்கு
இல்லை என்பது உணர்ந்தும், இரங்கலை;
"அல்லல் செய்யல்; உனக்கு அபயம்; பிழை
புல்லல்" என்னவும், புல்லலை, பொங்கினாய். 104

'ஊற்றம் உற்று உடையான், "உனக்கு ஆர் அமர்
தோற்றும்" என்று, தொழுது உயர் கையனை,
"கூற்றம் உண்ணக் கொடுப்பென்" என்று எண்ணினாய்;
நால் திசைக்கும் புறத்தையும் நண்ணினான். 105

'அன்ன தன்மை அறிந்து, அருளலை;
பின்னவன் இவன் என்பதும் பேணலை;
வன்னிதான் இடு சாப வரம்புடைப்
பொன் மலைக்கு அவன் நண்ணலின், போகலை; 106

'ஈரம் ஆவதும், இற் பிறப்பு ஆவதும்,
வீரம் ஆவதும், கல்வியின் மெய்ந் நெறி,
வாரம் ஆவதும், மற்று ஒருவன் புணர்
தாரம் ஆவதைத் தாங்கும் தருக்கு அதோ? 107

'மறம் திறம்பல், "வலியம்" எனா, மனம்
புறம் திறம்ப எளியவர்ப் பொங்குதல்;
அறம் திறம்பல், அருங் கடி மங்கையர்
திறம் திறம்பல்; - தெளிவு உடையோர்க்கு எலாம். 108

'தருமம் இன்னது எனும் தகைத் தன்மையும்,
இருமையும் தெரிந்து, எண்ணலை; எண்ணினால்,
அருமை உம்பிதன் ஆர் உயிர்த் தேவியை,
பெருமை நீங்கினை, எய்தப் பெறுதியோ? 109

'ஆதலானும், அவன் எனக்கு ஆர் உயிர்க்
காதலான் எனலானும், நிற் கட்டனென்;
ஏதிலாரும், எளியர் என்றால், அவர்,
தீது தீர்ப்பது என் சிந்தைக் கருத்து அரோ. 110

வாலியின் மறுமொழி

'பிழைத்த தன்மை இது' எனப் பேர் எழில்
தழைத்த வீரன் உரைசெய, தக்கிலாது
இழைத்த வாலி, 'இயல்பு அல, இத் துணை
விழைத் திறம், தொழில்' என்ன விளம்புவான்: 111

'ஐய! நுங்கள் அருங் குலக் கற்பின், அப்
பொய் இல் மங்கையர்க்கு ஏய்ந்த புணர்ச்சிபோல்
செய்திலன், எமைத் தே மலர் மேலவன்;
எய்தின் எய்தியது ஆக, இயற்றினான். 112

'மணமும் இல்லை, மறை நெறி வந்தன;
குணமும் இல்லை, குல முதற்கு ஒத்தன;-
உணர்வு சென்றுழிச் செல்லும் ஒழுக்கு அலால்-
நிணமும் நெய்யும் இணங்கிய நேமியாய்! 113

'பெற்றி மற்று இது; பெற்றது ஓர் பெற்றியின்
குற்றம் உற்றிலன்; நீ, அது கோடியால்-
வெற்றி உற்றது ஒர் வெற்றியினாய்!' எனச்
சொற்ற சொல் துறைக்கு உற்றது, சொல்லுவான்: 114

வாலியின் கூற்றை இராமன் மறுத்தல்

'நலம் கொள் தேவரின் தோன்றி, நவை அறக்
கலங்கலா அற நல் நெறி காண்டலின்,
விலங்கு அலாமை விளங்கியது; ஆதலால்,
அலங்கலார்க்கு, ஈது அடுப்பது அன்று ஆம் அரோ. 115

'பொறியின் யாக்கையதோ? புலன் நோக்கிய
அறிவின் மேலது அன்றோ, அறத்தாறுதான்?
நெறியும் நீர்மையும் நேரிது உணர்ந்த நீ
பெறுதியோ, பிழை உற்றுறு பெற்றிதான்? 116

'மாடு பற்றி இடங்கர் வலித்திட,
கோடு பற்றிய கொற்றவற் கூயது ஓர்
பாடு பெற்ற உணர்வின் பயத்தினால்,
வீடு பெற்ற விலங்கும் விலங்கு அதோ? 117

'சிந்தை, நல் அறத்தின் வழிச் சேறலால்,
பைந் தொடித் திருவின் பரிவு ஆற்றுவான்,
வெந் தொழில் துறை வீடு பெற்று எய்திய
எந்தையும், எருவைக்கு அரசு அல்லனோ? 118

'நன்று, தீது, என்று இயல் தெரி நல் அறிவு
இன்றி வாழ்வது அன்றோ, விலங்கின் இயல்?
நின்ற நல் நெறி, நீ அறியா நெறி
ஒன்றும் இன்மை, உன் வாய்மை உணர்த்துமால். 119

'தக்க இன்ன, தகாதன இன்ன, என்று
ஒக்க உன்னலர் ஆயின், உயர்ந்துள
மக்களும், விலங்கே; மனுவின் நெறி
புக்கவேல், அவ் விலங்கும் புத்தேளிரே. 120

'காலன் ஆற்றல் கடிந்த கணிச்சியான்-
பாலின் ஆற்றிய பத்தி பயத்தலால்,
மாலினால் தரு வன் பெரும் பூதங்கள்
நாலின் ஆற்றலும் ஆற்றுழி நண்ணினாய். 121

'மேவ அருந் தருமத் துறை மேவினார்,
ஏவரும், பவத்தால் இழிந்தோர்களும்;
தா அருந் தவரும், பல தன்மை சால்
தேவரும், உளர், தீமை திருத்தினார். 122

'இனையது ஆதலின், எக் குலத்து யாவர்க்கும்,
வினையினால் வரும், மேன்மையும் கீழ்மையும்;
அனைய தன்மை அறிந்தும், அழித்தனை,
மனையின் மாட்சி' என்றான், மனு நீதியான். 123

'மறைந்து நின்று எய்வது முறையோ?' என வாலி வினவ, இலக்குவன் விடை பகர்தல்

அவ் உரை அமையக் கேட்ட அரி குலத்து அரசும், 'மாண்ட
செவ்வியோய்! அனையது ஆக! செருக் களத்து உருத்து எய்யாதே,
வெவ்விய புளிஞர் என்ன, விலங்கியே மறைந்து, வில்லால்
எவ்வியது என்னை?' என்றான்; இலக்குவன் இயம்பலுற்றான்: 124

'முன்பு, நின் தம்பி வந்து சரண் புக, "முறை இலோயைத்
தென் புலத்து உய்ப்பென்" என்று செப்பினன்; செருவில், நீயும்,
அன்பினை உயிருக்கு ஆகி, "அடைக்கலம் யானும்" என்றி
என்பது கருதி, அண்ணல், மறைந்து நின்று எய்தது' என்றான். 125

ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum